அந்துமணி பதில்கள்!
தி.ராமமூர்த்தி, மேலமாசிவீதி: வாழ்க்கை தரம் வசதியில் அமைவதா, பண்பால் வருவதா?எவ்வளவோ பண வசதி இருந்தும் கோமாளித்தனமாகத்தானே வாழ்வை பலர் அமைத்துக் கொண்டுள்ளனர்; மன நிம்மதி இல்லாமல் அல்லல்படுகின்றனர். பணவசதி இல்லாவிடினும், பண்பு என்ற சிறந்த குணம் இருப்பின், வாழ்க்கைத் தரம் சூப்பராக இருக்கும்!வி.சுந்தரமூர்த்தி, சாலிகிராமம்: எப்போதும் சிரித்த முகத்துடனும், சிரித்துக் கொண்டே இருக்கவும் விரும்புகிறேன்...வேண்டாம்; உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். சிரிக்க வேண்டிய இடங்களில் சிரியுங்கள்; மகிழ்ச்சியான நேரங்களில் சிரித்த முகத்துடன் இருங்கள். எப்போதும், சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், யாரிடமோ ஏமாந்து கொண்டிருக்கிறார் என்றோ, எப்போதும் சிரித்துக் கொண்டிருப்பவனை, யாரையோ ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்றோ இப்போதெல்லாம் எண்ணுகின்றனர்! ஜெ.கவிதா, மகாராஜபுரம்: அறிவின் முதிர்ச்சியை காட்டுவது தாடியா, அறிவு ஜீவிகளின் அடையாளம் தாடியா?இரண்டுமே இல்லை; டொக்கு கன்னம், வடுக்கள் நிறைந்த முகங்களின் உதவிக்கு வருவது தாடி! தினமும், 'ஷேவ்' செய்து கொள்ள சோம்பல் படுபவர்களின் சவுகரியம் தாடி! வி.ஸ்ரீவித்யா, நரிமேடு: அரசு பணியில் இருப்பவர்கள், 'கடமை' என நினைத்து செயல்பட வேண்டுமா? 'சேவை' என நினைத்து செயலாற்ற வேண்டுமா? இரண்டையுமே நினைக்க வேண்டாம்; வாங்குகிற சம்பளத்துக்கு, உண்மையாக உழைத்தால் போதும்!ஆர்.வைத்தியசாமி, இடுவம்பாளையம்: ஒரு ஆண், தனக்குப் பிடித்த பெண்ணை நேசிக்கும் போது அதை, காதல் என்று கூறி, அவனை மேலும் உற்சாகப்படுத்துகிறது இந்த சமூகம். அதேபோல், ஒரு பெண், தனக்குப் பிடித்த ஒரு ஆணை நேசிக்கும் போது, அதை தவறாக பேசுகிறதே...ஆண் ஆதிக்கம் ஓயும் வரை, இந்த நாமகரணம் சூட்டப்பட்டு கொண்டே தான் இருக்கும்!வி.சீனிவாசன், விருதுநகர்: பசியினால் ஒருவன் மாண்டு போவது அவன் குற்றமா, அரசின் குற்றமா?பிச்சைக்காரன் வாழவில்லையா? திடகாத்திரமாக, உருண்டு, திரண்டு தானே இருக்கின்றனர். தனி மனித முயற்சிகளை மேற்கொள்ளாமல், தொட்டதற்கெல்லாம், 'அரசு... அரசு' என, ஓலமிடுவது பைத்தியக் காரத்தனம்! எஸ்.ஜார்ஜ், பல்லடம்: கவிஞர்கள், இயல்புநிலை தவறி இருப்பது ஏன்?அவர்கள் எதார்த்தவாதிகள் அல்ல! 'வானத்தை வில்லாக வளைத்து விட முடியும்' என்ற கற்பனையில் வாழ்பவர்கள்; உலக நடப்பை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக, தாம் நினைப்பது போல் உலகம் மாற வேண்டும் என எண்ணுபவர்கள். இதனாலேயே, அவர்களது இயல்பு வாழ்க்கையில், குழப்பத்தை தேடிக் கொள்கின்றனர்.