அந்துமணி பா.கே.ப.,
'பெண்ணியம் - தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நூல், இந்தியாவில் சென்ற நூற்றாண்டு வரை, பெண்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்பட்டுள்ளனர் என்பதை, விலாவரியாக விளக்கியுள்ளது. உத்திரப்பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக காணப்பட்டன என்று, ஆங்கில அரசின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. 1836ம் ஆண்டு குறிப்பின்படி, ராஜஸ்தானில், ஓரிடத்தில் காணப்பட்ட பத்தாயிரம் ராஜஸ்தானியருள், ஒரு பெண் மகவு கூட இல்லை.மற்றொரு இடத்தில், 64 கிராமங்கள் அடங்கிய பகுதியில், ஆறு வயதிற்கு குறைந்த ஒரு பெண் குழந்தை கூட இல்லை. இக்கொடுமையின் தீவிரத்தை நீக்க, 1839ல், அலகாபாத் நீதிபதி, அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிவிக்க ஆட்களை நியமித்தார்.குழந்தைப் பேற்றுக்கு உதவும் தாதியர், ஊர்க்காவலாளிகள், காவல் அதிகாரிகள் முதலியோர் அப்பகுதியில் பிறக்கும் பெண் குழந்தைகளைப் பற்றிய தகவல்களை அறிவிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதன் காரணமாக, அப்பகுதியில் குடியிருந்த மக்கள் அனைவரும் தங்கள் இருப்பிடங்களை விட்டு, வெளியூர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.மண வாழ்க்கை என்றால் என்ன என்பதை அறிய இயலாத பாலகர்களுக்கு, மணம் செய்து வைத்தனர். இதனால், பெண் குழந்தைகள் அடைந்த துன்பம் கொஞ்சமல்ல. 1860ல், ஆங்கில அரசாங்கம் பெண் குழந்தைகளை இக்கொடுமையிலிருந்து விடுவிக்க, பத்து வயது முடியும் முன், அவளுடன், அவன் கணவன் பால் உறவு கொள்ளுதல் கூடாது என்று, சட்டம் கொண்டு வந்தது. இதுவே எவ்வளவு கொடுமை!ஒரு பக்கம் பெண்களுக்கு கற்பு நெறியை வலியுறுத்தியபடியே, இன்னொரு பக்கம் தேவதாசி முறையை அமைத்து, ஆண்கள், தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர்.இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1871ல், எடுக்கப்பட்டது. அப்போது, கல்வி அறிவு பெற்ற பெண்கள், 0.5 சதவீதமே இருந்தனர்; அதாவது, நூற்றுக்கு ஒருவர் கூட இல்லை.பின்னர், 1891ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகை, 29 கோடி பேர்; இதில், 14 கோடி பேர் பெண்கள்; அதில், இரண்டரை கோடி பெண்கள் விதவைகள். இதில், வயதான விதவைகளை சேர்க்கவில்லை. குழந்தைத் திருமணங்களால் ஏற்பட்ட கொடுமை இது! இதில் -1 வயது விதவை 597 பேர்.12 வயது விதவை 492 பேர்.23 வயது விதவை 1,257 பேர்.34 வயது விதவை 2,827 பேர்.- இப்படிப் போகிறது இந்த கணக்கு எவ்வளவு கேவலம்!ஒரு ஆண், பல பெண்களை மணக்கும் வழக்கமும் இருந்தது. ஒரு குடும்பத்தில் திருமணமாகிச் செல்லும் பெண், எந்த வகையிலாவது தன் கணவனது, கணவனின் பிற உறவினர்களது விருப்பத்திற்கு மாறாக நடந்தால், கணவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேறு பெண்களை திருமணம் செய்து கொள்ள முடியும். பல கணவன்மார்கள், தங்கள் மலட்டுத்தன்மையை, பெண் மீது சுமத்தி, வேறு பெண்களை மணம் புரிவர்.கணவனை இழந்த பெண்ணை காப்பாற்றும் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள, அவளையும் கணவனுடன் உடன்கட்டை ஏற்றிக் கொன்றனர்.ராஜஸ்தானில், 25 சதவீதம் பெண்கள் உடன்கட்டை ஏறினர் என்று, ஆங்கில அரசாங்க குறிப்பு காட்டுகிறது. கணவன் இறந்தபின் உடன்கட்டை ஏறுவது, அக்குடும்பத்தின் உயர்ந்த சமூக நிலையைக் குறிக்கும் அடையாளமாகக் கருதப்பட்டது. அதனால், தங்கள் குடும்ப மதிப்பை நிலை நாட்ட, கணவன் இறந்த பின், பெண்கள் தாமாகவே உடன்கட்டை ஏற முன் வந்தனர். உடன்கட்டை ஏறுபவள் தான் உத்தமி என்றொரு கருத்தை, சமூகத்தில் பரப்பி, அதன் மூலம் பெண்ணை இதற்கு நிர்பந்தப்படுத்தி வைத்திருந்தனர்.- இப்படி சொல்லிக் கொண்டே போகிறது இந்த நூல்... நாம், நம் கலாசாரம், பண்பாடு பற்றி பீற்றிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சலில்லை.மனோதத்துவப் புத்தகம் ஒன்று படித்துக் கொண்டிருந்தேன்; அதில், மனதைத் தொட்ட ஐந்து பாயின்டுகள் இதோ -1.நீங்கள் செய்யும் வேலையில், குழந்தையின் உழைப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்; உதாரணம், சைக்கிள் துடைத்தல்.2.நீங்கள் வேலை செய்யும் இடத்திற்கு, எப்போதாவது உங்கள் மகனையும், அழைத்துப் போங்கள். 'அப்பா கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு எல்லாம் வாங்கித் தருகிறார்...' என்று, அவன் அறிந்து கொள்ளட்டும்.3.குழந்தையிடம் அளவுக்கு மீறி செல்லம் காட்டாதீர்கள்; அதே சமயம், ரொம்பவும் ஆத்திரப்படாதீர்கள்.4.குழந்தையைக் கட்டிப்பிடித்து விளையாடுங்கள். உங்கள் உடலோடு ஒட்டிப் பழகினால் பாசம் அதிகமாகும்.5.குழந்தைகள் உங்கள் மீது கோபம் கொள்ளும் போது, அது நியாயமாக இருந்தால் விட்டுக் கொடுங்கள்.* தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிலோ மீட்டராவது ஓடுங்கள்.* பதினைந்து நிமிடம் சிரசாசனம் செய்யுங்கள் .* பகலில் இரண்டு மணி நேரம் தூங்குங்கள்.* தினசரி பேப்பரை ஒரு வரி விடாமல் படியுங்கள்.* தினமும் நண்பர்களுடன், காலையில், மூன்று மணி நேரமும், மாலையில் மூன்று மணி நேரமும் மனம் விட்டு பேசுங்கள்.* ஒரு நாள் விட்டு ஒரு நாள் சினிமாவுக்குப் போங்கள்!- இத்தனையையும் செய்ய உங்களுக்கு நேரமிருந்தால், நீங்கள் வேலை வெட்டியில்லாதவர்; உபயோகமான வேலை ஒன்றைத் தேடிக் கொள்ளுங்கள்.பவானி ஆற்றில் நீச்சல் அடித்துவிட்டு, கரையில் உட்கார்ந்து இருந்தேன். இன்னும் குளித்துக் கொண்டிருந்தார் லென்ஸ் மாமா. குளிக்க வந்த கிராமத்து ஆசாமி ஒருவர், வேட்டி மடிப்பிலிருந்து, புது பொடி மட்டை ஒன்றை எடுத்தார். பொடியைக் கையில் கொட்டி, நீர் சேர்த்துக் குழைத்து, ஷாம்பூ போல தலையில் தேய்க்க ஆரம்பித்தார்.அதிர்ந்து போய் அவரிடம் விவரம் கேட்டேன். 'பார்ட்டி' சொன்ன பதில் இது தான்:பேன் தொல்லைங்க... மூக்குப் பொடி போட்டுத் தேய்ச்சு கழுவுனா, ஓடியே போயுடுமுங்க...- முடியா, பேனா... கேட்கவில்லை நான்!