உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

பி.பாஸ்கரன், கன்னியாகுமரி: வெட்டிப் பேச்சு பேசி, நம் நேரத்தை வீணடிப்பவரிடம் இருந்து தப்பிப்பது எப்படி?உங்கள் அலுவலக மேஜை மீது, 'எனக்கு நிறைய வேலை இருக்கிறது; உங்களுக்கு?' என, ஒரு போர்டு வைக்கலாம்; 'உங்களுடன் நிறைய பேச ஆசை தான்; ஆனால், அவசர வேலைகள் நிறைய இருக்கு. பிறகு பேசுவோமா...' என, நாசூக்காக கழற்றி விடலாம்; ஜாமின் கொடுக்க ஒரு ஆளை தயாராக வைத்திருக்கலாம். 'வெட்டி பேச்சு' துாரத்தில் வருகிறது எனத் தெரிந்தால், தலைமறைவாகி விடலாம்! சி.சுப்பிரமணி, பெரிய காஞ்சிபுரம்: பல் தெரியாமல் சிரித்தால் மூளை வளரும்; ஆயுள் அதிகரிக்கும் என்கின்றனரே...இந்த பத்தாம் பசலித்தனமான, 'டுபாக்கூர்'களை நம்பி, சுயத்தை இழந்து விடாதீர்; வாய் விட்டு சிரியுங்கள்; சந்தோஷமாக இருங்கள்! * ஆர்.சஞ்சீவி, பழநி: வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு தேவையா, அனுபவம் போதுமா?முதலாவது ஓரளவு உதவும்; இரண்டாவது ரொம்ப முக்கியம். ஏற்கனவே, வெற்றி பெற்றவர்களிடமிருந்து அனுபவ அறிவு பெற்றுக் கொள்வது லாபகரமானது! கே.வெங்கடேசன், திருப்பூர்: மாடி வீடு, குடிசை வீடு - எதில் குடியிருப்பது சுகம்?மன வீடு சந்தோஷமாக, சஞ்சலம் இல்லாமல் இருந்தால், மாடி என்ன, குடிசை என்ன, எல்லாம் சுகம் தான்! * ஜி.டி.விஜயன், சென்னை: காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எதை அடக்குவது எளிது?மூன்றுமே வெகு சுலபமாக அடக்க கூடியவை தான்; ஆனால், மனித மனம் ஒத்துழைக்க வேண்டுமே! டி.சுதா, ஸ்ரீவில்லிபுத்துார்: காதலிக்காமல், ஆண்- - பெண் நட்பாக இருப்பது சாத்தியமா?சாத்தியம் தான்; 'செக்ஸ்' உட்பட எல்லா சப்ஜெக்ட்டும் பேசினால் கூட, உடல் ரீதியாக தொடர்பு இல்லாமல், நட்பாக இருப்பது சாத்தியம் என்பதை, பலரது அனுபவம் மூலம் இப்போதெல்லாம் என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது! கே.விஸ்வநாதன், புதுச்சேரி: 'இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்' என்கின்றனரே... இதற்கு, எந்த ஊரின் நேரத்தை அடிப்படையாக வைத்துக் கொள்கின்றனர்?உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரின் நேரமே, ஐ.எஸ்.டி., -- 'இந்தியன் ஸ்டாண்டர்டு டைம்' ஆக கொள்ளப்படுகிறது. இதுவே, குறிப்பிட்ட இடத்திற்கு நேரம் தவறி செல்லும்போது, கிண்டலடிக்கும் வார்த்தையாகவும் பயன்படுத்தப்படுகிறது! * எம்.கருணாகரன், திருக்கோவிலுார்: பெண்கள் சம்பாதித்து, தன் காலில் நிற்காத வரை ஆணாதிக்கம் ஒழியாது என்ற கூற்று சரிதானா?மிகச் சரி; காசுக்காக கணவனையோ, பெற்றவரையோ, சகோதரனையோ எதிர்பார்த்து இருக்கும் வரை, எந்த பெண்ணும் சுதந்திரமாக செயல்பட முடியாது. ஆணாதிக்கம் தலை விரித்து ஆடத்தான் செய்யும். ஆனால், ஒரு பெண் பொருளாதார ரீதியில் யாரையும் சார்ந்து இருக்கவில்லை எனில், சமூகத்தில், ஆண்கள் மத்தியில், அவள் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கவே செய்யும். ஆணாதிக்கம் போன்ற, அல்டாப்புகள் அங்கே செல்லுபடியாகாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !