அந்துமணி பதில்கள்
* கே.முகம்மது, ஆவடி: வட்டிக்கு கடன் வாங்கியாவது, 'ஏசி', எல்.இ.டி., 'டிவி' லேப் -- டாப், கம்ப்யூட்டர் என்று, சகல பொருட்களையும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, என் மனைவி நச்சரிக்கிறாளே...வட்டி கட்டி, கெட்ட குடும்பங்கள் பலவற்றை அறிவேன். பிசினசில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் வட்டிக்கு வாங்கி, ஆடம்பர செலவு செய்யக் கூடாது; மீறி வாங்கினால், தொலைந்தே போவர்!எஸ்.வேணுபிரபாகரன், மடிப்பாக்கம்: முருங்கை மரத்தில் பிசாசும், புளிய மரத்தில் பேயும், குடி கொண்டிருக்குமாமே...முருங்கை மரமென்ன, புளிய மரமென்ன... எல்லா மரத்திலும் பேய், பிசாசு உண்டு; கோழைகளுக்கு!என்.தன்யா, விழுப்புரம்: பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பி, வெளியாகாமல் திரும்பி வந்த படைப்புகளை என்ன செய்யலாம்?உங்கள் படைப்பு எந்த பத்திரிகைக்கு, 'சூட்' ஆகும் என ஆராய்ந்து, அந்த பத்திரிகைக்கு புதிய தாளில் எழுதி அனுப்புங்கள். திரும்பி வந்ததை அப்படியே அனுப்பினால், வெளியிடத் தகுதி இருப்பினும், 'நம்மை, 'இன்சல்ட்' செய்கிறார் இவர்...' என்ற ஈகோவினாலும், 'ஏற்கனவே இன்னொருவர், 'ரிஜக்ட் செய்தது' என, பார்த்த உடனேயே முடிவு செய்து, பரிசீலிக்காமலேயே திருப்பி அனுப்ப வாய்ப்புண்டு.* ஜி.சுப்புராஜ், கடலூர்: ஏகப்பட்ட தொழிற்கல்வி கூடங்கள் வந்து விட்டனவே... நம் மக்களில் ஆயிரம் பேரில், எத்தனை பேர் தொழிற் கல்வி கற்றுள்ளனர்?நம் நாட்டில் ஏகப்பட்ட தொழிற்கல்விக் கூடங்கள் வந்துவிட்டாலும், இன்னும் காலரை தூக்கி, பெருமை கொள்ளும் அளவில், நிலைமை முன்னேறவில்லை. இந்தியாவில், 1000 பேரில், தொழிற்கல்வி கற்றவர் நான்கு பேர் மட்டுமே! ஆனால், இஸ்ரேல் நாட்டில், 1000 பேருக்கு, 76 பேரும், டென்மார்க் நாட்டில், 85 பேரும், ஜப்பானில், 110 பேரும், தொழிற்கல்வி கற்றவர்களாக இருக்கின்றனர்.* எம்.என்.சர்வேஸ்வரன், திருவள்ளூர்: குறிப்பிட்ட அரசியல்வாதியை பத்திரிகைகள் எதிர்த்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?அரசியல்வாதியை நேரடியாக கூட எதிர்க்க வேண்டாம்... அந்த குறிப்பிட்ட அரசியல்வாதிக்கு எதிராக செய்தி வெளியிட்டாலே போதும்; பாதிப்பு ஏற்படுத்திவிடக் கூடிய சக்தி, அதிகமாக விற்பனையாகும், வெகுஜன பத்திரிகைகளுக்கு உண்டு!ம.தேவநாதன், கல்லணை: நாற்பது வயது பெண்ணிற்கு கூட திருமணம் செய்து வைக்காத பெற்றோரை என்ன செய்வது?அவர்களை என்ன செய்து, என்ன பயன்... இனிமேலா, மணம் முடித்து வைக்கப் போகின்றனர்; பெண்ணேதான் முயற்சி எடுக்க வேண்டும்.