உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

என்.தெய்வானை, ஊரப்பாக்கம்: ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் அவசியமா?முப்பத்தைந்து - 45 வயதுள்ள திருமணமாகாத, 'ஸ்பின்ஸ்டர்'களை சந்தித்து பேசும் வாய்ப்புகள் நிறைய ஏற்பட்டு இருக்கின்றன. அவர்கள் வாய் விட்டு சொல்லாவிட்டாலும், உரிய வயதில் தகுந்த மணமகன் அமையாமல் போய் விட்டதே என்ற ஏக்கம், அவர்களுக்குள் இருப்பதை, அறிந்து கொள்ள முடிந்தது. இதே வயதுடைய ஆண்கள், தம் ஏக்கத்தை, வாய்விட்டே சொல்லி விடுகின்றனர். டி.தனராஜ், கடலூர்: நண்பன் வேலை தேடி சென்னைக்கு போகிறான்; அவனுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...நான்கு மாநிலங்களிலும் உள்ள ஏமாற்று பேர்வழிகள் ஒருங்கே சங்கமித்து, 'ஜெ ஜெ' என, பிழைப்பு நடத்தி வரும், 'மா'நகரம் சென்னை என்பதை மனதில் வைத்து, புறப்படச் சொல்லுங்கள்!ஜெ.செல்லப்பா, தாம்பரம்: எந்த சிறு சம்பவம் நடந்தாலும், விசாரணைக் கமிஷன் அமைத்து விடுகின்றனரே... இவை எத்தனை நாளில் விசாரணையை முடிக்க வேண்டும்? இதனால் என்ன பயன்?விசாரணைக் கமிஷன் என்றால், 'அல்வா' என்று, பொருள் கொள்ளுங்கள். கூக்குரலிடும் வாய்களுக்கு உடனே, 'பிளாஸ்திரி' போட, காலங்காலமாக கையாளப்பட்டு வரும் பம்மாத்தே, விசாரணைக் கமிஷன்! கமிஷனின் முடிவு, எப்போது வெளியாகும் என்பதெல்லாம், யாருக்குமே தெரியாது!அ.கல்யாணராமன், விருகம்பாக்கம்: சில சமயங்களில் நம்மை அறியாமலேயே, மற்றவர் மனதை, வார்த்தைகளால் புண்படுத்தி விடுகிறோம். இதற்கு என்ன தண்டனை?புண்படுத்தி விட்டதை உணர்ந்து, வருந்துவதே தண்டனைதான். இப்படிப்பட்ட மனம் இருக்கும் போது, புண்பட்டவரிடம், நேரடியாக மன்னிப்பு கோருவது, சிறந்த மருந்தாக அமையும்!ஆர்.பாலாஜி, பாதிரிகுப்பம்: லஞ்சம் வாங்குவது, எந்த நாட்டில் முதலில் ஆரம்பித்தது?இஸ்ரேலில் என்பது, சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 30 வெள்ளி காசுகளை, லஞ்சமாக வாங்கி, யூதாஸ் ஸ்காரியோத், இயேசுநாதரை காட்டிக் கொடுத்தானே... அதற்கும் முன், லஞ்சம் இருந்ததா என்று, எனக்குத் தெரியவில்லை!தி.சோமசுந்தரம், திருவான்மியூர்: அரைவேக்காட்டுத்தனமாக சிலர் ஆங்கிலம் பேசுவது பற்றி...ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்வது தவறில்லையே... ஆனால், ஆங்கிலத்தை கரைத்துக் குடித்தது போல நடிப்பது தான், அரை வேக்காட்டுத் தனமானது! வி.ஜெயம், திருப்பூர்: பிற பெண்களைப் பற்றி மனைவியிடம் வர்ணிக்கும் ஆண் வர்க்கத்தினரை திருத்துவது எப்படி?அழகை ரசிக்கும் மனப்பக்குவமும், முயற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே, வர்ணனை கலை கைவந்தது. வர்ணிக்கும்படி ஒருவர் இருந்தால், அவரை வர்ணிப்பதில், தவறு இருப்பதாக தெரியவில்லை. அந்த மனைவியும், இதே போல, வர்ணிக்கும்படி உள்ள ஆண்களை, தன் கணவனிடம் வர்ணிக்கலாம். விகல்பமில்லாமல் அழகை வர்ணிக்கும் திறனை, அந்த ஆடவன் (கணவன்) பெற்று இருப்பதால், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !