அந்துமணி பா.கே.ப.,
இலங்கை - அதுதாங்க, ஸ்ரீலங்கா செல்வதற்கு சென்னையில் முன் கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. கொழும்பு விமான நிலையத்தில் இறங்கிய பின், அங்கேயே விசா வாங்கி, ஊருக்குள்ளே செல்லலாம்.கண்மூடித் திறப்பதற்குள் - அதாவது, இன்று போய், நாளை திரும்புவதான கொழும்புப் பயணம் அவசியமாயிற்று... யாரையும் உடன் அழைத்துச் செல்ல அவகாசமும் இல்லை... இந்த அழகில், உடல் நலமும் பூரண சுகம் இல்லை!ரூம் ரிசர்வ் செய்ய, 'தாஜ் சமுத்திரா'வுக்கு இ-மெயில் ஒன்று அனுப்பினேன்... வழக்கம் போலவே, 60 சதவீத கட்டணக் கழிவில், சமுத்திரத்தை - கடலைப் பார்த்து அமைந்த அறையை ஒதுக்கி, கன்பர்மேஷன் அனுப்பினர்.கையோடு எடுத்துச் சென்ற டிரான்ஸ்சிஸ்டரை ஆன் செய்துவிட்டு, சந்திக்கச் சென்று இருந்த நண்பருக்கு போன் போட்டு, ஓட்டல் அறைக்கு வரச் சொன்னேன்.அந்த நண்பர், இலங்கையில் உள்ள தனியார் வானொலியில் பணியாற்றுகிறார்... மொத்தத்தில் ஒலிபரப்புத் துறையில், 25 ஆண்டுகளாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்...ரிசப்ஷனில் இருந்து அள்ளி வந்திருந்த வீரகேசரி, ஐலண்ட் போன்ற நாளிதழ்களை பார்த்தபடியே, வானொலி கேட்டுக் கொண்டிருந்தேன்.அப்போது, 'மரண அறிவித்தல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானது... 'இளைப்பாறிய இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மரணமடைந்தார்...' என்ற அறிவிப்பு அப்போது ஒலிபரப்பானது.'இதென்னடா... இன்ஸ்பெக்டராவது, இளைப்பாறுவதாவது...' எனக் குழப்பத்தில் இருந்தேன்...அப்போது வந்து சேர்ந்தார் அந்த நண்பர். வந்தவர் இலங்கைத் தமிழில், 'பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பர்... ஆனால், புதன் போன்ற நீங்கள் கிடைத்து விட்டீர்கள்...' என்றார். (மேற் சொன்ன வசனத்தை இலங்கைத் தமிழில், 'தெனாலி' படத்தில் கமல் பேசுவது போல பேசிப் பார்த்துக் கொள்ளுங்கள்!)'அதெல்லாம் சரி சார்... 'பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது...' என்பதன் முழு பொருள் என்ன சார்... விளக்குங்களேன்...' என்றேன்.'பொன் நகைகளோ, பொன் போன்ற பொருட்களோ கிடைத்தாலும், அவற்றைப் பேணுவதற்குச் சிறந்த புதன்கிழமை கிடைக்காது; அநேகமாக ஏனைய நாட்களிலேயே அணியும்படி நேரும் என்பது ஒரு கருத்து.'ஆனால், இதற்கு மற்றொரு பொருளும் உண்டு. பொன் என்பது வானத்திலுள்ள கிரகங்களில், வியாழனைக் குறிக்கும். அப்படியே, புதன் என்று ஒரு கிரகமும் இருக்கிறது.'வானவீதியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனியாகிய கிரகங்களைச் சாதாரண கண்களைக் கொண் டோ, தொலை நோக்கி மூலமாகவோ பார்க்கலாம்.'அவ்விதம் பார்க்கும் போது, பொன் அகப்பட்டாலும், புதன் நம் கண்ணுக்கு புலப்படுவது அரிது. இதையே இந்த பழமொழி குறிப்பிடுகிறது.'வியாழன் கிரகம் மிகப் பெரியது. சூரியனுக்கு அதிக தூரத்தில் உள்ளது. புதன் கிரகமோ சிறியது; சூரியனுக்கு மிகவும் அருகில் உள்ளது. வேறு எந்த கிரகமும் இவ்வளவு அண்மையில் இல்லை.'ஆகையால், புதன், சூரியனுக்குச் சற்று முன்போ, பின்போ உதயமாகி, சூரியனுடன் சற்று முன்போ, பின்போ அஸ்தமிக்கிறது. எனவே, இந்த புதன் கிரகம், சூரிய ஒளியில், பிரகாசம் குன்றி மங்கலாகத் தான் தெரியும்.'ஆனால், வியாழன் சில மாதங்களில் முன்னிரவிலும், சில மாதங்களில் பின்னிரவிலும் புலப்படும். நம் சாதாரண கண்ணாலேயே காணும்படி பிரகாசத்தோடு காணப்படும்.'இதனாலேயே பொன்னாகிய வியாழன் பார்க்கக் கிடைத்தாலும், புதன் பார்க்கக் கிடைப்பது துர்லபம் என்று சொல்லும் பழமொழி உண்டாகியிருக்கிறது...' என்று விளக்கியவர், சிறிது நேரம் தமிழ்நாட்டு தமிழர்கள் மொழி உணர்வு அற்றுப் போனது குறித்து அர்ச்சனை செய்தார்... பின்னர், வால்மீகி, வடமொழியில் எழுதிய ராமாயணத்தில் உள்ள பெயர்களை, தமிழில் எப்படி மொழி பெயர்த்துள்ளார் என்பதையும் கூறினார்.உதாரணத்திற்கு சில:இலக்குமிபதி: திருவின் நாயகன்.பாததூளி: கழல் துகள்.லட்சுமி: தாமரைச் சேயவள்.கிருஷ்ணன்: கரியவன்.பங்கஜம்: அள்ளற் பூ.யக்ஞ சத்ரு: வேள்விப் பகை.பிராண நாயகர்: உயிரனைய கொழுநர்.ஹிரண்யன் : கனகன்.தூமிராட்சன்: புகையின் பொருகண்ணன்.ரிஷ்ய சிருங்கர்: கலைக்கோட்டு முனி.எனக்கு நிஜமாகவே தலை சுற்றியது! பின்னர், அவரிடம், 'இளைப்பாறிய இன்ஸ்பெக்டர் கோவிந்தன்...' பற்றி கேட்டேன். 'இளைப்பாறிய என்றால், 'ஓய்வு பெற்ற' என்று அர்த்தம்...' எனக் கூறினார்.'சாப்பாட்டை முடித்துவிட்டு, நானும் இரவில் இளைப்பாறுகிறேன்...' என்றேன்.சிரித்துக் கொண்டே விடைபெற்றார்!நண்பர் விடை பெற்று சென்ற பின்னரும் இளைப்பாற மனமின்றி, 'கால்பேஸ்' என்ற அந்த புல்வெளி நிறைந்த இடத்தையும், அதையொட்டி உள்ள கடலையும், அலைகளையும் சிறிது நேரம் பார்த்தபடி சாளரத்தில் அமர்ந்திருந்தேன். விமான நிலையம் செல்ல இன்னும், 10 மணி நேரத்திற்கு மேல் இருந்தது.வழக்கமாக உறங்க செல்லும் நேரத்திற்கு, இன்னும் இரண்டு மணி நேரம் இருந்தது...உடன் எடுத்துச் சென்ற புத்தகம் ஒன்றை பிரித்தேன்... வெள்ளை ஆட்சியருக்கு எதிரே, நம் ராஜாக்கள் செய்த தந்திரங்கள் அடங்கிய நூல் அது...பாட்டியாலா மகாராஜா பற்றிய கதையை படிக்க ஆரம்பித்தேன். இதோ அது:பாட்டியாலா மகாராஜாவாக இருந்த பூபீந்தர் சிங்குக்கும், வைஸ்ராயாக இருந்த வெலிங்டன் பிரபுவுக்கும் பகைமை பூண்டிருந்தது. எப்படியும் பூபீந்தர் சிங்கை ஒழித்து விடுவது என்று தீர்மானித்தார் வெலிங்டன். பல கொலை வழக்குகளை ஜோடனை செய்து அதில், பூபீந்தர் சிங்கை சிக்க வைத்தார்.இந்த விஷயம் பூபீந்தர் சிங்குக்குத் தெரிய வந்தது. ஆனால், என்னென்ன வகையில் வைஸ்ராய் தம்மை சிக்க வைத்திருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை.மகாராஜாவுக்கு டில்லியில் ஒரு நண்பர் உண்டு; ஸாஹ்னி என்று பெயர். அவருடைய வெள்ளைக்கார நண்பருக்கு ஒரு காதலி இருந்தாள். அவள் வைஸ்ராயின் அந்தரங்கக் காரியதரிசி. அவளுக்கு ஸாஹ்னி ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் தந்து, வைஸ்ராயின் ரகசிய பைலை சில மணி நேரத்துக்குக் கொண்டு வருமாறு ஏற்பாடு செய்தார்.குறிப்பிட்ட நாளில், இரவு பத்து மணிக்கு காஷ்மீர் கேட் என்னுமிடத்தில் அந்தப் பெண், ஒரு டாக்சியில் வந்தாள், மகாராஜாவைப் பற்றிய பைலுடன்! மிக வேகமாக டைப் செய்யக் கூடிய, 12 பேரைத் தயாராக வைத்துக் கொண்டிருந்தார் ஸாஹ்னி! பைல் வந்ததும், அதிலிருந்த எல்லா பக்கங்களையும் கிடு, கிடுவென்று டைப் செய்து நகலெடுத்தனர் அவர்கள்.காரியதரிசிப் பெண் - ஐம்பதாயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு, எடுத்த இடத்தில் பத்திரமாக பைலை வைத்துவிட்டு, மறுநாளே இங் கிலாந்துக்குப் புறப்பட்டு விட்டாள்.பாட்டியாலா மகாராஜா, 200 பக்கங்களையும் படித்து ஆராய்ந்தார். பைலில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு விவரமாக ஒரு பதில் தயார் செய்தார். தன் அமைச்சரிடம் கொடுத்து நேரே இங்கிலாந்துக்கு அனுப்பி, சக்கரவர்த்தியை சந்தித்து, வெலிங்டனின் அடாவடிச் செயல்களை பற்றி விளக்கச் செய்தார். ஒரு முக்கியமான குற்றச்சாட்டும் அதில் இருந்தது...வெலிங்டனும், அவர் மனைவியும் ஒரு முறை பாட்டியாலாவுக்கு வந்திருந்ததாயும், அரச குடும்பத்துக்குச் சொந்தமான ஆபரணங்களை அவர்கள் பார்வையிட்டதாகவும், 30 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு நெக்லஸ் தனக்கு வேண்டும் என்று வெலிங்டன் சீமாட்டி கேட்டதாகவும், பாட்டியாலா மகாராஜா அதைக் கொடுக்க மறுத்ததால், பகை மூண்டு, பாட்டியாலா மகாராஜா, மீது கண்டபடி புகார்கள் செய்து அவரை பதவியிலிருந்து ஒழிக்க, வைஸ்ராய் சதி செய்து வருவதாயும் அந்தக் குற்றச்சாட்டில் கூறியிருந்தார்.இந்த விஷயம் எதுவும் வெலிங்டன் பிரபுவுக்குத் தெரியாது. தாம் தயாரித்து வைத்திருந்த பைலையும், குற்றச்சாட்டையும் சக்கரவர்த்திக்கு அனுப்பினார் அவர் பாட்டுக்கு...இதற்கு, பிரிட்டிஷ் பிரதம மந்திரி, என்ன நடவடிக்கை எடுத்தார்... அதன் பின், பாட்டியாலா மகாராஜாவின் செயல்கள் என்னவானது?பாட்டியாலா மகாராஜா தெரிவித்தது போலவே, அதில் குற்றச்சாட்டுகள் இருப்பதைக் கண்டார் சக்கரவர்த்தி. 'தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறியுங்கள்...' என்று சொல்லி விட்டார் பிரிட்டிஷ் பிரதம மந்திரி.வெற்றி பெற்ற பூபீந்தர்சிங்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதற்குப் பிறகு, அவர் வெலிங்டன் பிரபுவைக் கடுகளவும் பொருட்படுத்துவது கிடையாது. அவரிடமிருந்து வரும் விழா அழைப்புகளுக்கு அவர் செல்வதில்லை.ஒரு முறை வெலிங்டன் சீமாட்டி, ஒரு விருந்தில் மகாராஜாவைச் சந்தித்த போது, அவருடைய சமஸ்தானத்தில் உள்ள பிஞ்சோர் என்ற உல்லாசத் தலத்தில் சில நாட்கள் தங்க வேண்டுமென்று கேட்டார். 'அரச குடும்பத்தைத் தவிர யாரும் அங்கு தங்குவதற்கு அனுமதி கிடையாது...' என்று 'பட்' டென்று சொல்லி, வெள்ளைக்காரியின் மூக்கை உடைத்தார் பூபீந்தர் சிங்!— வல்லவனுக்கு, வல்லவன் இவ்வையகத்தில் உண்டுதானே!