உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து அடக்கும் பெற்றோரும் உண்டு. இது நம்மூர் கதை. ஆஸ்திரேலியா போன்ற மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.ஒரு குழந்தை உதைபடுவதாக, பக்கத்து வீட்டுக்காரரோ அல்லது அந்த குழந்தையோ, போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே போதும்... 'தப தப'வென குறிப்பிட்ட வீட்டிற்குள் புகுந்து, குழந்தையை கொடுமைப்படுத்தும் தகப்பனையோ, தாயையோ அல்லது இருவரையுமோ பிடித்துச் சென்று தண்டனை கொடுத்து விடுவர் போலீசார்.இப்போது நான் சொல்லப் போவது ஜெர்மன் நாட்டில் நடந்த சம்பவம்... புலம் பெயர்ந்த இலங்கை அன்பர் ஒருவர், ஜெர்மன் நாட்டில் செட்டிலாகி விட்டார். சுயதொழில் மூலம் நன்கு முன்னேறி கார், பங்களா என வசதியுடனும், செல்வாக்குடனும் திகழ்ந்து வருகிறார்.இவருக்கு பத்து வயதிலும், எட்டு வயதிலும் ஆண், பெண் என இரு குழந்தைகள்; அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இதில், ஆண் குழந்தை செம வாலு; எப்போதும் ஏதாவது குறும்பு செய்து கொண்டே இருப்பான்.ஒரு நாள், பையனின் குறும்பு அளவுக்கதிமாகப் போகவே, அவன் தந்தை, நாலு சாத்து சாத்தி விட்டார். இதை, தன் நண்பனிடம் கூறி இருக்கிறான் அந்த பையன். நண்பனின் ஐடியாபடி, போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டான் பையன்.கன ஜோரான உ.பா., பார்ட்டி ஒன்றில் பையனின் தகப்பனார் இருந்தபோது, உள்ளே புகுந்து தகப்பனாரை கைது செய்து கொண்டு போனது போலீஸ். தன் நண்பர்கள், பிசினஸ் கூட்டாளிகள் என, பெரிய வட்டத்தின் நடுவே, தான் அவமானப்பட்டு விட்டதாக கருதி, மிகுந்த மன வேதனை கொண்டார் தகப்பனார்.ஒரு வழியாக போலீஸ் பிடியிலிருந்து தப்பி வந்த பின், பையனுடன் சுமுகமாகவே நடந்து கொண்டிருக்கிறார். பள்ளி விடுமுறை விட்டதும், சொந்த நாடான இலங்கைக்கு போய் வரலாமென, 'புரோகிராம்' போட்டு, கிளம்பிச் சென்றிருக்கின்றனர். விமானம், கொழும்பு பண்டாரநாயக்கா விமான தளத்தில் இறங்கியது.விமானத்தை விட்டு வெளியேறி, விமான நிலைய வளாகத்திற்குள் அக்குடும்பம் வந்தது தான் தாமதம்... அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி, தன் மகனை, 'பொளேர் பொளேர்' என முதுகில் சாத்தி, 'இப்ப போடுடா போலீசுக்கு போனை...' என்று கூறியபடியே தாக்கி இருக்கிறார்.பையனின் அம்மா உள்ளே புகுந்து தடுத்து நிறுத்தியது தனிக் கதை.இதைப் படிக்கும் நீங்கள், 'ஜெர்மன் நாடு போன்ற இடத்தில் நாம் வசிக்கவில்லையே...' என சந்தோஷம் கொள்கிறீர்களா அல்லது அது போன்ற சட்டம் இங்கும் தேவை என நினைக்கிறீர்களா?'தமிழ் எங்கள் உயிர் மூச்சு... காற்று, தண்ணீர், வெண்ணீர், புடலங்காய்...' என, வீர முழக்கமிடும் ஆசாமிகள் நம்மில் ஏராளம். இவர்கள் தமிழை வளர்க்க, என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர் என பட்டியல் போட்டால், பூஜ்ஜியத்திற்கு மேல் ஒரு எண் கூட எழுத முடியாது. ஒரு மொழி வளர, அம்மொழியில் எழுத்துகள் குறைவாக இருக்க வேண்டும் என்பது உலக அளவில் உள்ள மொழியியலாரின் ஒருமித்த கருத்து!'தமிழ் மொழியில் மொத்தம், 247 எழுத்துகள்; இவற்றில், 131 எழுத்துகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கிலத்தில், 26 எழுத்துகளே உள்ளன. இந்த எழுத்துகள் எல்லாமே பயன்படுத்தப்படுகின்றன. இதே போல தமிழ் எழுத்துகளையும் குறைக்க வேண்டும்...' என்கிறார் கல்வெட்டுகளில் உள்ள தமிழை படித்து, ஆராய்ச்சி செய்யும் அறிஞர் ஒருவர்.மாலை நேரத்தில், ஒரு ஓட்டலில் அவரைச் சந்தித்த போது, அவர், 'ஜெர்மானிய பல்கலைக் கழக பேராசிரியர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன்; பழங்கால நாணயங்களில் உள்ள ரோமன் எழுத்துகளை படித்து அறியும் முறையில் எனக்கு உதவுவதாகச் சொன்ன அவர், தொன்மையான மொழி தமிழ் என்பதால், தானும் தமிழ் படிக்க விரும்பியதாகவும், பின்னர் தமிழில், 247 எழுத்துகள் உள்ளன என அறிந்து, பின் வாங்கியதாகவும் கூறினார். தமிழில் எழுத்துகளை குறைத்தால் தான், வெளி நாட்டவரும் தமிழ் படிக்க முன் வருவர். மொழி வளரும் என்பது தெரிந்திருந்தும், சில தமிழ் புலவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனரே...' என வருந்தினார்.எனக்கு தமிழும் தெரியாது; ஆங்கிலமும் புரியாது என்ற விஷயம் அந்தக் கல்வெட்டு மொழி அறிஞருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், அவரது கருத்தில் உள்ள உண்மை நிதர்சனமாகப் புரிந்தது எனக்கு!அவர் ஒரு, 'ப்ரீலான்ஸ் ஜர்னலிஸ்ட்' பல இதழ்களிலும் எழுதி வருபவர். போலீஸ் துறையுடன் மிகுந்த நெருக்கம் உள்ளவர். உயர்மட்ட போலீஸ் அதிகாரிகள் வட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காது. இதனால், ஒருவரைப் பற்றி ஒருவர் இவரிடம் ஆதாரத்துடன், 'போட்டு'க் கொடுப்பர்; அவற்றை புலனாய்வு இதழ்களில் அம்பலப்படுத்தி விடுவார்.கடந்த வாரத்தில் ஒரு நாள், என்னையும், லென்ஸ் மாமாவையும் தம் வீட்டுக்கு அழைத்திருந்தார் அந்த அன்பர்.அவர் மனைவி வெளியூர் சென்று இருந்ததால், சமையலை கவனித்தபடி, ஹாலில் அமர்ந்திருந்த எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது, திடீரென லென்ஸ் மாமா, 'அப்பு... (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவியல் பதமா வெந்து விட்ட வாசனை வருது... தேங்காய் எண்ணெயும், தயிரும் ஊத்தி இறக்கி வச்சுட்டு வா...' என்றார்.'பரவாயில்லையே... இதெல்லாம் கூட படிச்சுருக்கீங்களே...எனக்கு ஜலதோஷம்... அதனால வாசனையும் தெரியாது; ருசியும் தெரியாது...' என, 'டுபாக்கூர்' விட்டேன்.'உண்மை தான்; ருசிங்றது மூக்கும், நாக்கும் சேர்ந்து பெறுகிற உணர்ச்சி தானே!' என்று லென்ஸ் மாமா சொன்னதும், 'மூக்குக்கும், ருசிக்கும் என்ன சம்பந்தம்?' என்று கேட்டேன்.'நிறைய சம்பந்தம் இருக்கு...' என்று அழுத்தமாகச் சொன்ன மாமா, 'மூச்ச உள்ளுக்கு இழுத்துக் கொண்டே ஒரு பொருளை சுவைத்துப் பார். அப்போ அதோட ருசி அவ்வளவாகத் தெரியாது. அடுத்து மூச்சை வெளியே விடுற பார்... அப்போத்தான் தெரியும்.'வெளியே வரும் மூச்சில ஒரு சூடான ஆவி இருக்கிறது; நாம் மெல்லுகிற பொருளின் மணத்தைக் கிளப்பி, அதன் ருசியை உணர்த்துவது அது தான். சில சமயம், சில பொருளின் ஸ்பரிசமும் சேர்ந்து தான் சுவையை ஏற்படுத்துது.'மணம், இனிப்புச்சுவை, லேசான சொர சொரப்பு, இந்த மூன்றும் சேர்ந்தது தான் ஐஸ் கிரீமின் ருசி!'நாக்குக் கூட உடனே கண்டுபிடிச்சுடும்ன்னு சொல்ல முடியாது; ஒரு சொட்டுப் பட்ட வினாடியே தெரியுறதும் உண்டு; இரண்டொரு வினாடி கழிச்சு தெரியுறதும் உண்டு.'அதுக்கு காரணம், நாக்கில் அந்தக் குறிப்பிட்ட சுவைக்கு உண்டான பகுதியைப் அந்தப் பொருள் தொடலங்கறது தான்...' என்றார் லென்ஸ் மாமா.'நாக்கிலே கசப்புக்கு ஒரு இடம்; புளிப்புக்கு ஒரு இடம் என்று டிவிஷனா பிரித்து வைத்திருக்கிறது?' என்றேன்.'ஏன் இல்லாமல்? இனிப்பை உணரும் தன்மை நாக்கின் நுனிப் பக்கத்துக்குத் தான் உண்டு. அடி நாக்கு கசப்புக்கு, பக்கவாட்டில், முன்புறம் உப்பையும், பின்பகுதி புளிப்பையும் உணரும்.'தேன் துளியை நாக்கு நுனியில் விட்டுக் கொண்டால் உடனே தெரியும். உட்புறம் விட்டுக் கொண்டால், உமிழ் நீரோடு கலந்து பரவி, நுனி நாக்குக்கு வந்த பிறகு தான் தெரியும். அதனால் தான் நாக்கு இனிக்கிறது என்றும், தொண்டை கசக்கிறது என்றும் கூறுகிறோம்...''நான்கு சுவைகளை மட்டும் தானே சொன்னீங்க; மற்ற இரண்டும் நாக்கின் எந்த போர்ஷனில் இருக்கிறது?' என்று கேட்டேன்'நாக்கு சாஸ்திரப்படி மொத்தமே நாலு சுவை தான்; அறுசுவையல்ல. இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு; இந்த நான்கிலிருந்து தான் மற்ற எல்லாவிதமான சுவைகளும் பிறக்கின்றன...' என்றார் மாமா.முருங்கைக்காய் சாம்பாருடன், அவியலையும் ஒரு பிடி பிடித்துக் கிளம்பினோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !