அப்துல் கலாமும் ஜெனரல் மானக்ஷாவும்!
டாக்டர் அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தபோது, ஒருமுறை குன்னுாருக்கு வந்தார். அங்குள்ள ராணுவ மருத்துவமனையில், பீல்ட் மார்ஷல் ஜெனரல் மானக்ஷா அனுமதிக்கப் பட்டுள்ளது, அவருக்கு தெரியவந்தது. மானக்ஷாவை சந்திப்பது, நிகழ்ச்சி நிரலில் இல்லை. ஆனால், அவரது உடல் நலம் விசாரிக்க விரும்பி, அவரை சென்று பார்த்து, 15 நிமிடம் பேசினார், அப்துல்கலாம். கிளம்பும் முன் அவரிடம், 'சவுகர்யமாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு ஏதாவது நான் செய்யணுமா? உங்களுக்கு குறைகள் இருந்தால் சொல்லலாம் அல்லது மேலும் ஏதாவது தேவைப்படுகிறதா?'- எனக்கேட்டார், கலாம். 'ஆமாம், எனக்கு ஒரு குறை. நான் விரும்பும் என் நாட்டின் மதிப்புமிக்க ஜனாதிபதியை எழுந்து நின்று வரவேற்று, 'சல்யூட்' அடிக்க முடியலியே என்பது தான்...' என்றார், மானக்ஷா. இது, இருவரையுமே உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்ணீர் கூட பளிச்சிட்டது. மேலும், 'எனக்கு 20 ஆண்டுகளாக பீல்ட் மார்ஷல் ரேங்குக்காக தரவேண்டிய பென்ஷன் வழங்கப்படவில்லை...' என, கலாமிடம் கூறினார், மானக்ஷா. குன்னுார் நிகழ்ச்சிகளை முடித்து, டில்லி திரும்பினார், அப்துல்கலாம். மானக்ஷா பென்ஷன் பற்றி உடனே நடவடிக்கை எடுத்து, ராணுவ செயலர் மூலம், 1.25 கோடி ரூபாய்க்கான, காசோலையை விசேஷ விமானம் முலம், குன்னுாருக்கு அனுப்பி வைத்தார். இது, கலாமின் பெருந்தன்மையை காட்டியது. ஆனால், விஷயம் முடியவில்லை. இதனிடையே மானக்ஷா உடல்நிலை மோசமடைந்தது. அந்த நிலையிலும் தனக்கு வந்த காசோலையை அப்படியே, ராணுவ வீரர்களின் நிவாரண நிதிக்கு தந்துவிட்டார், மானக்ஷா.