உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அது ஒரு சனிக்கிழமை மாலை!நானும், லென்ஸ் மாமாவும் மட்டும்தான்! மற்ற பெரிசுகள் யாரும் கிடையாது...பெசன்ட் நகர் பீச்சில், அவரது வண்டியில் அமர்ந்திருந்தோம்...சனிக்கிழமையாதலால் எக்கச்சக்கமான, 'கலர்...' சைட் அடித்துக் கொண்டிருந்தார் மாமா...பாட்டுக் கேட்க எண்ணிய நான், வண்டியின், டேஷ் போர்டை குடைந்தேன். ஸ்வீடிஷ் குரூப் அபாவின் கேசட் கிடைத்தது... அதைச் சுழல விட்டேன்!காதலி தன்னை ஏமாற்றி, இன்னொருவனையும் நேசிப்பதாக தப்புக்கணக்கு போடும் காதலன், மனம் உருகி பாடும் பாடல் அது...பாடல் முடிவில் அவனது சந்தேகம் தவறு என்பதை புரிய வைக்கிறாள் காதலி...— இதுதான் பாடல் வரிகள்... இனிமையான குரலில், இசையில் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, அலை கடலை ரசித்துக் கொண்டிருந்த என் கவனத்தை கலைத்தார் லென்ஸ் மாமா...'ஏய்... அங்க பாரு...' என ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினார்.அவர் காட்டிய திசையில், பைக் மீது இரண்டு இளைஞர்கள் அமர்ந்து இருப்பது, சோடியம் வேப்பர் விளக்கு வெளிச்சத்தில் தெரிந்தது...'ரெண்டு பசங்க உக்கார்ந்து இருக்காங்க... அதுக்கு என்ன?' எனக் கேட்கவும், எரிச்சலான லென்ஸ் மாமா, தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, 'வர, வர உனக்கு கண்ணே தெரியல... இதப் போட்டுக்கிட்டு பாரு...' எனக் கூறினார்.இடது கையால் கண்ணாடியை ஒதுக்கி, மாமா சுட்டிக் காட்டிய திசையை, கூர்ந்து நோக்கினேன்...அவர்களை நாங்கள் இருவரும் கூர்ந்து நோக்குவதை அறிந்து கொண்ட அவ்விளைஞர்களில் ஒருவன், தன் இரு கைகளை தூக்கி, பின் பக்கக்கழுத்தில் முட்டுக் கொடுத்து, நெஞ்சை நிமிர்த்தவும், அய்யயோ... அது இளைஞன் அல்ல... இளைஞி என்பதை உணர்ந்தேன்.அவர்கள் இருவரிடையே என்ன ஊடலோ, தெரியவில்லை... திடீரென, பைக்கில் இருந்து இறங்கி, வேக, வேகமாக கடலை நோக்கி நடந்தாள் அந்த இளம்பெண்... பைக்கில் அசையாமல் அமர்ந்து இருந்தான் இளைஞன்! கடலை நோக்கி நடந்த இளம்பெண், அங்கிருந்த சிறுவர் விளையாடும் சறுக்கு மரத்தில் சாய்ந்து கொண்டாள்...சிறிது நேரத்திற்கு பின், அவளை நோக்கி இளைஞன் செல்ல, அவனை, 'அவாய்ட்' செய்து, வேறு திசை நோக்கி சென்று மறைந்தாள் அப்பெண்.'இவங்களுக்குள்ளே என்ன பிரச்னை இருக்கும் மாமா? 'கல்யாணம் செஞ்சுக்க'ன்னு அவள் கேட்க, இவன், 'டபாய்'க்கிறானோ... இல்ல, வேறு ஏதும் பிரச்னை இருக்குமா?' எனக் கேட்டேன்...'இந்த கால மெட்ராஸ் பொண்ணுங்களைப் பத்தி இன்னும் புரிஞ்சுக்கலை நீ... கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லி, இப்பெல்லாம் பையன்கள்தாம் பொண்ணுங்கள கெஞ்சிக்கிட்டு பின்னாலே அலையறானுங்க... பொண்ணுங்க இப்ப விவரமாயிட்டாளுக... இவன விட, பெட்டரா சம்பாதிக்கிறவன... பைக் மட்டும் வச்சிருந்தா, கார் வச்சிருக்கிறவன... குட்டிக் கார் வச்சிருந்தா, பெரிய கார் வச்சிருக்கிறவன... அதிலேயே விலை கூடின கார் வச்சிருக்கிறவனத் தேடிப் போறாளுகப்பா... இப்பல்லாம் பொண்ணுக ரொம்ப விவரம்...' என பெரிய, லெக்சர் ஒன்று கொடுத்தார். அந்த நேரம், அப்பெண் மட்டும் தனியே நடந்து வந்து, மாமாவின் வண்டி எதிரே உள்ள பிளாட்பாரத்தின் கட்டை சுவரில் அமர்ந்தாள்...கருப்பு டெனிம் பேன்ட், லூசான ஆண்கள் அணியும் மேல்சட்டை, செக்டு டிசைன்... ஆண்களைப் போலவே சிகை அலங்காரம் செய்திருந்தாள். மாமாவையே உற்று நோக்கிக் கொண்டிருந்தவள், திடீரென எழுந்து, மாமா, அருகே வந்து, 'உட் யூ மைன்ட் டான்சிங் வித் மீ அட் அம்பாசி டர் பல்லவா?' என கேட்டாள்...அதாவது, அம்பாசிடர் பல்லவா என்ற ஓட்டலில், டிஸ்கோ டான்ஸ் பார்ட்டியில் கலந்து, என்னோடு டான்ஸ் ஆட வருகிறீர்களா எனக் கேட்டாள்...எனக்கு ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சி... நைசாக மாமாவின் தொடையில் கிள்ளி, 'கட்' பண்ணி விடுங்க... என குறிப்பு கொடுத்தேன்... ம்... ஹும்... மாமா லேசுப்பட்டவரா... விடவில்லை.'ஐ ஸா யூ அலாங் வித் யுவர் கம்பானியன் சம் டைம் பேக்...' என்றார்.— உன் கூட ஒரு பையனை கொஞ்ச நேரம் முன்னாலே பாத்தேனே என்பது அதன் பொருள்.அவள் உடனே, 'புல் ஷிட்...' என வெறுப்புடன் கூறினாள்.— மாட்டுச் சாணி என்பது அதன் பொருள்.தொடர்ந்து, அந்த பெண்ணின் குலம், கோத்ரம், சொந்த ஊர், அப்பா, அம்மா, உடன் பிறப்பு, படிக்கிறாளா, வேலை செய்கிறாளா என விலாவாரியாக பழங்காலப் பாணியில் மாமா கேட்க, அவள், 'ஆர் யூ கோயிங் டு மேரி மீ ஓல்ட் மேன்... ஷûயர் வேஸ்ட் ஆப் டைம் டாக்கிங் அண்ட் இன்வைட்டிங் யூ...' என கூறி, விடு விடுவென நடந்து சென்று, தன் யமஹா பைக்கை ஒரு மிதி மிதித்து பறந்து சென்று விட்டாள்.மூக்கு உடைப்பட்ட மாமா, 'என்னைக் கிழவன்னு சொல்லிட்டாப்பா... கல்யாணமா பண்ணிக்க போறன்னு கேட்டுட்டாப்பா... எங்கூடப் பேசுன டைம் வேஸ்ட்ன்னு சொல்லிட்டுப் போறாப்பா... அவள... அவள...' என்றபடியே, வண்டியை கிளப்ப முயன்றவரை அமைதிப்படுத்தினேன்.'விடுங்க மாமா... அவளுக்கு என்ன விரக்தியோ, கவலையோ, டென்ஷனோ... அவள இப்போ துரத்திக்கிட்டுப் போய், வீண் வம்ப விலைக்கு வாங்காதீங்க... நீங்களும் டென்ஷனாகி, உடம்பையும், மனசையும் கெடுத்துக்காதீங்க...' எனக் கூறினேன்.அதன்பின், ஒரே சிந்தனைதான்... யார் இவள்? இவளை போல டிஸ்கோ செல்லும் பெண்கள், எங்கிருந்து வருகின்றனர்? பகலிலும், சனி, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில் எங்கே செல்கின்றனர் இவர்கள்... பெரிய இடத்துப் பெண்களாகக் காட்சி அளிக்கின்றனரே... இவர்களது பெற்றோர் இதற்கெல்லாம் எப்படி அனுமதிக்கின்றனர்...— விடை கிடைக்காத கேள்விக் கணைகள்... என்றாவது ஒரு நாள் பதில் கிடைக்கும்; தெளிவு பிறக்கும்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !