உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

கே.எஸ்.செல்லப்பாண்டி, கோடாங்கிபட்டி: தங்கியிருக்கும் வீட்டின் பொருளாதார நிலை தெரியாமல், விருந்தினர்கள் நாள் கணக்கில், 'டேரா' போடுகின்றனரே...இந்த விஷயத்தில் கவுரவம் பார்க்காமல், நிலவரத்தை எடுத்து சொல்லி விடுவது தான் புத்திசாலித்தனம். கடன் ஏற்பட்டால் இவர்கள் கண்டு கொள்ளவா போகின்றனர்! டி.சுந்தரம், அனுப்பானடி: எதற்கெடுத்தாலும் பெண்கள் அழ ஆரம்பிக்கும் போது ஏற்படும் எரிச்சலை தவிர்ப்பது எப்படி?அவர்கள் அழாமல் பார்த்துக் கொண்டால், எரிச்சல் ஏன் ஏற்படப் போகிறது... பூப்போன்ற மனமுள்ள பெண்களை ஏன் அழவிட வேண்டும், பிறகு எதற்கெடுத்தாலும் அழுகை என, ஏன் எரிச்சல் பட வேண்டும்! எஸ்.ஜான்டேவிட், உதகை: பயனற்ற கேள்விகளைக் கேட்டு, தொந்தரவு செய்யும் முதலாளியிடம் பதில் சொல்லாமல், மவுனமாக இருப்பது, 'இறுமாப்புக்காரன்' எனும் பட்டத்தை வாங்கித் தருகிறதே...உம்முடைய, 'ஆங்கிளில்' அவை, 'பயனற்ற' கேள்வியாகத் தெரியலாம். ஆனால், பணம் போட்ட முதலாளிக்குத் தான் அவர் கேள்விகளின் முக்கியத்துவம் தெரியும். கருத்து வேறுபட்டு முற்றுமுன், வேறு இடம் பார்த்துக் கொள்வது நலம்!வி.எஸ்.விவேகானந்தன், சென்னை: போட்டியும், பொறாமையும் நிறைந்த இவ்வுலகத்தை திருத்த ஏற்றது, ஆன்மிகமா, சமத்துவமா?சமத்துவம் தான் என செயல்பட்ட இடங்கள் மற்றும் நாடுகளில் அக்கொள்கை அடிபட்டு, பொடிப் பொடியாகி விட்டதே!பொ.ரஹீம், திண்டிவனம்: உடல் ஊனமுற்ற நண்பனின் திருமணத்தை முடிக்க, அவனுடைய பெற்றோர் முடிவு எடுக்கவில்லை. அவனை, ஒரு பெண் விரும்புகிறாள்; அவனும் அவளை விரும்புகிறான். வாழ்க்கை நடத்தும் அளவுக்கு இருவருக்குமே பொருளாதார வசதி உள்ளது. உடல் ஊனமுற்ற அந்த நண்பருக்கும், உணர்ச்சிகள் உண்டு என்பதை, அவர் வீட்டாருக்கு எப்படி புரிய வைப்பது?நண்பரின் காதலியை ஒரு கடிதம் எழுதச் செய்து, அது, அவரின் பெற்றோர் கைக்கு கிடைக்கச் செய்யலாம் அல்லது நண்பரின் காதலி போட்டோவை அவரது பெற்றோர் கண்ணில் படும்படி வைக்கலாம். இந்த நாசூக்கையும் புரிந்து கொள்ளவில்லை என்றால், நண்பருக்காக நீங்களே அவரது பெற்றோரிடம் நேரிடையாக பேசி, திருமணத்தை முடித்து வைக்கலாம்.இ.கீர்த்திவாசன், வியாசர்பாடி: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின், ஒரு பெண் இருக்கிறாள்; ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால்...அவளது உழைப்பு, பொறுமை, சின்சியாரிட்டி, நாசூக்கு, சாதுர்யம்!க.சுலோசனா, காஞ்சிபுரம்: கணவனை கட்டிப் போட ஒரு பெண்ணுக்கு உதவக் கூடியது அழகா, அன்பா?நெளிவு, சுளிவுகளுடன் கூடிய ராஜ தந்திரம் போதுமே!எம்.இளங்கோவன், கோட்டூர்: எங்கள் ஊரில் நான் நடத்தி வரும் வியாபாரத்துக்கு போட்டிகள் வளர்ந்து கொண்டே போகிறது. இதை, சமாளிக்க என்ன வழி?போட்டி இல்லாத வாழ்க்கை, ரொம்ப நாள் இனிக்காது; கசந்து விடும். போட்டி ஏற்படும் போதெல்லாம் புது உத்திகள் உதிக்கும்; மூளை சுறுசுறுப்பாக இயங்கி, போட்டிகளை சமாளிக்கும் வழி வகைகளை கொடுக்கும். ம்... சியர் அப்... என்ன தயாராகி விட்டீர்களா... போட்டிகளை சமாளிக்க!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !