உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

பி.திவ்யபிரியா, மேலூர்: கறுப்பான பெண்ணை பெற்று வைத்திருக்கும் தாய்மார்கள், தங்களுக்கு வரும் மருமகள் மட்டும் சிவப்பாக இருக்க வேண்டும் என்று, மாநிறமுள்ள பெண்களை ஒதுக்கி விடுகின்றனரே...மறந்து விடுங்கள் அந்தத் தாய்மார்களை. கறுப்புத்தான் அழகு என்ற எண்ணம் நம் இளைஞர்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. மாநிறம், மற்றும் கறுப்பு நிறப் பெண்களையே இப்போது அதிகம் விரும்புகின் றனர்! கறுப்புக்கு போட்டியும், 'டிமாண்டு'ம் அதிகமாகப் போகி றது; கவலையை விடுங்கள்!வி.ராஜேஸ்வரி, கண்டமனுார்: என்னால், 'வெடுக்'கென பேசவோ, எரிந்து விழவோ, ஒரு பொருள் கேட்டால், இல்லையென சொல்லவோ, மனது வரமாட்டேன்கிறது. இதனால், 'இளிச்சவாய்... ஏமாந்தது' என்றெல்லாம் பட்டம். மேலும் மேலும் வேலை வாங்குவதோடு மட்டுமல்லாமல், கிண்டல் வேறு. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் அந்துமணியாரே... 'ஆகா... பரோபகாரி... எவ்வளவு இளகிய மனது... பேஷ்... பேஷ்...' போன்ற பாராட்டுதலை எதிர்பார்த்தா, பிறருக்கு உதவ ஆரம்பித்தீர்கள்? இல்லையே... உங்கள் நல்ல மனது, நல்லதைச் செய்யத் துாண்டுகிறது. அடுத்த வருக்கு கெடுதி நினைக்காத மனதை, 'இளிச்சவாய்... ஏமாந்தது' என்று சொன்னால், சொல்லி விட்டுப் போகட்டுமே... காதை மூடிக் கொண்டு விடுங்கள்!பெ.சுகுணா, திருவள்ளூர்: வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் கதைகளையே, வாரமலர் இதழில் வெளியிடுகிறீர்கள். பெரும்பாலும் பெரிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிடுவதில்லை. வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு குறைந்த சனமானம் வழங்கினால் போதும் என்ற காரணமா? வளர்ந்த எழுத்தாளர்களின் கதைகளை வெளியிடுவதன் மூலம், வாரமலர் சர்க்குலேஷன் அதிகரிக்க வாய்ப்புள்ளதே?அம்மணி உங்கள் அடிப்படை 'ஐடியா'வே தவறாக உள்ளது. வளர்ந்த எழுத்தாளர்கள் எத்தனையோ பத்திரிகைகளில் எழுதுகின்றனர். அந்த பத்திரிகை எல்லாம் பிச்சிகிட்டு போகுதா... இல்லையே! வளர்ந்த எழுத்தாளர்கள் எழுதும் தொடர்கதைக்கு, பிற இதழ்கள் கொடுக்கும், சன்மானத்தை விட, வளரும் எழுத்தாளருக்கு, 'வாரமலர்' இதழ் அதிகமாக அளிக்கிறது! புதிய எழுத்தாளர்களை, திறமை உள்ளவர்களை யார் தான் ஊக்குவிப்பதாம்?எஸ்.மாதவன், கோரிப்பாளையம்: ஏராளமான பொருட் செலவில் கல்யாணம், சொத்தில் சம பங்கீடு கொடுத்தும், தமிழ்நாட்டுப் பெண்கள் முகத்தில் புன்னகை இல்லையே...சொத்திலும், பணத்திலும், வேலையிலும் இல்லை ஐயா சந்தோஷம். அவர்களை பாடாய் படுத்த கூடவே, அப்பா, அண்ணன், தம்பி, மாமன், மச்சான், புருஷன் என்று பெரும் கூட்டமே இருக்கிறதே... எப்படி வரும் புன்னகை?அ. ஆறுமுகம், திருப்பூர்: அறுபது வயதிலும் இருபது வயது இளஞ்ஜோடிகளைப் போல் நடந்து கொள்ளும் தம்பதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?ஏதோ அவர்கள் தவறு செய்வது போல குற்றம் சாட்டும் தொனியில் இருக்கிறது உங்கள் கேள்வி. அறுபதில், மென்மையான எண்ணங்கள், அனுபவங்கள், உணர்வுகள் செத்து மடிந்தா போய் விடும்? அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல், அறுபதுகள், இளஞ்ஜோடிகள் போல நடந்து கொள்வதில் எந்தத் தவறும் தெரியவில்லை எனக்கு!ஆர்.ராஜகோபால், கோவை: பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு பெண் பார்க்கச் செல்வது நல்லதா? பெண்ணை முதலில் பார்த்துவிட்டு ஜாதகம் பார்ப்பது நல்லதா?தயவுசெய்து ஜாதகப் பேச்சை எடுக்காதீர்கள். இந்த ஜாதகம் என்ற காகிதம், எத்தனை பெண்களை இன்னும் கன்னியாகவே வைத்திருக்கிறது என்பதை அறிவீர்களா? ஓரம் கட்டுங்கள். ஜாதகத்தை. பொருத்தம், மனதில் இருக்கிறதா பாருங்கள். 'ஜாம் ஜாமெ'ன மேளம் கொட்ட ஏற்பாடு செய்யுங்கள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !