உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

*த.அருள்ஜோதி, புதூர் : பி.எஸ்.சி., பட்டதாரி நான். வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிந்துள்ளேன். டிகிரி முடித்து, மூன்றாண்டாகியும் வேலை கிடைக்கவில்லை. வாழ்வில் முன்னேற துடிக்கிறேன்...உங்களை நீங்களே நம்ப துவங்குங்கள்... வேலை வாய்ப்பு அலுவலகத்தையும், வேலைக்காக மற்றவர்களின் உதவியையும் எதிர்பார்த்தது போதும் என்ற முடிவுக்கு வாருங்கள்; தானாகவே முன்னேற்ற பாதை உங்கள் கண்களுக்குத் தெரியும்!***** டி.சத்தியநாதன், முகவூர் : 'படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை' எனச் சட்டம் கொண்டு வந்தால் என்ன ஆகும்?அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு, 'டெபாசிட்' காலியாகி விடும்!****வே.மாசானமுத்து, கரிசல்பட்டி : உங்கள் ஆலோசனைகளைப் படித்தபின், சிக்கனமாக இருக்கிறேன்; தாராள செலவை நிறுத்தி விட்டேன்! உடன் இருப்பவர்கள் என்னை, 'கஞ்சன்' என அழைக்க ஆரம்பித்து விட்டனரே...அழைத்தால் அழைத்து விட்டுப் போகட்டும்; அதனால், அஞ்சு காசு கூட நஷ்டமில்லை! வங்கியில் சேமிப்பும், பர்சில் பைசாவும் இல்லை எனில், இவர்கள் மதிக்கவும் மாட்டர்கள்; உதவவும் மாட்டார்கள்! கஞ்சனாகவே இருங்கள்!****வை.குணசேகரன், திருவிநாயகபுரம் : 'வாழத் தெரியாதவன் நீ' என, என் நண்பர்கள் என்னை குறை சொல்கின்றனரே...உங்களுக்காக உலகம் வளைந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருப்பதால், இப்படி கூறுகின்றனரோ!**** சி.கமலேஷ், தென்காசி : பட்டமும், பட்ட மேற்படிப்பும் படித்த இளைஞர்கள், வேலையின்றி, தன்னம்பிக்கை இழந்து, சோர்வாக எதிர்காலத்தை நினைத்து பயப்படும் இன்றைய நிலை பற்றி...தாம் படித்து விட்டோம் என்ற நினைப்பே, 'என் தகுதிக்கு ஏற்ற வேலை அல்ல இது' என கிடைக்கும் பல வேலைகளையும் உதறித் தள்ளத் தூண்டுகிறது! பட்டங்களைப் பெற்ற இவர்களுக்கு, உண்மையிலேயே பல விஷயங்களில் அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை. இதை, அவர்கள் சுயசோதனை மூலம் அறிந்து கொண்டால், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்!****ஜி.கரோலினா, முறையூர்: 'அன்லெட்டட் பெட்ரோல்' என்கின்றனரே... அப்படி என்றால் என்ன?அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், 1921ல், ஒருவகை ஈயத்தைக் கண்டுபிடித்து பெட்ரோலில் கலந்தார். இதனால், வாகனம் ஓட்டுவது எளிதானது. ஆனால், இந்த ஈயம் கலந்த பெட்ரோலால், சுற்றுச் சூழல் கெட்டு, மனித உடல் நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதால், ஈயம் கலக்காத பெட்ரோலை நம் நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தினர். அதையே, 'அன்லெட்டட் பெட்ரோல்' என்கின்றனர் ஆங்கிலத்தில்!****பி.செல்லத்துரை, திருச்சி : 'ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்' - 'பிரீலான்ஸர்' என்பதற்கு என்ன அர்த்தம்?இந்தப் பத்திரிகைக்குத் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லாத பத்திரிகையாளர்! எந்தப் பத்திரிகையிலும் மாதச் சம்பளம் வாங்காதவர்! எல்லா பத்திரிகைகளுக்கும் எழுதி சம்பாதிப்பவர்!***** வி.காந்திமதியம்மாள், பெரம்பலூர் : பல பொது இடங்களில் பச்சிளம் குழந்தைகள், கையில் தட்டு ஏந்தி, தர்மம் கேட்கின்றனரே... தர்மம் செய்யலாமா?அவர்களுக்கு பிச்சை போட்டால், அதர்மம் செய்தவராகி விடுவீர்கள்! சோம்பேறி பெற்று போட்டு பிச்சை எடுக்க விட்ட பிள்ளையை, அனுதாபத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்... சல்லிகாசு கூட பிச்சை இடக் கூடாது!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !