உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

என். அன்புச்செல்வி, பெரியகுமட்டி, கடலுார்: ஆண்களின் துணையின்றி, பெண்களால் எதுவும் சாதிக்க முடியாது என்கிறாளே, என் தோழி?நம் நாட்டிலேயே ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்... மறைந்த பிரதமர் இந்திரா! தமிழகத்தில் ஜெயலலிதா! இவர்கள் சாதனைக்கு பின், எந்த ஆண்கள் இருந்தனர். ஆண்கள் துணையின்றி பெண்களாலும் சாதிக்க முடியும்!எ.டபிள்யூ. ரபீக் அகமது, சிதம்பரம்: இந்த தடவை எப்படியும், பா.ம.க., ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று சொல்கிறாரே, ராமதாஸ்...கட்சி ஆரம்பித்து, 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது; இன்னும் ஒட்டுண்ணியாகவே இருக்கிறது, பா.ம.க., கனவு கண்டு விட்டுப் போகட்டும்... நாம் அதை கலைக்க வேண்டாம்!* அப்துல், திருச்சி: தலைநகரை திருச்சிக்கு மாற்றும், எம்.ஜி.ஆரின் திட்டம், இன்றைய சூழ்நிலையில் தேவைப்படுகிறதா?கண்டிப்பாக தேவைப்படுகிறது. அரசு வேலைகளை முடிக்க, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரத் தேவையில்லை... தென் தமிழக மக்கள் மிகவும் பயன் பெறுவர். சென்னையில் கூட்டம் குறையும், நெருக்கடி தீரும், புகை மண்டலம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது! பி. ஜெயக்குமார், வந்தவாசி: சம்பளம் முழுவதையும் மனைவியிடம் கொடுத்து விடுவேன். வீட்டு நிர்வாகம் முழுவதையும் அவள் பார்த்துக் கொள்வாள்; இது சரிதானா?மிக நல்ல மனைவி கிடைத்துள்ளார், உங்களுக்கு; அத்துடன், சம்பளத் தொகையில் குறிப்பிட்ட அளவு, மாதந்தோறும் வங்கி சேமிப்புக் கணக்கில் சேர்த்து விடுகிறாரா என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள்!என். நித்யா, பொள்ளாச்சி: நம்பிக்கை துரோகம் செய்த தோழி, இப்போது நலிவடைந்த நிலையில் இருக்கிறாள். மீண்டும் என்னிடம் உதவி எதிர்பார்க்கிறாள். கை துாக்கி விடலாமா?மன்னித்து வாழ்வது தான், நிம்மதியான வாழ்க்கை. தாராளமாக கை துாக்கி விடுங்கள்; துரோகத்தை மறந்து தொலையுங்கள்! * எ. ஜெயா, மதுரை: மந்திரிகளை, அரசு அதிகாரிகள் கைக்குள் வைத்திருக்கின்றனரா? அரசு அதிகாரிகள், மந்திரிகளை கைக்குள் வைத்திருக்கின்றனரா?முதலாவதே சரி... அடாவடித்தனம், லஞ்சம், ஊழல் எல்லாம் மந்திரிகளுக்கு முழுமையாகத் தெரியாது! இவை எல்லாம் தெரிந்தவர்கள், அரசு அதிகாரிகள் தான்! இதன் மூலம் மந்திரிகளையும், 'சம்பாதிக்க' வைத்து, தாங்களும் அதில் பங்கிட்டுக் கொள்கின்றனர்! ஸ்ரீ. பூவராகவன், காங்கேயம்: இந்துக்களுக்காக, தி.மு.க., குரல் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறதே!தேர்தல் வருகிறது; தமிழக இந்துக்களிடம் எழுச்சி ஏற்பட்டு விட்டது... இந்து ஓட்டுக்கள் கிடைக்க வேண்டுமே! எனவே தான், இந்த ஆதரவுக் குரல்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !