அந்துமணி பதில்கள்!
* எஸ்.வைஷ்ணவி, பொள்ளாச்சி: இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள், பொருளாதாரத்தில் எப்படி உள்ளனர்?மிக நல்ல நிலையிலேயே இருக்கின்றனர். அனேகமாக அனைவருக்கும் சொந்த வீடு உள்ளது. தென் மாநிலத்தவர் பலரும் பணியில் உள்ளனர். வட மாநிலத்தவர் சுயதொழில் செய்கின்றனர். இங்கு பெட்டிக்கடை என்று சொல்வோமே, அது போல (சிகரட், பேப்பர், மிட்டாய் விற்கும் கடைகள்... ஆனால், பெரிய அளவிலானவை) கடைகள், 75 சதவீதம் இவர்கள் கையில்தான்.அ.முருகன், ராமநாதபுரம்: என் வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது... ஏன் இப்படி?குணம் இல்லாமல் இருக்கிறது உங்களிடம்! பணமும் இல்லை உங்களிடம்! இந்த இரண்டும் இல்லாதவர்கள் பலவற்றை இவ்வுலகில் பெற முடிவதில்லை; இதனால், ஏற்படும் தவிப்பு, வெறுப்பாக மாறுகிறது!வி.ராமச்சந்திரன், மதுரை: என் முயற்சிகள் எதுவுமே எனக்கு வெற்றித் தேடித் தருபவையாக இல்லையே...மரவேலை செய்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இரண்டு பலகைகளை இணைக்க ஆணி அடிப்பர்; அதை உள்ளே இறக்க ஒரு முறை அடித்ததுடன் நின்று விடுகின்றனரா? அதுபோலத்தான் இருக்க வேண்டும் முயற்சிகள்!ஜி.திலகவதி, பண்ருட்டி: நிம்மதியை கொடுப்பதும் பணம், அதை கெடுப்பதும் பணம்... உங்கள் கருத்து என்ன?தவறு; கையாளும் திறமை படைத்தவன் என்றும், நிதானத்துடன், இரண்டுக்கும் நடுவில் நிற்கிறான்!* பி.மகேஷ், திருவள்ளூர்: தனியார், 'டிவி' சேனல்கள் வாரத்தில் ஒருநாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?பெண்கள் பைத்தியமாகும் நாள் தள்ளிப் போகும்; வீடுகளில் சமையல் அறை துவங்கி மற்ற அறைகள் சுத்தமாகும்; குழந்தைகள் ஒழுங்காக பாடம் படிக்கின்றனரா என்பதை தாய்மார் கவனிக்க வாய்ப்பு கிட்டும்; காது செவிடாவதும், 'டிலே' ஆகும்; கரன்ட் செலவு மிச்சமாகும்!ஆர். ஸ்ரீநிவாசன், வந்தவாசி: நம்முடைய வழித் தோன்றல்கள் தான் மனிதன் என்ற சேதி, குரங்குகளுக்குத் தெரிந்தால்...குரங்குகளாக இருந்த போது, நாம் பாவங்கள் செய்திருக்க வாய்ப்பில்லை. மனிதனான பின்தான் மன்னிக்க முடியாத பாவச் செயல்களில் ஈடுபடுகிறோம்! குரங்குகளுக்கு விஞ்ஞான உண்மை தெரிய வந்தால், அவை தம்மைப் பற்றி பெருமைக் கொள்ளும்... 'ஆகா... நாம் இன்னும் மனிதனாக மாறவில்லை...' என்று!என்.லலிதா, சென்னை: குழந்தைகளுக்கு சூட்டும் சில வகையான பெயர்களின் மூலமே குழந்தை பிறப்பை இயற்கையாகவே தடுக்கும் முறையை நம் முன்னோர் பின்பற்றினர் என்கிறாளே, என் தோழி; உண்மையா?ஒரு சில சொற்களைத் திரும்பத் திரும்ப பலமுறை உச்சரிக்கும்போது, மனித உடற்கூற்றில் சில வகை மாறுதல்கள் ஏற்பட்டு, குழந்தை பிறப்பு, குறிப்பாக பெண் குழந்தைகள் பிறக்காது என, நம் முன்னோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். துளசி, சாவித்திரி போன்ற பெயர்களைச் சூட்டிய பின் பெண் குழந்தைகள் பிறக்காது என்பது அவர்களது நம்பிக்கை! (இப்பெயர்கள் வைத்த பிறகும் பெண் குழந்தைகள் பிறந்திருப்பின் வாசகர்கள் எனக்கு எழுதலாம்)