உள்ளூர் செய்திகள்

நிரந்தர முதல்வர்!

செப்.,17, விநாயகர் சதுர்த்திநம் வழிபாட்டில் எத்தனையோ தெய்வங்கள் இருப்பினும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை முதலில் வழிபடுவது விநாயகரைத் தான். நம் மனதில் மட்டுமல்ல, நாம் செல்லும் வழியெல்லாம் நமக்கு துணையாக இருப்பவரும் இவரே! ஆற்றங்கரை, அரசமரம், முச்சந்தி, தெருக்கோடி என்று, எல்லா இடங்களிலும் இவருடைய அருளாட்சி நடக்கிறது.இவரை வழிபடுவது மிகவும் எளிது; யாரும் பயன்படுத்தாத எருக்கம் பூ, வன்னி இலை போன்றவையே இவரது பூஜை பொருட்கள். இது, எளிய வாழ்வு வாழ வேண்டும் என்பதை மட்டுமல்ல, உலகில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் என்று யாருமே இல்லை; எல்லாருமே அவரவர் நிலையில் சிறந்தவர்கள் என்ற தத்துவத்தையும் உணர்த்துகிறது.அத்துடன், விநாயகரின் அருளைப் பெற, தவமிருக்க வேண்டியதில்லை. தலையில் குட்டி, தோப்புக்கரணம் போட்டால் போதும்; அவரின் அருளுக்கு பாத்திரமாவோம். தோப்புக்கரணம் போடுவதற்குரிய காரணம் குறித்த புராணக்கதை ஒன்று உள்ளது.ஒருமுறை, சிவன் உத்தரவுப்படி, இமயத்தில் இருந்து பொதிகை நோக்கி கமண்டலத்துடன் வந்து கொண்டிருந்தார் அகத்தியர். அப்போது, காகம் உருவெடுத்து வந்த விநாயகர், அந்தக் கமண்டலத்தை தட்டி விட்டு பறந்து விட்டார். கவிழ்த்த கமண்டல நீர், விரிந்து பரந்து ஓடியது. இது, 'காவிரி' என்று பெயர் பெற்றது. கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை, திரும்பிப் பார்த்தார் அகத்தியர்; அதைக் காணவில்லை. காகம் நின்ற இடத்தில், ஒரு சிறுவன் நின்றிருந்தான்.கோபமடைந்த அகத்தியர், அச்சிறுவன் தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். அச்சிறுவன் விநாயகப் பெருமானாக, அகத்தியர் முன் காட்சி அளித்தார். குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டி, மன்னிக்குமாறு வேண்டினார்.இதில் இருந்து தவறு செய்தவர்கள் அதற்காக வருந்தி, இனி, அந்தத் தவறை செய்வதில்லை என, உறுதி எடுத்து தலையில் குட்டினால், அவர்களை மன்னித்து அருள்வார் கணபதி.அதே போன்று விநாயகருக்கு, தோப்புக்கரணம் போடுவதற்கும் காரணம் உண்டு. கஜமுகாசுரன் என்னும் அசுரன், தேவர்கள் தன்னைக் கண்டால், தோப்புக்கரணம் இட வேண்டும் என்று நிர்ப்பந்தித்தான். தேவர்களும் பயந்துபோய் அவனுக்கு தோப்புக் கரணம் போட்டு வந்தனர். இதுகுறித்து தேவர்கள், விநாயகரிடம் முறையிட, அவனை சம்ஹாரம் செய்ய கிளம்பினார் விநாயகர்.விநாயகரையும் தோப்புக்கரணம் இடுமாறு ஆணையிட்டான் கஜமுகாசுரன். அவனை தன் தந்தத்தால் குத்திக் கொன்றார். கஜமுகாசுரன் அழிந்ததும், அவனுக்கு போட்டு வந்த தோப்புக்கரணத்தை நன்றியுணர்வுடன் தேவர்கள், விநாயகப்பெருமானுக்கு போட துவங்கினர். அதுமுதல், விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் வழக்கம் உண்டானது.அவர் பிறந்தது ஆவணி மாதம், வளர்பிறை சதுர்த்தி திதியில் என்கிறது விநாயக புராணம். நிரந்தர முதல்வரான அவரது பிறந்த நாளில், நாமும், நம் தேசமும் எதிலும் முன்னிலை வகிக்க வேண்டுவோம்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !