அந்துமணி பதில்கள்
என்.செந்தில்குமார், நெய்வேலி: பட்டதாரியான என் நண்பர், 'மாதச் சம்பள வேலை வேண்டாம்; விவசாயத்தில் ஈடுபடப் போகிறேன்...' என்கிறார். அவர் முடிவு சரிதானா?சரிதான்; வரவேற்கிறேன். எல்லா விவசாயிகளையும் போல, செக்கு மாடு மாதிரி செயல்படாமல், இயற்கை உரத்திற்கு மாறி பயிர் செய்தால், அதிக விளைச்சலும், விலையும் கிடைக் கும். இவ்வகை தானியங்களையும், காய், கனிகளையும் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க தயாராக உள்ளனர் மக்கள்!வி.பிரகாஷ், கொட்டாம்பட்டி: ஒரு, 'மேக் - அப் மேனால்' எப்படி பல கோடிகளை போட்டு சினிமா தயாரிக்க முடிகிறது?இண்டஸ்டிரியில் நன்கு அறிமுகமான நபர் எவராக இருந்தாலும், பெரிய நடிகர், டைரக்டரின் கால்ஷீட்டைப் பெற்று விட்டால், கோடிகளை கடனாகக் கொடுக்க, சேட்டுகள் தயாராக உள்ளனர். சரத்குமாரின், திவான், கமல்ஹாசனின், பம்மல் கே. சம்மந்தம் மற்றும் பஞ்ச தந்திரம் போன்ற படங்களை தயாரித்த தேனப்பன், சினிமாக்காரர்களுக்கு சாப்பாடு பரிமாறுபவராக இருந்து, புரொடக் ஷன் மேனஜராகி, பின், தயாரிப்பாளர் ஆனவர் தான்! (நண்பர் தான்!)ம.தமீமா, தச்சம்பட்டு: வீட்டு செலவுக்கு தேவையான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, உம்மணா மூஞ்சியாக சில ஆண்கள் இருக்கின்றனரே...குடும்பத்தைத் தவிர, தம்பதியருக்குள் காமன் சப்ஜெக்ட் ஏதும் இல்லாமல் போவதுதான் இதற்கு காரணம். இப்படி இருக்கும் கணவனையோ, மனைவியையோ, ஆன்மிகம், சினிமா, பத்திரிகை என ஏதாவது ஒரு சப்ஜெக்டுக்கு இழுத்து, பேச, விவாதிக்க ஆரம்பித்தால், இக்குறை தீர்ந்து விடும்.டி.லிங்கன், அருப்புக்கோட்டை: ஜோதிடம், வாஸ்து, நியூமராலஜி எவ்வளவு தூரம் நம்பலாம்?திண்டுக்கல் வாசகர் ஒருவர் எழுதிய கேள்வி இதோ...நான் பிறந்த போது எனக்கு ஜாதகம் கணித்தவர், '67 வயதில் மரணம்' எனக் குறிப்பிட்டுள்ளார்; எனக்கு இப்போது, 69 வயதாகி விட்டது. உயிருடன், திடகாத்திரமாக உள்ளேன். ஜோதிடம் பொய்த்து விட்டதே... உங்கள் பதில் என்ன...' எனக் கேட்டுள்ளார். உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விட்டதா?என்.வசுமதி, திருப்பூர்: திருமணமான நண்பர் ஒருவர், தன்னை நிறைய பெண்கள் விரும்பினார்கள் என்று என்னிடம் அடிக்கடி கூறி வருகிறார். இது எதற்கு?'பார்ட்டி படியுமா, படியாதா' என, உங்களிடம் நூல் விட்டுப் பார்க்கிறார்; ஜாக்கிரதையாக இருங்கள் அந்த ஆளிடம்!அவரை, இனியும் நண்பராக கருத வேண்டுமா என, நன்கு யோசித்து முடிவு செய்யுங்கள்!எம்.தேவேஷ்ராஜா, பீளமேடு: சுய தொழில் மூலம் போதுமான அளவு சம்பாதிக்கிறேன். கை நிறைய சம்பளமும், பதவியும் தருவதாக, தனியார் நிறுவனம் ஒன்றில் அழைக்கின்றனர்... போகலாமா?வேண்டாம்; இப்போதே போதுமான அளவு சம்பாதிப்பதாக கூறுகிறீர்கள். 'கை நிறைய' வேண்டும் என்பதற்காக, தங்க முட்டை போடத் தயாராகி வரும், 'பொன் வாத்தை' இன்றே கொன்று விடாதீர்கள்!