அந்துமணி பதில்கள்!
என் ராஜு, சிவகங்கை: அரசு அதிகாரியாக இருந்து, சமீபத்தில் ஓய்வு பெற்றேன். எனக்கு, மொத்தமாக நிறைய பணம் கிடைத்திருப்பதை அறிந்த உறவினர்களும், நண்பர்களும் கடன் கேட்டு நச்சரிக்கின்றனர்... என்ன செய்வது?தயங்காமல், 'நோ' சொல்லி விடுங்கள்... தாட்சண்யம் பார்த்தால், 'பிளேடு' கம்பெனிகளில் பணம் போட்டவர்களின் கதியாகி விடும். இதனால், நட்போ, உறவோ பாதிக்கப்பட்டாலும் பாதகமில்லை. * ஆர். மகாலட்சுமி, புதுச்சேரி: இந்திய பெண்களின் முன்னேற்றம் உங்களை வியக்க வைக்கிறதா, திகைக்க வைக்கிறதா?ஏன் வியக்க, திகைக்க வேண்டும்? இயல்பிலேயே, அவர்களுள் மறைந்து கிடக்கும் திறமைகள் இப்போது தான் வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்துள்ளன... இது, மகிழ்ச்சியைத் தருகிறது!எம்.சுதா, காஞ்சிபுரம்: இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளியில், பெண் குழந்தையைச் சேர்ப்பதால் தவறு ஏற்பட வழி உண்டா?பிரித்து வைப்பதால் தான் தவறுகள் நடக்க, அதிக வழி ஏற்படும். சேர்ந்தே படிப்பதால் இன கவர்ச்சி, 99 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்பது கண் கூடு! * பி.ராதாகிருஷ்ணன், சேலம்: கட்டிய மனைவியை கைநீட்டி அடிப்பதால், கணவன் பெரிய மனிதனாகி விட முடியுமா?பெரிய மனிதனாக மாட்டான்; கேவலமாகி விடுவான். உடல் ரீதியாக தனக்கு சமமாக உள்ள ஆளைக் கூட கை நீட்டி அடிப்பது கேவலம் எனும் போது, உடலில் பாதி, உயிரில் பாதி எனக் கருதப்படும் மனைவியை அடிக்கக் கை துாக்குபவன் எவனாக இருப்பினும், அவன் சாக்கடை புழுவுக்கு ஒப்பானவன் தான்!என்.ராஜன், திருப்பூர்: மனிதன் தடுமாறுவது எப்போது?மனசாட்சியை அடகு வைக்கும்போது, இழக்கும் போது! மனசாட்சிக்கு உண்மையாக நடப்பவன் எப்போதும் தடுமாறுவது இல்லை! ஜி.பாக்கியநாதன், பாலக்காடு: பிச்சைக்காரர்களை நம் நாட்டில் அறவே ஒழித்து விட முடியாதா?உழைக்க அஞ்சும் சோம்பேறிகள் இருக்கும் வரை, உலகின் எந்த மூலையிலும் பிச்சைக்காரர்களை ஒழிக்கவே முடியாது! என்.மதிவாணன், தேனி: பெண்களின் ஓரப் பார்வைக்கு தனி, 'கிக்'தானே?அப்படித்தான் சொல்லிக்கறாங்க... ஆனா, என்னைப் பார்க்கிறதெல்லாம் ஒரே முறைப்பாகத்தான் இருக்கிறது! பி.சுந்தரேசன், திருக்கடையூர்: நேரமே போக மாட்டேங்குது... வாழ்க்கையே, 'போர்' அடிக்குது எனக்கு...வாழ்வின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து, அதற்கென திட்டமிட ஆரம்பியுங்கள். நேரமே போதவில்லை என கூற ஆரம்பித்து விடுவீர்கள்; 'போர்' என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும்! முன்னேற்றம் குறித்து நல்ல திட்டங்களை யோசித்துக் கொண்டே இருந்தால், ஒரு நாள் நிச்சயம் ஒரு, 'பொறி' தட்டும்; வளமான வாழ்வுக்கான பாதையில் முதல் அடி எடுத்து வைத்து விடலாம்!எஸ்.ராஜேஷ், சேலம்: உலகிலேயே மனிதனுக்கு அதிக போதையை தருவது எது?மிக போதையூட்டும் சக்தி, புகழ் மொழியே! அதுவும், 'இவனை வீழ்த்தியே தீருவது' என, சபதம் எடுத்தவன் கூறும் புகழ்மொழி இருக்கிறதே ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்தது!