பாதுகாப்பு படையில் பெண் அதிகாரி!
மத்திய பிரதேசம், தேக்கன்பூரில் உள்ள, பி.எஸ்.எப்., அகடமி பள்ளியில், பயிற்சி முடித்தோருக்கு பட்டயம் வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது.பட்டயம் பெற்ற, 67 அதிகாரிகளில், ஒருவர் மட்டும் பெண்; கடந்த, 51 ஆண்டுகளில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில், முதன்முதலாக, களத்தில் இறங்கும், காமாண்டோ படை பிரிவின் அதிகாரியான இவர் பெயர், தனுஸ்ரீ பரீக். வயது; 25.நீர், நிலம் மற்றும் வான் வழியான எதிரிகளின் தாக்குதலில் இருந்து, நம்மை, 24 மணி நேரமும் பாதுகாப்பவர்களே, எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள். நாட்டில் மொத்தமுள்ள, 76 எல்லைப் பாதுகாப்பு முகாம்களில், 73 இடங்களில், களத்தில் நேரடியாக நிற்பவர்களும் இவர்களே!கடந்த, 1965ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும், பி.எஸ்.எப்., பிரிவில் தற்போது, இரண்டரை லட்சம் பேர் எல்லையை பாதுகாக்கும், புனிதப் பணியில் ஈடுபட்டுள்ளனர்; இவர்களில், பெண்கள் இருந்தாலும், அலுவலகப் பணி மற்றும் உதவியாளர் பணிகளில் தான், அவர்கள் இருக்கின்றனர்.துப்பாக்கியைத் தூக்கியபடி, களத்தில் இறங்குவதுடன், தன் படையினரை ஆணையிட்டு, வழி நடத்திச் செல்லும், அதிரடி அதிகாரியாக, இதுவரை, எந்த பெண்ணும் இருந்தது இல்லை. அப்பெருமையை, முதன் முறையாக பெற்றிருக்கிறார், தனுஸ்ரீ பரீக்.ராஜஸ்தான் மாநிலம், பிகானீர் என்ற ஊரைச் சேர்ந்தவரான இவர், 2014ம் ஆண்டு நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார். பின், 52 வாரங்களாக வழங்கப்பட்ட கடுமையான பயிற்சி மற்றும் சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில், அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கான முதல் போஸ்டிங்கே, பஞ்சாபில் உள்ள இந்திய - பாக்., எல்லைப் பகுதி தான்.தனுஸ்ரீக்கான பட்டயத்தை தோளில் அணிவித்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'உன் தோளில், நீ சுமப்பது, எல்லைப் பாதுகாப்புப் படை பிரிவின் பெருமையை மட்டுமல்ல, பெண்ணினத்தின் பெருமையும் சேர்த்துத் தான்...' என்றார்.அதை நிரூபிக்கும் வகையில், விழா முடிந்ததும், கூடியிருந்த தனுஸ்ரீயின் தோழியர், அவர் திணறத் திணற, மாலைகள் அணிவித்து, கொண்டாடி மகிழ்ந்தனர்.- எல்.தமிழ்செல்வி