ஆச்சி மனோரமா! (31)
பி.ஆர்.பந்துலுவின் மகன் இயக்கிய படத்தில், அவர் சொல்லிக் கொடுத்த வசனங்கள் மிகவும் இரட்டை அர்த்தம் நிறைந்ததாக இருந்தது. இருப்பினும், முடிந்த அளவிற்கு அதை வடிகட்டி, அதிகமாக இரட்டை அர்த்தங்கள் தொனிக்காத வகையில் பேசினார், மனோரமா.எப்படி, இந்த படத்தில் நடிக்க அவர் சம்மதித்தார் என்று, அவருக்கே தெரியவில்லை. ஏதோ ஒரு துரதிர்ஷ்டம் தான் அது. யோசிக்காமல் நடிக்க சம்மதித்து, நடித்தும் விட்டார்; படமும் வெளியானது.பத்திரிகைகளில் விமர்சனமும் வந்தது. அத்தனை விமர்சனங்களிலும் மனோரமாவின் இரட்டை அர்த்த வசனத்தை பற்றியே அதிகம் எழுதப்பட்டிருந்தது.'ஆயிரம் படங்களில் நடித்துவிட்ட மனோரமாவுக்கு, இவ்வளவு மோசமான கேரக்டரில் நடித்து சம்பாதிக்கிற அளவிற்கு அப்படியென்ன பொருளாதார நிர்பந்தம் வந்துவிட்டது...' என்று உரிமையோடும், கிண்டலாகவும் எழுதினர்.தர்மசங்கடமான சூழல் மனோரமாவுக்கு ஏற்பட்டது.பத்திரிகையாளர்களை கண்டு, எப்போதுமே ஓடி ஒளிந்தது கிடையாது என்றாலும், அன்றைய சூழல், அவரை அப்படி செய்யத் துாண்டியது.'கிசுகிசு'க்களை பற்றி எப்போதுமே பிரபலமானவர்களுக்கு ஓர் அச்சம் இருக்கத் தான் செய்யும்.ஒருமுறை, நடிகர் தேங்காய் சீனிவாசனையும், மனோரமாவையும் இணைத்து, ஒரு பத்திரிகையில் தொடர்ந்து, 'கிசுகிசு'க்கள் வெளியானது.ஒருநாள் படப்பிடிப்பு ஒன்றின்போது, இத்தகைய, 'கிசுகிசு'வை மனோரமா படிக்க நேர்ந்தது... 'எப்படியெல்லாம் பொய்யை நேரில் பார்த்த மாதிரி அளந்து, அடுத்தவர்கள் மனதை புண் படுத்துகின்றனரே...' என்ற கவலையில் கண்ணில் நீர் கோர்த்தது; 'மூட் - அவுட்' ஆனார்.அதன்பின் தொடர்ந்து நடிக்க முடியாமல் அழுதவாறே இருந்தார், மனோரமா.அது, எம்.ஜி.ஆர்., நடிக்கும் படம் என்பதால், அவரும் படப்பிடிப்புக்கு வந்திருந்தார். அப்போது, மனோரமா மிகுந்த வருத்தத்துடன், கண்களை கசக்கிக் கொண்டே இருப்பதைக் கவனித்தார்.மனோரமா அருகே வந்த, எம்.ஜி.ஆர்., 'ஏன் சோகமா இருக்கீங்க... என்ன விஷயம்?' என்று கேட்டார்.அதுவரை தேம்பிக் கொண்டிருந்த மனோரமா, இப்போது சத்தமாக அழுதார். அந்த பத்திரிகையில் வந்துள்ள தவறான தகவலைக் காட்டி, 'எப்படியெல்லாம் என்னை பத்தி மோசமா எழுதியிருக்கிறாங்க...' என்றார்.அதற்கு, எம்.ஜி.ஆர்., 'நானும் ஏற்கனவே இதப் படிச்சேன். இந்த, 'பீல்டில்' இதெல்லாம் சகஜம். கன்னாபின்னான்னு எழுதுவாங்க. அதையெல்லாம் நாம பெரிசா எடுத்துக்கக் கூடாது. அப்படி பெரிசா எடுத்திட்டு அழுதிட்டு இருந்தா, நம்ம தொழில சிறப்பா செய்ய முடியாது. கண்ணை துடைச்சிட்டு தொடர்ந்து நடிக்க வாங்க...' என்று நம்பிக்கையூட்டினார்.இதையடுத்து மனோரமாவும், கவலை மறந்து, தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.ஆனால், இதற்கிடையே, எம்.ஜி.ஆர்., யாரும் அறியாமல், அந்த பத்திரிகையாளரை படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்தார். 'மேக் - அப்' அறையில் அவரை, 'உண்டு, இல்லை' என்று பண்ணி விட்டார்.வீரத்திருமகன் என்றொரு படம். அதிலும், மனோரமாவுக்கு காமெடி வேடம். வழக்கம் போல் அவர்கள் ஏற்கனவே தெரிவித்ததை போல படப்பிடிப்பிற்கு, 'மேக் - அப்' போட்டு சென்றார், மனோரமா.ஆனால், அங்கே யாருமே இல்லை. வெறிச்சோடி கிடந்தது. குழப்பமாகி, என்ன செய்வது என்று தெரியவில்லை.இந்நேரத்தில் படத் தயாரிப்பாளர், ஏவி.எம்.சரவணனும் அங்கே வந்திருக்கிறார். 'மேக் - அப்' போட்டு ஷூட்டிங்கிற்கு தயாராக மனோரமா வந்திருந்ததை பார்த்ததும், 'இன்னிக்கு, 'ஷூட்டிங் கேன்சல்' பண்ணியாச்சே... உங்களுக்கு யாரும் தகவல் சொல்லலையா...' என்று கேட்டார்.'தெரியாதே...' என்று மனோரமா கூறியதும், ஏவி.எம்.சரவணனுக்கு கடுமையான கோபம் வந்தது, விருட்டென்று தன் அறைக்குள் சென்றார்.இதைப் பார்த்த மனோரமாவுக்கு பயம் வந்துவிட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட விவரத்தை தன்னிடம் தெரிவிக்க, 'புரொடக் ஷன் மேனேஜர்' மறந்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார்.ஆனால், இப்போது கோபத்தோடு இருக்கும் சரவணன், நிச்சயமாக, 'புரொடக் ஷன் மேனேஜரை' வறுத்தெடுக்கப் போகிறார் என்பது தெரிந்ததும், தன்னால் ஒரு மனிதர் நெருக்கடிக்கு ஆளாகக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில், ஏவி.எம்.சரவணன் அறைக்குள் நுழைந்தார், மனோரமா.'ஏதோ தெரியாம அந்த, 'புரொடக் ஷன் மேனேஜர்' செஞ்சிட்டாரு. இதுபோல ஒரு தவறை அவர் இதுவரை செஞ்சதே கிடையாது. எப்பவும் சரியா தகவல் கொடுத்திடுவாரு. நீங்க அவரு மேல நடவடிக்கை எதுவும் எடுத்திராதீங்க.'அப்படி ஏதாச்சும் நடந்தா, அதுக்கு காரணம் நான் தான்னு எம்மனசு பரிதவிக்கும். 'ப்ளீஸ்' சார்...' என்றார், மனோரமா.ஒரு தெலுங்கு படப்பிடிப்பு. ஏற்கனவே கூறியிருந்த காட்சிக்கு ஏற்ப இரண்டு மணி நேரமாக போராடி கலர்புல்லாக, 'மேக் - அப்' போட்டு, அத்தனை பேரின் பார்வையையும் கவர்ந்திழுக்கிற மாதிரி தடபுடலாக, 'ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு' வந்தார், மனோரமா. நேராக இயக்குனரை பார்த்து, 'வணக்கம்' போட்டார்.மனோரமாவுக்கு பதில் வணக்கம் சொன்ன இயக்குனர், 'இன்னிக்கு, 'சீன்' மாத்தியாச்சு. 'ப்ளாஷ்பேக் சீன்' எடுக்கறதா முடிவு செஞ்சுட்டோம். அதனால, இந்த, 'மேக் - அப்' சரிப்பட்டு வராது. இத கலைச்சுட்டு, கொஞ்சம் வயசான மாதிரி, 'மேக் - அப்' போட்டுகிட்டு சீக்கிரமா வந்திருங்க...' என்று சாதாரணமாக சொன்னார்.வேறு நடிகையாக இருந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்... அந்த படப்பிடிப்பு தளமே இரண்டுபட்டு போயிருக்கும்.ஆனால், மனோரமா, தன் கோபத்தை ஒரு மில்லி மீட்டர் அளவு கூட வெளிக்காட்டாமல், 'ஓகே!' என்று சொல்லி, 'மேக் - அப்' அறைக்குள் நுழைந்து விட்டார்.பொறுமையின் சிகரமாக இருந்ததால் தான் அவரால், ஆயிரம் படங்களுக்கு மேல் நடிக்க முடிந்தது.திறமைமிக்க நல்ல நடிகை என்ற பெயரை மனோரமாவுக்கு வாங்கி கொடுத்தவர் யாரென்றால் நிச்சயமாக அவர், இயக்குனர், ஏ.பி.நாகராஜன் தான்.கண்காட்சி என்றொரு படத்தை, அவர் இயக்கினார். அந்த படத்தில் ஒன்பது பாத்திரங்களில் நடிக்க, மனோரமாவுக்கு வாய்ப்பளித்தார். ஒரு கேரக்டரில் நடிப்பதே பெரும்பாடு என்று மனோரமா யோசித்தபோது, 'உன் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. தைரியமா செய்...' என்று நம்பிக்கையை ஊட்டினார், ஏ.பி.என்.,ஆங்கிலோ - இந்திய பெண், வாய் பேச முடியாதவர் என்று அதில் வரும் ஒன்பது கதாபாத்திரங்களும், மனோரமாவுக்கு மிகச் சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிக் கொடுத்தது.ஏ.பி.நாகராஜன் அளித்த நம்பிக்கையை, வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நினைவில் வைத்திருந்தார், மனோரமா. அதேபோல், இயக்குனர் சிகரம், கே.பாலசந்தரும் அவர் நினைவில் என்றென்றும் மறக்காமல் இருந்தார். பாலசந்தர் எழுதிய, 'நவக்கிரகம்' என்னும் நாடகத்தில், கதாநாயகியாக நடித்தார், மனோரமா. அவருக்கு ஜோடி ஸ்ரீகாந்த்.சென்னை அண்ணாமலை மன்றத்தில், நாடகம் முதன் முறையாக அரங்கேறியது.— தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.www.shankar_pathippagam@yahoo.comகுன்றில் குமார்