அந்துமணி பதில்கள்!
என்.வேணுகோபாலன், கிருஷ்ணகிரி: பெரும்பாலான ஆண்கள், தங்கள் மதுப் பழக்கத்திற்கு காரணம் பெண்கள் தான் என்று கூறுகின்றனரே...'நொண்டி குதிரைக்கு சறுக்கியதே சாக்கு...' என்பதைப் போல், இவர்களுக்கு தன்னை மறந்த போதை வேண்டும்; அதற்கு இது ஒரு சாக்கு!எஸ்.எம்.பவுன்ராஜ், தல்லாகுளம்: ஆண்களை விட, பெண்களுக்கு, 'ஹியூமர் சென்ஸ்' குறைவு என்கிறேன்... சரி தானே!சரியில்லை; பள்ளிக்கூட பாப்பா துவங்கி, கல்லூரி கன்னியர் வரை அடிக்கும் ஜோக்குகளும், 'இன்டர்நெட்'டில் பெண்கள் அவிழ்த்து விடும் தமாசுகளும் வயிற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவற்றில், 'ஏ'ஜோக் சொல்வதில் ஆண்களை மிஞ்சி விடுகின்றனர் சில பெண்கள். உங்கள் ஏரியாவிலும், அத்தகைய பெண்கள் இருக்கலாம். சமுதாயம், சொந்தக்காரர்கள், அடுத்த வீடு, தெரு என, பயந்து அடக்கி வாசிப்பவர்களாக இருக்கும்; ஆராய்ந்து பாருங்கள்!வி.கல்யாண், தேனி: வறுமையின் காரணமாக பள்ளிப் படிப்புடன் கல்வியை இழந்தவன் நான். என்னால், வாழ்க்கையில் முன்னேற முடியாதா?மூளையை பயன்படுத்தாதவனால் தான் முன்னேற முடியாது. உங்கள் ஊரையே எடுத்துக் கொள்ளுங்களேன்... இன்று, அங்கு பணத்திலும், புகழிலும் பிரபலமாக இருப்பவர்களில் எத்தனை பேர் பள்ளிப் படிப்பை தாண்டியவர்கள் எனக் கணக்கெடுத்தால், . வெகு சொற்பமே தேறுவர். படிக்காத மேதைகளாக திகழ்ந்தோர், உலகில் பலர் உண்டு. அந்நிலையை அடைய, அவர்கள் பயன்படுத்தியது தம் மூளையை மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!டி.ஆரோக்கியசாமி, தாம்பரம்: அன்போடு சிரித்து பேசினால், கடன் கேட்கின்றனரே...உண்மைதான்; அதனால் தான், முக்கால்வாசி தமிழன், பானை போல் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டதில் பிரகாசமே இல்லாமல் போய் விட்டது முகம்! இவ்வாறு செய்யாமல், 'நோ' சொல்லும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 'இவனால் முடியாது...' என்று சொல்லும் பக்குவத்தை வளர்த்துக் கொள்வது ஒன்றும் சிரமம் இல்லை!ந.சத்தியநாரயணன், சென்னை: ஒவ்வொரு பரபரப்பான விஷயமும் நான்கு நாட்களுக்கு மட்டுமே பரபரப்பாக பேசப்படுவதும், பின்னர் அதை சுத்தமாக மறந்து போவதும் ஏன்?புதிய புதிய பரபரப்புகளை பார்க்க, படிக்க, பேச பழகி கொண்டு விட்டோம். அது மட்டுமல்லாமல், ஒவ்வொரு ஐந்தாவது நாளும், வேறு பரபரப்பு செய்தி வந்து விடுகிறதே!வி.சதீஷ்குமார், கடலூர்: தொழிலில் அதிக லாபம் சம்பாதிக்க முடியவில்லை. என் வயதோ, 35... இனி, என்ன செய்யலாம்?எம்.ஜி.ஆர்., முதன் முதலாக நடித்த படத்திற்கு வாங்கிய சம்பளம் வெறும், 300 ரூபாய்! அவருக்கு தன் திறமை மீதும், தான் ஈடுபட்டு வந்த தொழில் மீதும் நம்பிக்கை இருந்தது. ஏழாவது படத்தில், 1,000 ரூபாய் சம்பளம் பெற்றார். 16வது படத்தில், 2,500 ரூபாயும், 45வது படத்தில், ஒரு லட்சம் ரூபாயும் வாங்கினார். இது, அவரது 40 வயதிற்கு மேல்! உங்களுக்கு நம்பிக்கையாவது இருக்கிறதா... இனியாவது, அதிக லாபம் வருமென்று இருந்தால், தொழிலை தொடருங்கள் இல்லையேல், 'ரூட்'டை மாற்றுங்கள்!