அந்துமணி பதில்கள்!
ஆர்.சி.முத்துக்கண்ணு, விருதுநகர்: கனவு, துாங்கும்போது வர வேண்டுமா அல்லது கண்ணை மூடிக்கொண்டிருக்கும்போதா...கண்களை அகல திறந்து வைத்தபடி, கனவு காண வேண்டும்! அக்கனவுகளை காண, வாழ்வு நெறிப்படும்; வாழ்க்கை தரம் செம்மைப்படும். நீங்கள் சொன்ன இரண்டு செயல்களின் போதும் வரும் கனவுகளால், ஒரு பயனும் இல்லை.எம்.நந்தனா, திருப்பூர்: ஓட்டல்களில் பெரும்பாலும், ஆண் சமையல்காரர்களே உள்ளனரே... அம்மணிகள் ஏன் அதில் ஈடுபடுவதில்லை?ஏன் ஈடுபடாமல்... நட்சத்திர ஓட்டல் சமையல் அறைகளை சென்று பாருங்கள்... 'கேட்டரிங்' படித்த இளம் பெண்கள், தலையில் நீண்ட, 'குல்லா'க்கள் அணிந்து, 'ஆம்லெட்' முதல் ஆட்டுக்கால், 'சூப்' வரை தயார் செய்கின்றனரே... நடுத்தர ஓட்டல்களில், மாவாட்ட, காய்கறி நறுக்க பெண்களின் சேவையை பயன்படுத்தும் ஓட்டல் முதலாளிகள், அவர்களை சமையலில் ஈடுபடுத்த தயங்குவது ஏன் என்பதை விளக்க வேண்டும்.ஏ.எஸ்.ராஜேந்திரன், கோவை: 'நீங்கள் என்ன ஜாதி?' என, கேட்பவர்களுக்கு, 'நச்' என சொல்ல, ஒரு, 'ஐடியா' கொடுங்களேன்...இந்த காலத்திலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்கின்றனரா என்ன... போகட்டும்... நாகரிகமில்லாமல் ஜாதி பற்றி கேட்பவர்களுக்கு, மையமான புன்சிரிப்பை, பதிலாக அளியுங்கள். மனம் நோகும்படி, 'நச்' கொடுக்க வேண்டாம்!* இ.ஜெயமணி, விழுப்புரம்: மகளிர் சுய உதவிக் குழுக்களால், பெண்களிடையே தன்னம்பிக்கை வளர்ந்துள்ளதா?தன்னம்பிக்கை, பெண்களுள் பிறந்த குணம். சுய உதவி குழுக்கள் மூலம் வேலையும், கை நிறைய சில்லரையும் கொழிக்கும் போது, தன்னம்பிக்கைக்கு எங்கிருந்து வரப் போகிறது பஞ்சம்... ஆனால், 'திமிர் அதிகமாகி விட்டது இவருக்கு!' என்ற ஆண்களின் அபாண்ட குற்றச்சாட்டை கேட்க வேண்டி வரும்... அதற்கெல்லாம் கவலைப்படுபவர் அல்ல, நம் மகளிர்!* கே.சுப்புலட்சுமி, பெண்ணாடம்: 'மெக்காலே கல்வி திட்டம்' என்கின்றனரே... அப்படின்னா என்னங்க?ஆங்கிலேயர்களுக்கு அடிமை வேலை செய்ய, இந்தியர்கள் தேவைப்பட்டனர். அப்போது, லார்டு மெக்காலே என்ற வெள்ளைக்கார கல்வியாளரைக் கூப்பிட்டு, அதற்கு ஏற்றபடி கல்வித் திட்டம் தயாரிக்கக் கூறினர், வெள்ளை ஆட்சியாளர்கள். அரசு குமாஸ்தாக்களை தயார் செய்யும் கல்வி முறையை வகுத்தார், மெக்காலே. அதையே இன்னும் பின்பற்றுகிறோம். இதனாலேயே, இன்னும் நம் இளைஞர்கள், சொந்த காலில் நிற்க விரும்பாமல், அரசு வேலைக்கு அலைகின்றனர்!* எஸ்.பி.கன்னையா, சென்னை: மனிதனின் முதல் எதிரி மனசா, நாக்கா?காரப்பொடியும், உப்பும் சேர்ந்த சாதாரண ஊறுகாய் ஜாடியின் வாயைக்கூட, துணியால் கட்டி வைக்கின்றனர். இல்லையென்றால் கெட்டுப் போகும்... சாதாரண ஊறுகாய்க்கே வாயைக் கட்டும் போது, மனிதனின் வாய்... நாக்கு தான், மனிதனின் முதல் எதிரி!