அந்துமணி பா.கே.ப.,
சென்னையில், 'குவாலிட்டி அருணா இன்' என்ற ஒரு பெரிய ஓட்டல் உண்டு. அங்கே சீன உணவுகளுக்கென்றே, 'மெயின் லாண்ட் சைனா' என்ற உணவு விடுதி உண்டு... 'இங்கு மிகச் சுவையான, ஒரிஜினல் சீன உணவு கிடைக்கிறது' என, தனியார், 'டிவி' சேனல் ஒன்றில், பைனான்ஸ் மானேஜராக இருக்கும் நண்பர் கூறுவார்; அங்கு வரும்படி அடிக்கடி அழைப்பார்.சென்ற ஞாயிற்றுக்கிழமை தான் அங்கே செல்லும் வாய்ப்பு அமைந்தது... ஞாயிறு மதியம் 12.45 வரை அலுவலக வேலைகளை முடித்து, 'சாப்பாட்டுக்கு எங்கே போகலாம்?' என யோசித்த போது, ஒரு போன் கால்... டாக்டர் நண்பர் ஒருவர் அழைத்தார்!டாக்டருக்கு ஞாயிற்றுக் கிழமை மட்டுமே ஓய்வு என்பதால், நண்பர் அன்வர் பாய் மற்றும் நண்பர்கள் கோஷ்டியுடன், மதியமே உ.பா., பார்ட்டியை ஆரம்பித்து விடுவார். பார்ட்டி நடக்கும் இடத்தை சொன்னால், 'ஷாக்' அடிக்கும் உங்களுக்கு...மெரினா கடற்கரையில், டி.ஜி.பி., ஆபீஸ் எதிரே, பீச் உள் ரோடில் இருக்கும் மரத்தடி தான், 'வென்யூ!' போனில் பேசிய டாக்டர், 'மணி... பேச்சுத் துணைக்கு வாயேன்... அப்படியே, 'மெயின் லாண்ட் சைனா'வுக்கு போகலாம்...' என்றார்.'வழக்கமான இடம் தானே?' என்றேன்.'இல்லை...' என்றவர், வேறு ஓட்டலை சொல்ல, அங்கே சென்றேன். இரண்டு மணி அளவில் அங்கிருந்து புறப்பட்டு, சீன உணவு விடுதிக்கு சென்றோம்... அங்கே, எனக்கு அறிமுகமான வயதான பெரியவர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.உ.பா., கோஷ்டியிடம், 'ஹலோ சொல்லிட்டு வந்து விடுறேன்...' எனக் கூறி, கழன்று கொண்டேன்.பெரியவர், அந்த கால படத் தயாரிப்பாளர்... சினிமா பத்திரிகை ஒன்றும் நடத்தியவர்... இன்று ஓய்வு பெற்று, மூணாறு பக்கம் உள்ள தம் எஸ்டேட்டில் வசித்து வருகிறார்.பெரியவருக்கு, 80 - 82 வயது இருக்கும். ஒரு பல் கூட விழவில்லை... படிக்க மட்டுமே கண்ணாடி அணிவதாகக் கூறினார்.'சினிமா அனுபவங்கள்... நீங்கள் பத்திரிகை யாளராக இருந்தபோது நடந்த சம்பவங்களைக் கூறுங்களேன்...' என்றேன்.சினிமா பற்றி, பல விஷயங்கள் கூறிய பின், 'வீட்டில் தான் சிவாஜி கணேசன் இருக்கிறார் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன் தெரியுமா? அவரது வீட்டுக்கு முன் இருக்கும் கூர்க்கா, நாற்காலியை விட்டு எழுந்து சுறுசுறுப்புடன் அவனுடைய பாஷையில் ஏதாவது பேசிக் கொண்டிருப்பான்...'சிவாஜி கணேசன் சகோதரர் தங்கவேலு உள்ளேயும், வெளியேயும் போய் வந்து கொண்டிருப்பார்; புதிதாக வைத்துக் கொண்டிருக்கும் மீசையைத் திருகி விட்டபடி.வாயிலுக்கு முன், ஜீப் நின்று கொண்டிருக்கும். அதை ஓட்டிக் கொண்டு தங்கவேலு கிளம்பினால், அது நேராக எந்த கால்பந்து மைதானத்திலாவது போய்த்தான் நிற்கும். 'தம்பிக்கு இன்று ரெஸ்ட்; தூங்கப் போய் விட்டான்...' என்று உற்சாகக் குரலில் பேசுவார்.ஆனால், அந்த ரெஸ்ட், சில சமயங்களில் ஏ.பி.என்., வீட்டுக்கு வந்து, 'ஏசி' ரூமைப் பார்த்து விட்டுப் போவதிலும், வீனஸ் பிக்சர்சுக்கு திடீர் விஜயம் செய்வதிலும் கழிவது உண்டு! அந்த ஓய்வு நேரங்களில், கிராப்பை சரி வர வாராமல், பொத்தான்களில்லாத வெள்ளைச் சட்டையுடன் காணப்படுவார் சிவாஜி கணேசன்.வீட்டில், எம்.ஜி.ஆர்., இருப்பதை, வாயிலிலே நின்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் கூட்டம் மூலம், கண்டுபிடித்து விட முடியாது! ஏனெனில், அவர் வீட்டில் இருந்தாலும், இல்லா விட்டாலும், ஒரு கூட்டம் எப்பொழுதும் நின்று கொண்டு தான் இருக்கும். ஆனால், வீட்டைச் சுற்றியும், காரைச் சுற்றியும் நின்று கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., அலுவலர்கள், தங்களுடைய அட்டகாசப் பேச்சை ஒடுக்கி, அடக்க, ஒடுக்கமாகக் காணப்படுவர். குறுக்கும், நெடுக்குமாக ஓடிக் கொண்டிருப்பார் எம்.ஜி.ஆரின் காரியதரிசி வீரப்பன்.இவை எல்லாம் எம்.ஜி.ஆர்., அவரது காதம்பரி இல்லத்தில் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டும் அடையாளங்கள்.வீட்டுக்குள்ளிலிருந்து எம்.ஜி.ஆர்., வந்து அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவுடன் டெலிபோனில் பேசுவார். வருகிற போன்களுக்கு, 'நான் தான் எம்.ஜி.ஆர்., பேசுகிறேன்...' என்று பதில் அளித்துப் பேசுவார். 'காரியதரிசியை விட்டு போனை எடுத்து முதலில் பேசச் சொல்லி, அவசியமானால், தான் வாங்கிப் பேசுவது என்ற, 'பிசினஸ்' முறை எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கம் கிடையாது.'வீட்டில் ஜெமினி கணேசன் இருக்கும் போது, 'குளித்துக் கொண்டிருக்கிறார்... தேகாப்பியாசம் செய்து கொண்டிருக்கிறார்... டென்னிஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்...' என்றும், 'வருகிற சமயம்' என்றும் அவரது காரியதரிசி ஏதாவது ஒன்று சொல்வது வழக்கம். ஜெமினி கணேசனின் மகள்களில் ஒருத்தி, நன்றாக உடை உடுத்தி வாயிலிலே நிற்பாள். அவள் ஜெமினி கணேசனின் காரைச் சுற்றி வருவாள். அதிலிருந்து, அவளுடன், அப்பா கணேசன் எங்கேயோ பயணம் போகப் போகிறார் என்று யூகிக்கத் தோன்றும். ஆனால், கார் டிரைவர் அந்தச் சிறுமியை காரில் ஏற்றி வீணைப் பயிற்சிக்கு, மாம்பலம் துரைசாமித் தெருவிலுள்ள ஒரு வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார்.வீட்டின் இன் னொரு வழியாக, இன்னொரு காரில் ஏறி, ஸ்டுடியோ வுக்கோ, சாவித்திரி வீட்டுக்கோ கிளம்பிப் போயிருப்பார் ஜெமினி கணேசன்.வீட்டில் வில்லன் டி.எஸ்.பாலையா இருக்கிறாரா என்று அறிந்து கொள்ள, ஒரு நாற்காலியும், வெள்ளி வெற்றிலைப் பெட்டியுமே சான்று. ஒரு மாமரத்துத் தாழ்ந்த கிளைக்கு அருகில் அவை இரண்டும் காணப்படுமானால், வீட்டில் பாலையா இருக்கிறார் என்று சொல்லி விடலாம். அவர், சட்டை கூடப் போடாமல், நாற்காலியில் அமர்ந்து வெற்றிலைப் பெட்டியில் வெற்றிகரமாக கை வைப்பதை வீதியில் இருந்தபடியே காணலாம்.சில சமயங்களில், வேடிக்கை பார்க்கும் கூட்டம் அதிகமாகி விடுமேயானால், அவர்களை பாலையா காது கேட்கும்படி, காவல்காரன், விரட்டி அடிக்க முயல்வது உண்டு. அப்போது காவல்காரனை தன் அருகே அழைத்து, 'அவர்கள் நின்றால் நின்று விட்டுப் போகட்டும்; நீ, உன் இடத்திலேயே நில்லு...' என்று சொல்வார் பாலையா. சில சமயங்களில் பாலையாவுக்கும், அவரது மனைவிக்கும், அந்த மரத்தடியிலேயே முக்கியமான குடும்பப் பேச்சு கூட நடைபெறும்...'— இப்படி பல சுவையான கதைகளைக் கூறிக் கொண்டிருந்தபோது, 'தொபீர்' என சப்தம் கேட்டது. சப்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தால், முழு, 'உ.பா.,'வில் இருந்த குண்டு சேட்டு ஒருவர், நிதானம் தவறி சேரில் இருந்து கீழே விழுந்து இருந்தார். நாங்கள் புறப்பட்டோம்!***ஓய்வாக அமர்ந்திருந்த குப்பண்ணாவுக்கு வேலை கொடுக்க எண்ணி, 'திசைச் சொல்... திசைச் சொல் என்கிறார்களே... அப்படின்னா என்ன?' எனக் கேட்டேன்.'பல திசைகளிலுமுள்ள பல மொழிகளில் இருந்தும் வந்து, வழங்கி நிலைக்கும் சொற்களை, இலக்கணத்தில் திசைச் சொல் என்கின்றனர்...' என விளக்கமளித்தார் குப்பண்ணா.'உதாரணம் சொல்லுங்களேன்...' என்றேன்.'இதோ... கேட்டுக்கோ... சாவி - போர்த்துக்கீசிய மொழி; சிலுவை - சிரிய மொழி; தகராறு - அரபு; சவாரி - பாரசீகம்; சேனை -சமஸ்கிருதம்; துப்பாக்கி - இந்தி; செவிடு - தெலுங்கு; தண்டால் - கன்னடம்.'அதைப் போலவே, தமிழ் மொழியில் இருந்து வேறு மொழிகளில் சென்று வழங்கி நிலைத்துள்ள சொற்களும் உண்டு. நான் சொல்லப் போகும் சொற்கள் சிறிது உச்சரிப்பு மாற்றத்துடன் வேறொரு மொழிச் சொல்லாக வழங்கி வருகின்றன...'மிளகு தண்ணீர் - முளிகாடாணி; சுருட்டு - ஷெரூட்; கறி - கறி; கட்டுமரம் - கட்டமரான்; வெற்றிலை - பெடல்; கயிறு - கயர்; மாங்காய் - மேங்கோ...''அந்த மொழி எது?' என்றேன்.'இது கூடத் தெரியலையா... மக்கு... இங்கிலீஷ் தான்...' என்றார் குப்பண்ணா!***