உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

சோ. முத்து, திண்டிவனம்: சசிகலா ஆதரவுடன், தனிக்கட்சி துவங்க பன்னீர்செல்வம் திட்டமிடுகிறாராமே...
இது தான், தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது என்பது... 'கிரிமினல்' ஆதரவுடன் கட்சி ஆரம்பித்தார் என்றால், அந்தக் கட்சி உருப்படவே உருப்படாது!
என். கோகிலா, சென்னை: என் தோழி, புத்தகப் புழுவாக உள்ளாளே... இதனால் என்ன பயன்?
புத்தகம் படிப்பது, சிந்திக்க வைக்கும்... அறிவை ஊட்டும்... வரலாற்றைக் கூறும்... விஞ்ஞான கருத்துக்களை தெரிவிக்கும்... பண்பாட்டை வளர்க்கும்... நாகரிகத்தையும் அறிய வைக்கும்... கடமையை செய் என்று அறிவுரை சொல்லும்... கண்ணியத்தை வளர்க்கும்! உங்கள் தோழி பெரிய கெட்டிக்காரி!
கே. நாராயணன், மதுரை: எந்த ஒரு முடிவையும் எடுக்க, என் நண்பன் தயக்கம் காட்டுகிறானே...
எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும், தீவிரமாக யோசிக்க வேண்டும். அவசரமாக, உடனடியாக எடுத்துவிடக் கூடாது. அப்படி இல்லை என்றால், அது, தீமையில் போய் முடியும்!
* ஆர். சுப்பு, திருத்தங்கல்: பஞ்சாப் சிறை கைதிகள், தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் இரண்டு மணி நேரம் செலவழிக்க அனுமதி அளிக்கும் புதிய திட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளதே...
சிறையில் அடைப்பதே, கைதிகளுக்கு எந்தவித இன்பமும் இருக்கக் கூடாது என்பதற்கு தான்... அம்மாநில முதல்வர் ஒரு பெரும், 'குடி'காரர்... போதையில் இப்படி ஒரு திட்டத்தை சொல்லி இருப்பார் போலும்!
எம். கல்பதா, சென்னை: 'ஒரு தாய் மக்களாக இருந்தவர்கள், தனித் தனி குடித்தனம் நடத்துகிறோம். போருக்கு போகும்போது, எல்லாரும் ஒன்றாக சேர்ந்து போகலாம்...' என்ற, டி.டி.வி.தினகரனின் கனவு?
அது, அவரது கனவாக மட்டுமே இருக்கும். இனி, நிஜத்தில் ஒருபோதும் நடக்கப் போவதில்லை!
* வி. சங்கரன், கோவை: ஒரு தலைவனுக்கு உரிய பண்புகளாக எவை இருக்க வேண்டும்?
நல் வழி நடத்திச் செல்பவராக இருக்க வேண்டும். இன்ப, துன்ப உணர்வுகளை சரிசமமாக நடத்த வேண்டும். பொறுமை, இரக்க குணம் வேண்டும். வேறுபாடு காட்டாமல் பிறர் வாழ உதவ வேண்டும்!
பி. கருணாநிதி, கோவை: 'போதும்' என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டுமா என்ன?
கண்டிப்பாக! 'போதும்' என்ற மனத் திருப்தியை வளர்த்துக் கொண்டவர்களுடைய வாழ்க்கை, பயனுள்ளதாகவும், சுவை உள்ளதாகவும் அமையும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !