உள்ளூர் செய்திகள்

ஆச்சி மனோரமா! (14)

அகங்காரம், ஆணவம், நியாயமற்ற செயல், மனித நேயமற்ற நடத்தை போன்ற இன்னபிற குற்றச் செயல்களை கொண்டிருந்தால், அவர்களால் நிச்சயமாக வெற்றிப் பாதையில் பயணிக்கவே முடியாது.இது, திரை உலகத்திற்கு மட்டுமல்ல, அனைத்து தொழிலுக்குமே பொருந்தும்.கதாநாயகி நடிகையர் சிலர், உடன் நடிக்கும் துணை நடிகையரை, அலட்சியமாக பார்க்கும் போக்கு அப்போது காணப்பட்டது. மேலும், நகைச்சுவை நடிகை என்றால், அவர்களை துச்சமாகவே மதித்தனர். இதுதான் மனோரமாவிற்கு வருத்தம் தந்தது.இதற்கு, அவர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்...படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில், வழக்கம்போல சாதாரண நகைச்சுவை பாத்திரத்தில் நடித்தார், மனோரமா. அந்த பாத்திரத்திற்கு ஏற்றார் போல் நிறைய நகைகளை அணிந்து, தலை நிறைய பூவையும் சூடியிருந்தார்.மனோரமாவின் பணக்காரத்தனமான அலங்காரம், அந்த கதாநாயகி நடிகைக்கு ஆத்திரத்தை கொடுத்தது.தயாரிப்பாளரை அழைத்த அவர், 'இந்த படத்தில் நான் தானே ஹீரோயின்... அப்படியிருக்கையில் மனோரமா இப்படி அலங்கரித்து வந்து நின்னா எப்படி...' என்று சத்தம் போட்டார்.அதற்கு தயாரிப்பாளர், 'படத்தில் அவங்க ரோல் அப்படிம்மா...' என்றார்.'அதெல்லாம் எனக்கு தெரியாது... அவங்க அணிஞ்சிருக்கிற நகைகளை கழற்றச் சொல்லுங்க; தலையில் உள்ள பூவையும் எடுத்திருங்க; அப்படி செஞ்சாதான் நடிப்பேன். இல்லேன்னா சாரி...' என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்ற கணக்கில் சொல்லி விட்டார், அந்த நடிகை.இதைக் கேட்டதும், மனோரமா உட்பட படப்பிடிப்பில் இருந்த அனைவருமே திகைத்துப் போயினர்.'கேரக்டருக்கு ஏற்ற மாதிரி தானே அலங்காரம் செய்திருக்காங்க; அதையே சகித்துக் கொள்ள முடியாம இந்த நடிகை கத்துதே...' என்று அனைவரும் எரிச்சலடைந்தனர்.நொந்து போனார், தாயாரிப்பாளர். ஆனாலும், தன் பணத்திற்கு வேட்டு விழுந்து விடக் கூடாதே என்று, மனோரமா அருகே வந்து, 'தப்பா நெனச்சுக்காதீங்க...' என்று இழுத்தார்.அந்த கதாநாயகி மீது கோபம் கொப்பளித்தாலும், தயாரிப்பாளரை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. உடனே, கழுத்திலிருந்த நகைகளையும், தலையில் சூடியிருந்த பூவையும் அகற்றினார்.அப்புறம்தான் படப்பிடிப்பு சுமூகமாக நடந்தது; அந்த கதாநாயகியும் தொடர்ந்து நடித்தார்.இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகள் மனோரமாவின் வாழ்வில் நிறைய நடந்துள்ளன.வாழ்க்கையில் ஒரு பெண் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்க கூடாதோ அவை அனைத்தையும் அனுபவித்தார், மனோரமா.சாப்பாட்டிற்கே இல்லாமல் அரை வயிறும், கால் வயிறுமாக பட்டினி கிடந்தவர் என்பதால், வாழ்நாள் முழுவதும், மற்றவர்களின் கஷ்டங்களை புரிந்து, அதற்கேற்ப நடப்பதை தன் குறிக்கோளாக கொண்டிருந்தார்.பழம்பெரும் வில்லன் நடிகர், டி.கே.ராமச்சந்திரன் புகழின் உச்சத்தில் இருந்தபோது, மனோரமாவிடம், சொல்லிய ஒன்று கடைசி வரை அவர் நினைவில் ஆழமாக பதிந்து நின்றது.'பணத்தை எண்ணாதே; படத்தை எண்ணு...' என்பது தான் அவரது அறிவுரை!இதை, தன் மகன் பூபதியிடமும், மற்றவர்களிடமும் அடிக்கடி கூறுவார், மனோரமா. ஏனென்றால், அந்த வார்த்தை, சத்ய வார்த்தை!ஆயிரத்து ஐநுாறு படங்களுக்கு மேலாக நடித்த மனோரமா, கடைசி வரை எந்த தயாரிப்பாளரையும் கசக்கி பிழிந்ததோ, அவர்கள் மனம் வருந்துகிற மாதிரி நடந்தது கிடையாது.'தன்னை போலவே பிறரையும் நேசி' என்ற சித்தாந்தத்தில் மிகுந்த நம்பிக்கை உடையவர் மனோரமா.தனக்கு தயாரிப்பாளர் தர வேண்டிய பாக்கி பணத்திற்காக, அவர் நோட்டீஸ் அனுப்பியதோ, கறாராக சம்பளத்தை கேட்டு வாங்கியதோ கிடையாது.அன்றைய காலத்து, நடிகர் நடிகையரிடம், நடிப்பில் ஒருவருக்கொருவர் கடும் போட்டி இருக்கும்; யார் சிறப்பாக நடிக்கிறார் என்று பார்த்துவிட வேண்டும் என்ற போட்டி காணப்படும்; அதற்காக உயிரை கொடுத்து நடிப்பர்.அப்படியும் படம் வெளியாகி, அவரது நடிப்பை பற்றி, 'ஓஹோ' என்று விமர்சனம் எழவில்லை என்றால் ரொம்பவே வேதனை அடைவர்.அடுத்த படத்திலாவது அனைவரும் போற்றி புகழ்கிற வகையில் நடிக்க வேண்டும் என்ற உறுதியை எடுப்பது வழக்கம். 'புதிதாக சினிமாத் துறைக்கு வந்த சிறிய பையன் கூட, நாளை பெரிய ஆளாக வரலாம்; எனவே, யாருடனும் பகையை வளர்த்துக்க கூடாது. அனைவருடன் நட்போடும், பாசத்தோடும் பழக வேண்டும். அப்போதுதான் நல்ல பெயர் கிடைப்பதுடன், திரை உலகில் நீடித்திருக்க முடியும் என்பதுதான் நான் கற்ற பாடம்...' என்பார் மனோரமா.தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை; ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணநலனை கொண்டிருப்பர். அவர்களும் மனிதர்கள் தானே!படத்தில் நடிப்பதற்கு முதலில் சம்பளத்தை பேசுவர்; முன்பணமாக சிறிது கொடுக்கவும் செய்வர். ஆனால், அப்புறம் வெயில், மழை பாராமல் கஷ்டப்பட்டு நடித்து முடித்த பின், அவர்களிடமிருந்து பேசிய பணத்தை பெறுவது எளிதானதில்லை.ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும்தான் பேசிய பணத்தை சரியாக கொடுப்பர்; ஆனால், அப்படிப்பட்ட நல்லவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.சில தயாரிப்பாளர்கள், 'இந்த படத்தில் ரொம்ப நஷ்டமா போச்சு... மன்னிச்சுக்கங்க... அடுத்த படத்தில் சேர்த்து தந்துடறேன்...' என்று சொல்லி, கையை விரித்து விடுவர்.அது அவ்வளவுதான்; நெற்றியில் அழுத்தமாக பட்டை நாமம் பூசி விட்டதை புரிந்து கொள்ள வேண்டும்.இதில் வேறொரு ரகமும் உண்டு; படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த பின், தயாரிப்பாளர் எங்கே இருக்கிறார் என்று பூதக்கண்ணாடி வைத்து தேட வேண்டும். எங்கோ கண் காணாத இடத்திற்கு சென்று விடுவார். அவரை கண்டுபிடிப்பதே குதிரைக் கொம்பாகி விடும். அப்புறம் அவரிடம் எங்கே ஊதியத்தை வாங்க!— தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.www.shankar_pathippagam@yahoo.com- குன்றில் குமார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !