உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பெண்களின் பிரச்னைகள், அவர்களது கஷ்டங்கள், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் - கொடுமைகள் ஆகியவை குறித்து தொடர்ந்து நான், 'ஸ்டடி' செய்து வருவதாலும், எழுதி வருவதாலுமோ, என்னவோ, தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து பெண்கள் எனக்கு தொடர்ந்து எழுதி வருகின்றனர். அதுமட்டுமல்ல, இப்படிப்பட்ட துன்பங்களுக்கு இலக்காகும் பெண்களை, எதிர்பாராத விதமாக அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் தாமாகவே அமைந்தும் விடுகின்றன.நானும், லென்ஸ் மாமாவும் சமீபத்தில் மலை வாசஸ்தலம் ஒன்றுக்கு சென்று இருந்தோம். அப்போது ஆன்மிக பெரியவர் ஒருவர் அங்கு முகாமிட்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். அவரது பக்தர்கள், ஏராளமான கார்களில் வந்திருந்தனர். பக்தர்கள் வந்த கார்கள் நிறுத்தப்பட்டு, போக்குவரத்திற்கு சிரமம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.போக்குவரத்திற்கு இடைஞ்சலாக பக்தர்களின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது லென்ஸ் மாமாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது.மாமா, சிறந்த பக்தர் தான். ஆனால், கோவில் - குளம், மடங்கள், சன்னியாசிகள்- சாமியார்கள் என, தரிசனங்களுக்கு செல்வதை எதிர்ப்பவர். அதிலும், முக்கியமாக சித்து வேலைகளில் ஈடுபடும் - குறி சொல்லும் சாமியார்களின் கடும் எதிர்ப்பாளர்.ஒரு சாமியாரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரை கடுமையாக விமர்சனம் செய்தபடியே என்னுடன் நடந்து வந்தார். அவர்களது பக்தர்களையும் மாமா விட்டு வைக்கவில்லை.'வாழ்வின் ஆதாரமே நம்பிக்கை தான் மாமா... நீங்கள் குறிப்பிடும் சாமியார் மீது சிலருக்கு நம்பிக்கை இருக்கிறது... அவரது போதனைகள் அவர் மீது நம்பிக்கை கொண்டவர்களின் மனதை சாந்தப்படுத்து கிறது; தெம்பை அளிக்கிறது; தைரியம் கொடுக்கிறது; நிம்மதி அளிக்கிறது... இதே மூடத்தனமாக மாறும்போது தான் கண்டிக்கப்பட வேண்டியவைகளாகின்றன...' என நான் ஆரம்பிக்கவும், 'மூட நம்பிக்கைன்னா இன்னா?' என சென்னை மொழியில் குரல் எழுப்பி, சண்டைக் கோழி போல சிலுப்ப ஆரம்பித்து விட்டார்.சரியான மூடில் இல்லை மாமா... விவாதத்தை பின்னர் வைத்துக் கொள்ளலாம் என எண்ணி, சட்டென நான் மவுனமான நேரம்...'எக்ஸ்கியூஸ் மீ...' என்ற பெண் குரல் ஒன்று, எங்களுக்கு பின் பக்கம் இருந்து வந்தது. உடனே திரும்பியவர் லென்ஸ் மாமா. நானும் திரும்பிப் பார்த்தேன். 30 முதல், 35 வயது வரை மதிக்கத்தக்க மூன்று பெண்மணிகள், எங்களுக்கு மிக அருகே வந்து நின்றனர்.'உங்களது விவாதங்களை கேட்டுக்கொண்டு தான் வந்தோம்...' என ஆரம்பித்தார் அவர்களில் ஒரு பெண்மணி. பேச்சு மும்முரத்தில், எங்கள் பின்னால் மிக நெருக்கமாக இவர்கள் வந்ததைக்கூட நாங்கள் கவனிக்காமல் இருந்தது எனக்கு வியப்பாகத்தான் இருந்தது.தொடர்ந்தார் அப்பெண்மணி: 'பெரியவரே... (லென்ஸ் மாமாவை பார்த்து!) நாங்கள் (பெரியவரின் பெயரை குறிப்பிட்டு) — ன் தீவிர பக்தைகள்...' எனச் சொல்லும் போதே... லென்ஸ் மாமா, மூன்று பெண்களும் அவர்களாகவே வந்து பேச்சுக் கொடுத்த உற்சாகத்தில் ஆங்கிலத்திற்கு தாவி, 'நாம் நடந்து கொண்டே பேசலாமே!' என்றார். அவர்களும், 'எங்களுக்கு ஆட்சேபனை இல்லை...' எனக் கூறி நடக்க ஆரம்பித்தனர்.விவாதத்தில் இனி மாமாவின் பங்கு, 'எஸ்... எஸ்... யூ ஆர் கரெக்ட்... ட்ரூ... ஐ ஆல்சோ அக்செப்ட்...' என, 'ஆமாம் சாமி'யாகத் தான் இருக்கப் போகிறது என்ற அனுபவ அறிவால், என் நடையின் வேகத்தைக் குறைத்து, பின் தங்க ஆரம்பித்தேன். இதைக் கவனித்து, விவாதத்தில் கலந்து கொள்ளாத இரு பெண்கள், என்னை அணுகி, ஆங்கிலத்தில், 'ஏன் நீங்களும் எங்களுடன் சேர்ந்து நடந்து, அவ்வப்போது உங்களது கருத்துக்களையும் தெரிவிக்கலாமே!' என்றனர்.லேசாக சிரித்து மழுப்பி, 'ஐ நோ... நோ... இங்கிலீஷ் கம்...பட் அண்டர்ஸ்டேண்ட்...' என சொன்னதும், என் ஆங்கிலத்தைக் கேட்டு தமக்கு வந்த குபீர் சிரிப்பை உதட்டுக்குள்ளேயே அடக்கி, என்னுடனேயே சேர்ந்து நடக்க ஆரம்பித்தனர். நான் ஒன்றுமே பேசாமல் நடந்ததால், அவர்களே பேச ஆரம்பித்து, நான் யார், லென்ஸ் மாமா யார் என்று விசாரித்தனர். நான் ஒரு எழுத்தாளர்; அவர் ஒரு போட்டோகிராபர் என்பதை என் வாயைப் பிடுங்கி தெரிந்து கொண்டனர்.அதற்குள் பெரியவர் தரிசனம் தரும் இடம் வந்து விட்டதால், மூவரும் விடை பெற்றனர். அப்போதுதான் நினைவு வந்தவராக, மாமா, 'அந்து... அவங்க யார்? எங்கே தங்கி இருக்காங்க... எத்தனை நாள் இங்கே இருக்கப் போறாங்க... என கேக்காம விட்டுட்டேனே...' என கையை உதறிக் கொண்டார்.அன்று இரவு நாங்கள் தங்கி இருந்த ஓட்டலின், 'டைனிங் ஹாலில்' உணவு உண்ணச் செல்லும்போது, மாலையில் சந்தித்த அம்மூன்று பெண்களும் அங்கு அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதைக் கண்ட லென்ஸ் மாமா என்னை, 'அம்போ' என விட்டுவிட்டு, அவர்கள் அருகே இருந்த காலி நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து, அவர்களுடன் உற்சாகமாக பேச ஆரம்பித்தார். நான் தனியே நிற்பதை கண்ட அப்பெண்கள், என்னையும் அழைத்து தம் டேபிளிலேயே இடம் அளித்தனர்.அப்போது தான் அவர்களும் அதே ஓட்டலில் தங்கி இருப்பதும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், மூவரும் ஆண் துணை இல்லாமல் வந்திருப்பவர்கள் என்பதும் தெரிந்தது. உணவை முடித்து, அந்த ஓட்டலின் புல்வெளியில் அமர்ந்து பேச ஆரம்பித்தோம்.'சார்... நீங்கள் ஒரு எழுத்தாளர் எனக் கூறியதால், எங்களைப் பற்றி கூற வேண்டும் என மாலையில் உங்களை சந்தித்த பின் எங்களுக்குள் பேசிக் கொண்டோம்... ஆனால், மீண்டும் எப்படி சந்திப்பது என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, நீங்கள் வந்து விட்டீர்கள்... எங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், உங்கள் எழுத்துக்களின் மூலம் எவ்வகையிலாவது பெண் இனத்திற்கு பலன் கிடைக்கும் என நம்புகிறோம்...' என பீடிகையுடன் ஆரம்பித்து, தங்களைப் பற்றி கூறினர்:அதில், 32 வயதான ஒரு பெண்மணி... இவருக்கு, 13 வயதில் திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். அப்போது, இவரது கணவரின் வயது 27! தன் 15வது வயதிலும், உடனே அடுத்த, 16வது வயதிலும், இரு குழந்தைகளை பெற்று, குழந்தைகளுடன் குழந்தையாக வளர்ந்து இருக்கிறார். சிறு பெண் என்பதால், தாம்பத்ய உறவு கண்டு அஞ்சி, வெறுத்து ஒதுங்கி இருக்கிறார். இதனால், இவரது கணவர், 'ஓட்டல் சாப்பாடு'களை தேடி அலைய ஆரம்பித்தவர், இன்னும் அதை நிறுத்தவில்லையாம்! அது மட்டுமல்ல, வீட்டிலேயே சமையல் அறையில், வீட்டு வேலைக்காரியுடன் இணைவதைக் கண்டு, செய்வதறியாது தவித்திருக்கிறாள்.'மனைவிக்குத் தான் விஷயம் தெரிந்து விட்டதே, இனி என்ன பயம்!' என்ற தைரியத்தில், இச்செய்கை தொடர்ந்து இருக்கிறது. அத்துடன் தீராத குடி! இது மட்டுமல்ல, தாய் வீட்டில் இவருக்கு சீதனமாகக் கொடுத்த, 200 பவுன் நகையையும், இப்பெண்மணிக்கு, 20 வயதாவதற்குள், விற்று - அடகு வைத்து அதை மீட்க முடியாமல் காலி செய்து இருக்கிறார்.அந்த நேரத்தில்தான் தன் நிலை புரிய ஆரம்பித்திருக்கிறது அப்பெண்மணிக்கு. அடிப்படை கல்வி இல்லை... எந்தத் தொழிலும் தெரியாது, கல்வி இல்லாததால், கவுரவமான வேலைக்கு செல்ல இயலாத நிலை! படிக்க ஆரம்பித்து இருக்கிறார். இன்று, வெள்ளைக்காரர்கள் ஆங்கிலம் பேசுவது போன்று இங்கிலீஷில் வெளுத்துக் கட்டுகிறார். அக்கம், பக்கம், தெரிந்தவர், உறவினரிடம் கடன் வாங்கி, மிகச்சிறிய அளவில் ஒரு தொழில் தொடங்கி இருக்கிறார். இன்று இவரிடம், 10 பெண்கள் வேலை செய்கின்றனர்; செலவு போக மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார். கணவரை ஒதுக்கி வைத்துள்ளார்.இன்னொரு பெண் வயது, 34. இவருக்கு, 18 வயதில் திருமணமாகி இருக்கிறது. இவருக்கு, 19 வயதில் ஒரு மகனும், 20 வயதில் ஒரு மகளும் பிறந்திருக்கின்றனர். இவர் வட மாநிலத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ்ப் பெண். சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கின்றனர். நன்கு படித்தவர் தான் அவர்.இவர்களது பிரச்னை வினோதமானது. தன்னை விட மனைவி அழகு என்பதில் பெரும் தாழ்வு மனப்பான்மை இவர் கணவருக்கு! இதனால், திருமணம் முடிந்த நாளில் இருந்து மனைவியுடன் சரியாகப் பேசுவது கிடையாது. 'ம்... சரி... இல்லை...' போன்ற ஓரிரு வார்த்தைகள் தான்.ஒரு காலக்கட்டத்தில், மனைவியின் மீது சந்தேகம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அப்பொழுது அடி - உதைகளும் ஆரம்பமாகி இருக்கின்றன. முகம் என்று பாராமல் கூட பெல்ட்டால் அடி விழுந்திருக்கிறது. அது மாறா வடுவாக முகத்தில் இன்றும் தெரிவதைக் காண முடிந்தது. தாம்பத்திய உறவிலும் மனைவிக்கு பூரணத்துவம் கொடுக்க இயலாதவராக இருந்திருக்கிறார். அவ்வுறவும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ, மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தானாம்!இப்படிப்பட்டவர், கடைசியாக ஏழு, எட்டு மாதங்களுக்கு முன், மயக்கம் வரும் அளவுக்கு, தெருவில் அடித்து உதைத்திருக்கிறார் மனைவியை. காயம் பட்ட மனைவியை மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல் அலுவலகம் சென்று இருக்கிறார்.உடனே, பக்கத்து வீட்டு பெண்மணி உதவியுடன், வீட்டைக் காலி செய்து, தன் இரு குழந்தைகளையும் உடன் அழைத்து, உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்.பின், தம் பிறந்த வீட்டினர் உதவியுடன் தனி வீடு பிடித்து இப்போது வாழ்கிறார். இவ்வளவுக்குப் பிறகும், மனைவி இருக்கிறாளா, இறந்தாளா என்பது பற்றி கவலைப்படாமல் இருக்கிறாராம்! அத்துடன் இவருக்கு பெற்றோர் அளித்த, 150 பவுன் தங்க நகையையும் அவரே வைத்துக் கொண்டுள்ளாராம்!'நகை போனாப் போகுது. இப்போது அடி-உதை மற்றும் வசவு சொல் கேட்காமல், நிம்மதியுடன் வாழ்கிறேன்!' என்கிறார்.மூன்றாமவருக்கு, 35 வயது இருக்கலாம். அரசின் உயர் அதிகாரி ஒருவரை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டவர். அப்பெண்மணியின் பெயருக்கு பின் பட்டங்கள் ஏராளம். தனி வீடு ஒன்றில் வசிக்கிறார். கல்லூரிகளில் தற்காலிக வேலைகள் செய்கிறார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தை வட்டிக்கு விட்டு தன் பிழைப்பை தானே பார்த்துக் கொள்கிறார்.இவரை மணந்த அதிகாரி, மாதம் ஒரு நாள், அதுவும் மதிய வேளைகளில் இரண்டு - மூன்று மணி நேரம் இப்பெண்மணியுடன் தங்கினாலே பெரிய விஷயமாம். அத்துடன், 'குழந்தை பெற்று கொள்ளாதே!' என, சுயநலத்துடன் மூன்று முறை கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார். கணவனின் அன்புக்கும், அரவணைப்புக்கும், பாசத்திற்கும் ஏங்கித் தவிக்கும் ஜீவனாக தெரிந்தார்!— மூன்று பெண்களின் வாழ்க்கை சம்பவங்களை கேட்ட லென்ஸ் மாமாவே ஆடிப் போய்விட்டார் என்றால், என் நிலை பற்றி கேட்க வேண்டுமா?***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !