உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* க. விநாயகம், கடலுார்: நாகரிகம், பண்பாடு என்ன வித்தியாசம்?பழங்களிலே, வெளி அழகு, ஆப்பிள்; உள் அழகு, பலா. காய்களில், வெளி அழகு, மாங்காய்; உள் அழகு, தேங்காய். பறவைகளில், வெளி அழகு, மயில்; உள் அழகு, குயில். மனிதர்களிடம், வெளி அழகு, நாகரிகம்; உள் அழகு பண்பாடு. இது தான் வித்தியாசம்! க. சிந்து, மலேஷியா: ஜாதி ஆதிக்கம், திராவிட மாடல், சனாதனம் என்று, வேண்டாத வெறுப்பை பரப்புவதிலே கவனமாக உள்ளனரே, உங்கள் ஊர் அரசியல்வாதிகள். எப்போது, ஆக்கப்பூர்வமாக செயல்பட ஆரம்பிப்பர்?திராவிட மாடல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வர, மக்கள் முயல வேண்டும். அப்போது, மக்களும் பயன் பெறுவர்; திராவிட மாடல் ஆட்சி நடத்தியோரும் திருந்துவர்! மு. அன்பு, சிதம்பரம்: வாழ்வில் நான் மேன்மையடைய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும். என் வயது: 24.அன்பு... வாழ்வில் மேன்மை அடைய, தாய், தந்தையின் சொல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்; அவர்களை கடைசி வரையிலும் காப்பாற்ற வேண்டும். மேன்மை அடைந்து விடலாம்!க. சிவா, புதுச்சேரி: மனதில் தீமை கலந்து விடுகிறது எனக்கு. இது, எதனால்... இதைப் போக்குவது எப்படி?உங்கள் பேச்சை, நீங்கள் உற்று நோக்குங்கள்; பேச்சில் தீமை கலந்து பேசாதீர்கள். அப்படி பேசினால், மனதிலும் தீமை கலந்து விடும்!பா. கருப்பசாமி, சென்னை: ஒருவனின் செயலுக்கு விளைவு நிச்சயம் என்கின்றனரே...உண்மை தான்... நல்லது செய்தால், நல்லது நடக்கும்; கெட்டது செய்தால், கெட்டது நடக்கும். குற்றம் செய்தவர்கள், சட்டத்திலிருந்து தப்பி விடலாம். ஆனால், இயற்கையின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது! க. லதிகா, ராமேஸ்வரம்: திருமண வரவேற்பு அழைப்பிதழ்களில், மாலை, 6:30 மணி முதல் என்று, நேரம் குறிப்பிட்டு விட்டு, சாவதானமாக, 8:00 மணிக்கு வருகின்றனரே, மணமக்கள்... அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்கலாமா?உங்களின் நேரத்தை காக்க முனைந்தால், நீங்களும் அறிவாளியாக மாறுங்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு, 6:30க்கு செல்லாமல், 8:00 மணிக்கு செல்லுங்களேன்!* எம். சாமி, ராமநாதபுரம்: வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது?அடுத்தவருக்கு நல்லது செய்ததை வெளியே சொல்லக் கூடாது. அடுத்தவர் நமக்கு செய்த உதவியை, அனைவரிடமும் சொல்வது நல்லது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !