அந்துமணி பதில்கள்!
ம. சரஸ்வதி, சென்னை: விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் யாருக்கு அதிகம்... கணவனுக்கா, மனைவிக்கா?இரண்டாமவருக்கே அதிகம்! தினமும் உ.பா., சாப்பிட்டு விட்டு வரும் கணவரை, அவர் போடும் சண்டைகளை சகித்துக் கொண்டு, விட்டுக் கொடுப்பவர்கள் அவர்கள் தானே!சா.ஆ. மாரப்பன், கோவை: டி.ராஜேந்தர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்... அவரின் ஆதரவு எந்தக் கட்சிக்கு இருக்கும்?மண்டையை சொறிந்து கொண்டிருக்கிறார், எந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று. இவரே போய் கெஞ்சினாலும், எந்தக் கட்சியும் இவரை அண்டவிடாது என்பதே உண்மை!அ. குணசேகரன், புவனகிரி: மூன்றாவது மொழியாக எதைத் தேர்வு செய்வீர்?சந்தேகமில்லாமல் ஹிந்தியைத் தான்! சில வாரங்களுக்கு முன், நம் வாசகர் ஒருவர், நமது நாளிதழின், இ.உ.இ., பகுதியில் ஒரு கடிதம் எழுதி இருந்தார்... வேலை விஷயமாக சமீபத்தில், மியான்மர் (பர்மா) சென்று இருக்கிறார். இவர், இந்தியர் என தெரிந்தும், ஹிந்தியில் சரளமாகப் பேசியுள்ளனர். இவர், 'திரு திரு'வென விழிக்கவே, 'நீங்கள், இந்தியர் தானே... ஏன் ஹிந்தி தெரியவில்லை...' எனக் கேட்டு இருக்கின்றனர்.நம் பக்கத்து நாட்டினர், ஹிந்தியை சரளமாக பேசும்போது, அது, தமிழருக்கு தெரியவில்லை என்பதை விட, கேவலம் வேண்டுமா?* ரா. காசிநாதன், விருதுநகர்: 'நீட்' தேர்வுக்கு பயந்து, தற்கொலை செய்து கொள்பவர்களுக்கு, இழப்பீடு வழங்குவதில், தங்களுக்கு உடன்பாடு உண்டா?கிடையாது! இது, தற்கொலைகளைத் துாண்டும்! இழப்பீடு மட்டும் அல்லாமல், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்பது, தற்கொலைகளை அதிகரிக்கும்! நம் நாளிதழில் இதுபற்றி செய்திகள் வெளியான பின், அரசியல் கட்சிகள் அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன!ர. கிருத்திக்குமார், நெய்வேலி: வெளி மாநில தொழிலாளர்கள் மீண்டும் தமிழகம் வர ஆரம்பித்து விட்டனரே...அவர்கள் இல்லாமல், ஓட்டல் முதல் கட்டடத் தொழில் வரை, தமிழகத்தில் நடக்காது. நம்மவர்கள் தான், அரபு நாடுகளுக்கு ஓடி விட்டனரே...*ஜி. விஜயகுமார், கோவை: மரங்கள் விட்ட சாபத்திற்கு பாவ விமோசனமே இல்லை என்பதற்கு உதாரணம், பா.ம.க., விமோசனம் பெற வழி என்ன?விமோசனம் பெற, மீண்டும் மரம், செடிகளை நட வேண்டும்! இவர்களது, ஆண்டு பட்ஜெட், முதல்வர் கனவு என்றும் எடுபடாது!கோதை ஜெயராமன், சென்னை: கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன், குளத்து மீன்... எது சுவையானது?எல்லா மீனுமே சுவையானது தானாம்... ஆனால், சென்னையில் வாழ்வதால், கடல் மீன் அருமை என்கிறார், லென்ஸ் மாமா!