அந்துமணி பா.கே.ப.,
அவர், மும்பையில் மிகப் பிரபலமாக இருந்த தமிழர். அவரைப் பற்றி, தமிழில் சினிமா கூட வந்திருக்கிறது. அந்தப் பெரியவர், இப்போது, உயிருடன் இல்லை.அவரது மாப்பிள்ளை, எனக்கு நன்கு பழக்கமானவர். மும்பையை தலைமையிடமாகக் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தில், மிகப் பெரிய பதவியில் இருக்கும் அவர், பணி நிமித்தம், வளைகுடா நாடுகளுக்கு அடிக்கடி சென்று வருவார். எப்போதாவது சென்னைக்கு வரும்போது என்னை சந்திப்பார்.சமீபத்தில், அவரை சந்தித்த போது, வளைகுடா ஒன்றில் நடக்கும், நம்ப முடியாத விஷயம் ஒன்றைச் சொன்னார்:அந்த நாடு ஒரு, 'ப்ரீ கன்ட்ரி'ப்பா... என் நண்பன் அங்கேயே தங்கி வேலை பார்க்கிறான். இவன் வசிக்கும், அடுக்கு மாடி குடியிருப்பில், மொத்தம் ஆறு பிளாட்டுகள். பாலஸ்தீனியர், பாகிஸ்தானியர் மூன்று பிளாட்டுகளில் குடியிருக்க, தரைத் தளத்தில், தமிழ் பிராமணக் குடும்பம் ஒன்றும், இரண்டாவது பிளாட்டில், இவன் குடும்பமும், இவனுக்கு எதிர் பிளாட்டில், ஐந்தாறு பெண்கள், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கின்றனர்.என் நண்பனும், அவன் மனைவி மற்றும் குழந்தைகள் சுத்தத் தமிழர்கள் தான் என்றாலும், பார்ப்பதற்கு வட மாநிலத்தவர் அல்லது பாகிஸ்தானியர் போன்ற தோற்றம் கொண்டவர்கள்; தமிழர்கள் என்று சொல்லவே முடியாது!எதிர் பிளாட்டில் குடியிருக்கும் பெண்கள், 'தஸ் புஸ்' என, ஆங்கிலத்தில் பேசிக் கொள்வராம். எல்லா பெண்களும் உயர் குடும்பக் பெண்கள் போன்ற தோற்றம் கொண்டவர்களாம். பெரிய நிறுவனங்களில், பெரிய வேலைகளில் உள்ள பெண்கள் என, அந்த பிளாட்டில் குடிப்புகுந்த நேரத்தில், இவன் நினைத்து இருக்கிறான்.இவன் மனைவி தான், நைசாக நோட்டம் விட்டு, அவர்கள், பகல் நேரங்களில் வேலைக்குச் செல்வதில்லை என்றும், இரவு நேர நட மாட்டங்கள் இருக்கிறது என்றும், ஆச்சரியப்படும் விஷயமாக, அதில், இரண்டு தமிழ் பெண்களும் இருக்கின்றனர் என்றும், அவர்கள் பிளாட்டில் இருக்கும் ஒவ்வொருவர் பற்றியும் கிண்டலும், கேலியும் செய்கின்றனர் எனக் கூற, நாசூக்காக, அவர்களது நடவடிக்கைகளை நோட்டமிட ஆரம்பித்திருக்கிறான் நண்பன்.நண்பனும், அவன் மனைவியும் தமிழர்கள் தோற்றம் இல்லாமல் இருந்தது, அத்தமிழ் பெண்களுக்கு, இவர்களின் மீது, எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லை அதனால், தமிழிலேயே, 'கமென்ட்' அடித்து இருக்கின்றனர்.நண்பரின் மறைமுக விசாரணையில், அவர்கள் அனைவரும், 'ஹை - கிளாஸ்' விலை மாதர்கள் என்பதும், மாதத்தில், குறைந்த பட்சம், மூன்று லட்ச ரூபாய் சம்பாதிக்கும் விஷயமும் தெரிய வந்துள்ளது.வளைகுடா நாட்டில் அந்த வேலை கிடைத்திருக்கிறது, இந்த வேலை கிடைத்திருக்கிறது என, மிகப் பெரிய பதவிகளை, தம் பெற்றோர், சுற்றத்தார், உறவினர், மற்றும் நண்பர்களிடம் கூறி, இங்கே வந்து, இத்தொழிலில் ஈடுபடுகின்றனராம்.வளைகுடா நாடுகளில், மூன்று மாதத்திற்கு, ஒரு நாடு என, கணக்கு வைத்து, 'தொழில்' செய்யும் இடங்களை மாற்றிக் கொள்கின்றனராம்...அராபியர்களுக்கு, பூமியில் இருந்து பெட்ரோலாக பணம் கொட்டுகிறது.அவர்களுக்கு பணத்தைப் பற்றிய கவலையே கிடையாது. குடும்பப் பெண்கள் போன்ற தோற்றம் கொண்ட மிக அழகான பெண்களுக்கு, பணத்தால் அபிஷேகம் செய்ய அவர்கள் தயங்குவதே இல்லை. ஒரே வருடத்தில், 30- - 40 லட்சம் ரூபாய் சம்பாதித்து விடுகின்றனர்.இவர்கள் மட்டுமல்ல, உடைந்து சிதறிய சோவியத் யூனியனின் சில நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு மிக அருகிலேயே இருக்கின்றன. மூன்று, நான்கு மணி நேர விமானப் பயணத்தில், வளைகுடா நாடுகளை இவர்கள் அடைந்து விடலாம்.அந்த நாடுகள் எல்லாம் பொருளாதாரத்தில் மிக நலிந்து பிச்சை எடுக்கின்றன. கால் வயித்து கஞ்சிக்கே லாட்டரி தான்! இந்த நிலையில், வாழ்க்கை நடத்த, தம் மகள், மனைவியரை வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர் சிலர்.வெள்ளையும், சொள்ளையுமாக உள்ள பெண்கள் என்றால், அராபியருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. அதனால், தெற்கு ஆசியப் பெண்களை விட, இப்பெண்கள், இரண்டு மடங்கு அதிகம் சம்பாதிக்கின்றனர். இப்போது, அந்தப் பழைய, கம்யூனிச நாட்டுப் பெண்கள், சம்பாதிப்பதற்காக, அரபு நாடுகளில் வந்து குவிகின்றனர் என்று மிகப் பெரிய, 'ஸ்டோரி' சொன்னார்.மனது கனத்தது!'வயிறு' - என்னென்ன காரியங்களை எல்லாம் செய்ய வைத்து விடுகிறது பாருங்கள்!மாப்பிள்ளை பார்க்கும் படலம் என்பது, மிகச் சிக்கலான விஷயம் போல உள்ளது.குப்பண்ணாவின் நண்பர் ஒருவர், தன் மகளுக்கு, பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி வருகிறார். அதற்கு குப்பண்ணா தான் முழு, 'ஹெல்ப்!'தன் பெண்ணின் கல்யாணங்களுக்கே மாப்பிள்ளை தேட அக்கறை காட்டாதவர் குப்பண்ணா எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். குப்பண்ணாவின் தம்பிகள் தான், அண்ணன் மகள்களுக்கு பொருத்தமான மாப்பிள்ளைகளை தேடி வைத்தனராம்.குப்பண்ணா இப்போது, 'ரிட்டயர்ட்' பார்ட்டி ஆகி விட்டதால், தெரிந்தவர், அறிந்தவர், சொந்தக்காரர் வீட்டு பெண்களுக்கு, பையன்களுக்கு தகுந்த ஜோடி தேடும் வேலையில், மிக ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்.பார்க்கும் இடம் எல்லாம் பெரிய இடங்கள் என்பதால், ஆங்கில நாளிதழ்களில் வெளியாகும் மணமக்கள் தேவை விளம்பரங்களை அலசுகிறார். அந்தப் பொடிப் பொடி எழுத்துக்களைக் கூட விடாமல் படித்து, பொருத்தமான விளம்பரங்களுக்கு, 'அப்ளை' செய்கிறார்.குறிப்பாக, அமெரிக்காவில் கம்ப்யூட்டர் துறையில் பணியாற்றும் பையன்களை வலை போட்டுத் தேடுகிறார்.பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவர் மூலம், மிக அழகாக, நண்பரின் மகளை படம் எடுத்து, ஜாதகத்துடன் புகைப்படத்தையும் அனுப்பி வைக்கிறார். பல்வேறு காரணங்களால், இவர் சில ஜாதகங்களை, 'ரிஜக்ட்' செய்ய, பையன் வீட்டுக்காரர்களும், அதே போல, 'ரிஜக்ட்' செய்து, போட்டோவை திரும்ப அனுப்பி வைத்து விடுகின்றனர்.இப்படி, போட்டோவும், ஜாதகமும் வாங்கிக் கொண்ட ஆசாமி ஒருவர், 'பொருத்தம் இல்லை' எனக் கடிதம் எழுதிப் போட்டு விட்டு, புகைப்படத்தை திருப்பி அனுப்பவில்லை.அந்தக் கால எஸ்.எஸ். எல்.சி., ஆச்சே குப்பண்ணா... வாங்கு வாங்கு என, இங்கிலீஷில் கடிதம் எழுதி, வாங்கி விட்டார் அந்த ஆசாமியை. அவரும் லேசுப்பட்டவர் இல்லை போலிருக்கிறது... 'என்ன ஓய், பெரிய போட்டோ... அவனவன் பெண்ணைப் பற்றி இருபது நிமிடம் ஓடக் கூடிய வீடியோ டேப்பேயே அனுப்பி வைக்கிறான்...'பெண் சமையல் செய்யும் பாங்கு, கர்நாடக சங்கீதத்தில், லைட் மியூசிக்கில், வெஸ்டர்ன் பாட்டுப் பாடுவது, வீணை, - பியானோ வாசிப்பது, கை வேலைப்பாட்டில் எம்பிராய்டரி போடுவது, பொம்மைகள் செய்வது, பூச்செடிகள் வளர்ப்பது, பராமரிப்பது... மற்றவர்களுடன் பழகும் விதம், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் பாங்கு. வித, விதமாக - சுரிதார், ஜீன்ஸ், சாரி என, உடை அணிந்து...'பூஜை அறையில், பக்தியில் ஆழ்ந்து இறைவன் மீது ஸ்லோகம் பாடி, பூஜை செய்வது... இன்னும் பலவிதமா, பின்னணி இசையுடன், வீடியோவை எடுத்து அனுப்புறான்... நீர் என்னமோ ஒரு போட்டோவுக்கு இந்த அலட்டு அலட்டுகிறீரே...' என, ஆங்கிலத்தில் கடிதம் எழுதி, குப்பண்ணாவை ஒரு கடி, கடித்து விட்டார். நொந்து போய், குப்பண்ணா, என்னிடம் விஷயத்தை சொன்ன போது தான், 'ஓஹோ... பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கிறதா...' என்பது புரிந்தது.இவை எல்லாம், நம் நாட்டில், எப்போது, 'சிம்பிளிபை' ஆகப் போகிறதோ, தெரியவில்லை!