அந்துமணி கேள்வி - பதில்
*கே.ராமசாமி, மருதூர்: அனுதாபத்திற்கு உரியவர்களாக யாரை கருதுகிறீர்கள்?அரசியல்வாதிகளைத்தான்! பதவியை விட்டு இறங்கிய பின்தான் அவர்களுக்கு எத்தனை விதமான அவமதிப்புகள்... நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்! ***** எஸ்.ராஜலட்சுமி, பண்ருட்டி: சாகும் வரை மனிதன் விட்டுச் செல்வது எதை?கடனை! வாங்கிய கடனை விட்டு விட்டு சென்று விடுகிறான். மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவர்களாக மறைந்தவர்களை கருத வேண்டுமென்றால், கடன் இல்லாமல் கண்மூடி இருக்க வேண்டும்! ****ஏ.குருசாமி, திருக்கோவிலூர்: வரதட்சணைக் கொடுமையால் சிக்கித் தவிக்கும் நம் நாடு, எப்போது இக்கொடுமையிலிருந்துவிடுதலை பெறும்? பெண்ணுக்கு பெண்ணே எதிரி! பணப்பேய் பிடித்து ஆட்டும், மாமியார்களின் ஆசை வெறி ஓயும் போது தான் விடிவு வரும். ஆனால், 'பேய்' ஓடி விடும் என்று நினைக்கிறீர்களா என்ன? சட்டப் பூசாரியாலேயே ஓட்ட முடியவில்லையே!****என்.ஜீவானந்தம், பாலப்பட்டி: உங்களுக்கு யாராவது, 'ரக்ஷா பந்தன்' கட்டியது உண்டா?ஒரு ஓவியரின் மகள், நல்ல நீச்சல் வீராங்கனை. என் எழுத்தின் ரசிகை - அடிக்கடி அலுவலகம் வந்து, என்னுடன் பேசிக் கொண்டிருப்பார். லென்ஸ் மாமாவுக்கு இதில் எரிச்சல்! எப்போதும் காய்ந்து கொண்டிருப்பார். 'ரக்ஷா பந்தன்' அன்று என் கையில், 'ராக்கி' கட்டினார் அந்தத் தோழி. இப்போ சந்தோஷம் லென்ஸ் மாமாவுக்கு! ****பி.ரவிச்சந்திரன், பொள்ளாச்சி: நான் விரும்பிய பெண் தற்போது விதவை... அதிலும் ஒரு குழந்தையுடன்... நான் என்ன செய்வது?நீர் விரும்பிய அந்தப் பெண்ணின் விருப்பம் என்னவென்பதை அறிந்து கொண்டீரா? அவர், 'ஓ.கே.,' சொன்னால், 'டும்... டும்...' ஏற்பாடு செய்ய வேண்டியது தானே! ***** ஜெயந்தி ராஜகுமார், திண்டுக்கல்: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களிடம் பழகுவது, எனக்கு மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?ஆணும், பெண்ணும் நட்பு முறையில் பழகுவது கண்டு எந்த விதத்திலும் பயம் கொள்ள தேவையில்லை. வயது வந்த மகனை, மகளை தோழனாக, தோழியாக கருத வேண்டுமே தவிர, அவர்கள் அரை டவுசரும், கவுனும் அணிந்து கொண்ட அந்த நாளை இன்னும் மனதில் கொண்டு, சிறு பிள்ளைகள் போல், 'ட்ரீட்' செய்வது தவறான பாதையில் அவர்கள் செல்லவே வழி வகுக்கும். உங்கள் மகளை தோழியாக பாவித்து, அவளது சுதந்திரத்தை நல்வழியில் எப்படி எப்படி எல்லாம் பயன்படுத்தினால் நன்மை பயக்கும் என்பதை எடுத்துக் கூறுங்கள். சுதந்திரத்தை தவறான வழியில் பயன்படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்துக் கூறுங்கள் போதும்! ***** எல்.விஸ்வேஸ்வரன், நெசப்பாக்கம்: தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மனிதனைப் பற்றி உம்முடைய கருத்து என்ன?'ஓவர் கான்பிடன்சால்' வரும் குறைபாடு இது. உண்மையாகவே தன்னிடம் இல்லாத தகுதிகளை இருப்பதாக நினைத்துக் கொள்வர்; தன்னால், அது முடியும், இது முடியும் என மற்றவர்களிடம் தம்பட்டம் அடித்துக் கொள்வர். ஆனால், உண்மையில், அவர்களால் ஒன்றுமே முடியாது! இது ஒரு மனக்குறைபாடு; தம்மிடமுள்ள, 'இன்பீரியாரிட்டி காம்ப்ளக்சை' மறைக்கப் போட்டுக் கொள்ளும், 'ஓவர் கோட்' தான் இது! தகுந்த நேரத்தில் இக்குறைப்பாட்டை அவர்கள் களையவில்லை எனில், ஊராரின் கேலிச் சிரிப்புக்கு ஆளாக நேரிடும்! ***