அந்துமணி பதில்கள்
*என்.முருகன், ஊட்டி: யாரிடம் பேசாமலிருப்பது நல்லது?வம்பர், துடுக்கர், புறம் பேசுவோர், கோள் மூட்டிகள்!*****ப.கனிஷ்க், பூந்தமல்லி: தீக்குளிக்கும் தொண்டன்...முட்டாள்... ஏதாவது ஒரு பிரச்னைக்காக, இதுவரை எந்த தலைவனாவது மண்ணெண்ணை டின்னையும், தீப்பெட்டியையும், கையில் எடுத்திருக்கிறானா எனப் பகுத்தறிந்து பார்க்கத் தெரியாத மூடன்!****த.பாஸ்கரன், பெரியகுளம்: உள் ஒன்று வைத்து புறமொன்று பேசும் நண்பர்களை ஒதுக்குவது எப்படி?தவிர்க்கக் கூடியவர்களாக இருந்தால், 'உன் சங்காத்தமே வேண்டாம்!' என, ஒதுங்கி விடுங்கள்! முடியாதவர்கள் என்றாலும் சங்கடம் ஏதும் இல்லை; அவர்களது குணத்தைத் தான் தெரிந்து கொண்டு விட்டீர்களே!***** பா.சுப்பையா, திருவள்ளூர்: அதிர்ஷ்டம் யார் வீட்டுக் கதவை அதிகமாக தட்டுகிறது?சளைக்காமல் புத்தி கூர்மையுடன் வேலை செய்யும் அனைவரையும் வெற்றி வந்து அடைகிறது. இந்த வெற்றியை அதிர்ஷ்டம் என நம்பி, எப்போ வந்து கதவை தட்டும் என காத்திருக்கும் வீணர்களுக்கு ஒரு நாளும் வெற்றி கிடைக்காது!****சி.வளர்மதி, தேனி: வெளிநாட்டு பெண்கள் கற்பை மதிக்கின்றனரா?கற்பு என்பதே சர்ச்சைக்குரிய விஷயமாகி வருகிறது. 'உடலால், மனதால்...' போன்ற வரைமுறையையும் சிலர் வகுத்துக் கொண்டுள்ளனர். வெளிநாட்டுப் பெண்கள், குறிப்பாக அமெரிக்க பெண்கள் இதைப் பற்றி ரொம்ப அலட்டிக் கொள்வதில்லை!****எஸ்.கே.மாரியப்பன், கடலூர்: சோவியத் யூனியனின் நிலை, இந்தியாவுக்கும் ஏற்படும் என நினைக்கிறீர்களா?நிச்சயம் ஏற்படாது! இங்கு ஒரு கட்சி ஆட்சி முறை இல்லை; சுதந்திரமாக பேச அனுமதியுண்டு; தவறு செய்யும், ஆளும் கட்சியைத் தட்டிக் கேட்க, பொறுப்பான எதிர்க்கட்சிகள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக, 'நாம் இந்தியர்!' என்ற ஒற்றுமை உணர்வு கொண்டவர்கள் நாம்!****எஸ்.ராஜகோபாலன், விருதுநகர்: பேச்சு வழக்கில் இருக்கும் சிறிய ஆங்கில வார்த்தைகளை கூட, தமிழில் தான் பேச வேண்டும் என எழுதுகின்றனரே...காபி - வழக்கத்தில் இருக்கும் ஆங்கிலச் சொல்; இதை, 'குளம்பி' என்றோ, 'கொட்டை வடிநீர்' என்றோ சொல்ல முடியுமா? கம்ப்யூட்டர் - இதை கணிப்பொறி என்று கூற வேண்டுமா? ஆங்கிலம் உலக மொழியாக வளர, மற்ற மொழிகளில் இருந்து கடன் வாங்கிய சொற்களைத் தன்னகத்தே கொண்டது தான் காரணம்!****எம்.சங்கீதா, கோவை: 'நாங்க அந்தக் காலத்திலே...' என்று கூறி, 'அட்வைஸ்' செய்யும் பெரிசுகளின் தொந்தரவு அதிகமாகி விட்டதே...இதை தொந்தரவாக சிறிசுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது... அவர்களின் அனுபவங்கள் விலை மதிக்க முடியாதவை... 'தீ சுடும்...' என்று அனுபவப்பட்ட பெரிசு கூறினால், 'இல்லை, நானும் அனுபவப்பட்டுத்தான் தெரிந்து கொள்வேன்!' என்பது எவ்வளவு மூடத்தனம்! சரி... இது ஒரு பக்கம் இருக்கட்டும்; பெரிசுகள், தம்மிடம் யாருமே பேச விரும்பவில்லையே என்ற ஆதங்கத்தில் இருப்பர். அவர்களிடம் நாளுக்கு அரை மணி நேரம் பேசினால் தான் என்ன குறைந்து விடப் போகிறது!***