அந்துமணி பா.கே.ப.,
நண்பர் ஒருவரின் அலுவலகத்திற்குச் சென்று இருந்தேன். கெமிக்கல் இண்டஸ்ட்ரி ஒன்று நடத்தி வருகிறார். தென் மாவட்டக்காரர்... கொஞ்சம், 'குஷால்' பேர்வழி! அவரது மேஜைக் கண்ணாடியின் கீழ், 'நோட்டீஸ் டு காலர்ஸ்' - தன்னை பார்க்க வருபவர்களுக்கு எவ்வளவு நேரம் தரவாரியாக ஒதுக்குவார் என்பதை சூசகமாகத் தெரிவித்து ஒரு சீட்டு வைத்திருக்கிறார். அதில் குறிப்பிட்டுள்ளவை மிகவும், சுவாரஸ்ய மாக இருந்தது...அது —நட்பு முறையில் பார்க்க வருபவர்களுக்கு 10 நிமிடம்!சேல்ஸ்மேன்களுக்கு அரை செகண்டு!லைப் இன்சூரன்ஸ் ஏஜண்டுகளுக்கு 15 செகண்டு!'ஓசி' சாம்பிளுடன் வரும் பிராந்தி, விஸ்கி விற்பனையாளர்களுக்கு இரண்டு மணி நேரம்!விருந்துக்கு அழைக்க வரும் நண்பருக்கு இரண்டு மணி நேரம்!கிரிக்கெட் பற்றி பேச வரும் நண்பருக்கு பகல் முழுக்க!'பில்லை நான் குடுக் கிறேன்...' எனும் நண்பர்களுக்கு நாள் முழுக்க!வாடிக்கையாளர்களுக்கு எட்டு மணி நேரம்!மனைவிக்கு, 'நோ டைம்!''கேர்ள் பிரெண்ட்ஸ்'களுக்கு இரவு முழுக்க!பணம் கொழுத்த 80 வயதுக்கு மேலுள்ள உறவினர்களுக்கு எந்த நேரமானாலும்!வேலை கேட்டு வரும் உறவினர்களுக்கு மூன்றே மூன்று செகண்டுகள்!வருமானவரித் துறையினர் மற்றும், 'பெண்டிங் பில்' வசூல் செய்ய வருபவர்களுக்கு நாள் முழுவதும் — ஆனால், நாளை! (இன்று ரொக்கம், நாளை கடன் என்பது போல்!)— இது எப்படி இருக்கு?***அந்த நண்பருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அவ்வப்போது அலுவலகம் வந்து செல்வார். கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்.நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ள அவரது பெற்றோர் வலியுறுத்தி வந்தனர். அவரது அன்னை, தன் சகோதரன் மகளை மணமுடிப்பதில் அதிக ஆசை கொண்டிருந்தார். தந்தையோ, தம் சகோதரி மகளை, மகனுக்குக் கட்டி வைப்பதில் மிகவும் துடிப்பாக இருந்தார்!மாமன் மகள், அத்தை பெண் இருவருக்குமே நண்பரை மிகவும் பிடிக்கும். ஆனால், நண்பருக்கோ சொந்தத்தில் மணமுடிப்பதில் விருப்பமில்லை; மேலும், சொந்தத்தில் மணமுடித்தால் தாய் அல்லது தந்தையின் அதிருப்திக்கு ஆளாக வேண்டியது இருக்கும் என்பதால், வெளியிடத்தில் மணமுடித்தார்.பெண் லட்சணமாக இருந்தாலும், அதிகம் படிக்காதவர், சற்று வெகுளியும் கூட!இந்த நிலையில், பரிதவிப்புடன் என்னை காண வந்தார் நண்பர். மிகவும் பதட்டத்துடன் இருந்த அவரை அமைதிப்படுத்தி, 'என்ன விஷயம்?' என்று கேட்டேன்.'என் குடும்ப வாழ்க்கையில் இடி விழுந்துடுச்சுப்பா... அதுக்கு அரசாங்கமே காரணமாயிடுச்சு...' என்றபடியே கேவினார்.சிறிது நேரம் அழட்டும் என விட்டு விட்டு காத்திருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின், ஒரு பேப்பர் கட்டிங்கை என்கையில் திணித்தார். 'இந்தப் பிசாசு தான் எல்லா குழப்பத்திற்கும் காரணம்...' என்றார்.அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தேன். செய்தித்தாள் ஒன்றில் வெளியாகி இருந்த, 'எய்ட்ஸ்' விளம்பரம் அது! தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் அது!'இதற்கும், உங்க வீட்டில் ஏற்பட்ட குழப்பத்துக்கும் என்ன தொடர்பு?' எனக் கேட்டேன்.'என் வேலையைப் பத்தி தான் தெரியுமே... சரக்கு லாரி நிறுவனத்தில் மேலாளர் வேலை. சரக்கு லாரிகள் எல்லாம் குறிப்பிட்ட நேரத்திற்குள், 'ஷெட்டு'க்கு வந்து சேர்கின்றன. லாரி டிரைவர்கள் வண்டியை ஆங்காங்கே போட்டு தூங்கிவிட்டு கண்ட நேரங்களிலும் வந்து சேருகின்றனர். அந்த மாதிரி நாட்களில் கணக்கு, வழக்குகளை முடித்து விட்டு வீடு வந்து சேர தாமதமாகி விடுகிறது.'திருமணம் முடிந்து இந்த நான்கு மாதங்களில் இது போல பல முறை நடந்து இருக்கிறது... அப்போதெல்லாம் சந்தேகப்படாத என் மனைவி, இந்த விளம்பரம் பத்திரிகைகளில் வெளியான பின், எய்ட்ஸ் நோயாளி போல என்னை நினைத்து ஒதுங்குகிறாள்... சண்டை போடுகிறாள்...'நிதானமாக, 'ஹாண்டில்' செய்து என்ன விஷயம் என கேட்டபோது, இந்த விளம்பரம் வெளியாகி இருந்த பேப்பரை என் முன் தூக்கிப் போட்டாள்!'வெளி உலகம் அறியாத அவளை, எப்படி சமாதானம் சொன்னாலும் நம்ப மறுக்கிறாள்... இந்த விளம்பர வாசகம் என் மீது அவளுக்கு தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்தி, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டது. நீ பத்திரிகைக்காரன்... நீதான் இப்பிரச்னையைத் தீர்த்து வைக்க வேண்டும்...' எனக் காலில் விழாத குறையாகக் கெஞ்சினார்!'உங்க மனைவியை ஆபிசுக்குக் கூட்டி வாங்க... நான், லென்ஸ் மாமா, மற்ற உதவி ஆசிரியர்கள் எல்லாரும் பேசி, 'கன்வின்ஸ்' செய்கிறோம்...' எனக் கூறி, அனுப்பி வைத்தேன்!***லென்ஸ் மாமா அன்று நல்ல மூடில் இருந்தார். 'பீர்' கதை ஒன்று சொன்னார்.இதோ அந்தக் கதை:மூன்று நபர்கள்... அவர்களுக்கு, 'பீர்' சாப்பிட ஆசை; ஆனால், கையில் காசில்லை.'எனக்கு ஒரு ஐடியா! அதை உபயோகித்துப் பார்க்கிறேன்...' என்று ஒருவன் கூறி, ஓட்டல், 'பாரு'க்குச் சென்றான். நிறைய பீர் குடித்தான். நேராக வெளியில் வந்தான்.வெயிட்டர் அவனிடம், 'ஐயா... பீர் சாப்பிட்டதற்கு பணம் தரவில்லையே!' என்று கேட்டான்.'என்னது... நான் பணம் கொடுத்துவிட்டுத் தான் வருகிறேன். குடிபோதையில் ஏமாந்து விடுவேன் என்று நினைத்தாயா?' என்று கூறிக் கொண்டே போய் விட்டான்.விஷயத்தை மற்ற இருவரிடமும் சொன்னான்.இரண்டாவது ஆசாமி அதே, 'பாரு'க்குச் சென்றான். தாராளமாகக் குடித்துவிட்டு நடையைக் கட்டினான். வெயிட்டர் அவனிடம் பணம் கேட்டபோது, 'நன்றாக இருக்கிறது! முதலில் பணத்தை வாங்கிக் கொண்டு தானே பீர் கொடுத்தாய். யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்?' என்று கோபமாகக் கேட்டுவிட்டு வெளியே வந்தான்.வெயிட்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது மூன்றாவது ஆசாமி வந்தான். பீருக்கு ஆர்டர் கொடுத்தான். அவன் குடித்துக் கொண்டிருக்கும் போது அவனிடம் வந்தான் வெயிட்டர்...'உங்களிடம் ஒரு யோசனை கேட்க வேண்டும். இதற்கு முன் இரண்டு பேர் வந்து பீர் சாப்பிட்டனர். பணம் கொடுக்காமல் போய் விட்டனர். கேட்டால், முதலிலேயே கொடுத்து விட்டதாகச் சொன்னார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது...''அதென்னவோ எனக்குத் தெரியாது. மீதிச் சில்லரையைக் கொடு. நான் போக வேண்டும்...' என்றானே பார்க்கணும் மூன்றாவது ஆசாமி!— கதையைச் சொல்லிவிட்டு கட, கடவெனச் சிரித்தார் லென்ஸ் மாமா. இந்த, 'டெக்னிக்'கை உங்களில் யாரேனும் பரீட்சித்துப் பார்த்து, முதுகில், 'டின்' கட்டிக் கொண்டால் நான் பொறுப்பல்ல! ***