அந்துமணி பதில்கள்!
*ஜி.ஹரி, எண்ணூர்: டீன்-ஏஜ் பெண்களுக்கு, செக்சை விளக்கி கூறுவதால், அவர்கள் தற்காத்து கொள்வார்களா அல்லது தவறான பாதைக்கு நாமே வழி காட்டியதாகி விடுமா?தவறான பாதைக்கு நிச்சயம் வழி காட்டாது; நல்வழிப்படுத்தவும், தற்காத்துக் கொள்ளவும் உதவும். செக்சை இலைமறை காயாக விளக்க வேண்டிய சரியான பருவம் இதுவே!***** எம்.பாஸ்கரன், கோட்டூர்: சொந்தக் காலில் நிற்க பழகிக் கொண்டிருக்கும் நம் பெண்களிடம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா, குறைந்து வருகிறதா?குறைந்து வருகிறது என்றே பலரும் நினைக்கின்றனர்; இது தவறு. நம் சமூக கட்டமைப்பில் குழந்தைகள், பெற்றோரிடமோ; வாலிப வயதினர், பெரியவர்களிடமோ; மாணவர்கள், ஆசிரியரிடமோ கேள்வி கேட்கக் கூடாது என்ற அவல நிலை இருந்து வருகிறது. கேள்வி கேட்டால், 'எதிர்த்து பேசுகிறாள் - திமிர் வந்து விட்டது...' என்று பொருள் கொள்கின்றனர். சம்பாதிக்கும் பெண், நியாயமானதற்கு விட்டுக் கொடுக்கிறாள்; நியாயமற்றது குறித்து கேள்வி கேட்கும் போது, விட்டுக் கொடுக்க மறுக்கிறாள்... சம்பாதிக்கும் திமிர் போன்ற பட்டங்கள் சூட்டப்படுகிறாள்.****வி.ரமேஷ், திண்டுக்கல்: பொறாமைப்படாமல் வாழ முடியுமா?முடியுமே... ஆனால், ஆசைப்படாமல் வாழ முடியாது! அப்படி வாழ்பவன், துறவியாகி விடுகிறான்.****எஸ்.நாகலட்சுமி, கோவை: திருமணம் செய்து கொள்ள போகிறேன். கணவரிடம், கண்டிப்பாக இருப்பது நல்லதா? அடங்கி நடப்பது நல்லதா?இரண்டாவதை தேர்வு செய்ய வேண்டாம்; முதலாவது ஒத்து வராது. சமத்துவம் பாராட்டி, அன்பு செலுத்தி குடும்பம் நடத்துங்கள். தெளிந்த நீரோடை ஆகும் இல்வாழ்க்கை!****கே.ஜோதி முருகன், பள்ளிக்கரணை: செய்யும் வேலையில் கடமை தவறாமல் பணியாற்றுபவர்கள், எந்தத் துறையில் இப்போது அதிகம்?எந்தெந்த துறையில் தினமும் மாமூல் மற்றும், 'கவனிப்புகள்' கிடைக் கிறதோ, அங்கெல்லாம் சுறுசுறுப்பாக, கடமை தவறாமல் வேலை நடக்கிறது.***** பி.நரசிம்மன், வேளச்சேரி: வாழ்வை சிறப்பாக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?ஆடம்பரத்தை மூட்டை கட்டி வைக்க வேண்டும்; சிக்கனத்தை கடைப்பிடிக்க பழகிக் கொள்ள வேண்டும்!**** சே.சுப்பிரமணியன், போரூர்: எதிர் காலத்தில் சவுகரியமாக, சந்தோஷமாக வாழப் போகிறவர்கள் யார்?அடுத்தவன் நம்மை மதிக்க வேண்டும்; உயர்வாக நினைக்க வேண்டும் என்பதற்காக, ஆடம்பர செலவு செய்யாமல், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எல்லாரும் சந்தோஷமாக, சவுகரியமாக இருப்பர். செலவை குறைத்துக் கொள்ள முடியாமல், கடன் வாங்கி செலவு செய்பவர்களின் வாழ்க்கை, தற்கொலையில் தான் முடியும்!***