உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

மைக்கேல் என்ற கத்தோலிக்க கிறிஸ்தவப் பெரியவர், மூத்த பத்திரிகையாளர். பத்திரிகை துறையின் பால பாடங்களை, எனக்குக் கற்றுத் தந்தவர். ஒருமுறை அவரை சந்தித்த போது, அவரிடம், வாட்டிகன் நகரம் பற்றி விரிவாகச் சொல்லும்படி கேட்டேன். சொன்னார்...'வாட்டிகன் நகரம், போப் ஆண்டவர்களின் தலைமை நிலையமாக, கி.பி., 1377ம் ஆண்டு முதல், 634 ஆண்டுகளாக இருந்து வருதுப்பா...'வாட்டிகனில் இதுவரை, 265க்கும் மேற்பட்ட போப் ஆண்டவர்கள், ஆட்சி செலுத்தியுள்ளனர்.'கடந்த பிப்., 11, 1929 முதல், வாட்டிகன் ஒரு தனி நாடாகத் திகழ்கிறது. உலகம் முழுவதும் உள்ள, ௫௦ கோடிக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களின் மதகுருவான போப் ஆண்டவர், வாட்டிகனில் தனியாட்சி செலுத்துகிறார். ரோமின் ஒரு பகுதியாக வாட்டிகன் இருந்தாலும், ரோமுக்கோ, இத்தாலிக்கோ எந்த வகையிலும் வாட்டிகன் கட்டுப்பட்டதில்லை. இத்தாலியின் தலைநகர் ரோம்; ஆனால், வாட்டிகன் நகருக்கு, அதுவே தான் தலைநகர்.'உலகிலேயே மிகச் சிறிய நாடு வாட்டிகன். இந்நாட்டின் பரப்பளவு, 108 ஏக்கர். ஆனால், உலகில் மிகவும் செல்வாக்குள்ள நாடும், இது தான்.'வாட்டிகனில் வரி கிடையாது; ராணுவமும் கிடையாது. ராணுவம் இல்லாத ஒரே நாடு வாட்டிகன் மட்டுமே! ஆனால், வாட்டிகன் நகரை காவல் புரிவதற்கு, 100 போர் வீரர்கள் உள்ளனர். இவர்கள் வாட்டிகனுக்குச் சொந்தமானவர்கள் அல்ல; சுவிட்சர்லாந்து நாடு தான் வாட்டிகனுக்கு வீரர்களை அனுப்புகிறது. இதை, அந்நாடு கடமையாக கருதுகிறது.'வாட்டிகனுக்கு வந்ததும், சுவிட்சர்லாந்து வீரர்கள் போப் ஆண்டவருக்கும், வாட்டிகனுக்கும் உண்மையாக நடந்து கொள்வதாக நம்பிக்கை தெரிவித்து, உறுதிமொழி எடுத்து, பதவி ஏற்பர். இந்த, 100 வீரர்களில் ஒருவர் குறைந்தாலும், உடனே, அவருக்கு பதில் மற்றொருவர், சுவிட்சர்லாந்திலிருந்து அனுப்பப்படுவார். இவர்களுக்கு, போப் ஆண்டவரே சம்பளம் கொடுப்பார். இவர்கள் அனைவரும் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்கள்.'திருமணம் ஆகாத, 19 - 25 வயதுக்கு உட்பட்ட இவர்களுக்கு, சுவிட்சர்லாந்தில் ராணுவப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவர்கள், போப் ஆண்டவருக்கு மெய்க் காப்பாளர்களாகவும் இருப்பர். இது தவிர, வாட்டிகனுக்கு என்று போலீஸ் படையும் உண்டு. அவர்கள் போக்குவரத்திலும், அரசு அலுவல்களிலும் ஈடுபடுவர்.'வாட்டிகனின் மொத்த மக்கள் தொகை, ஒரு லட்சம் பேர். போப் ஆண்டவர் அரண்மனையில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் மற்றும் மண்டபம், பொருட்காட்சி சாலை, அரங்கம், நூல் நிலையம், தோட்டங்கள் உள்ளன. 'அரண்மனை மேல் மாடியில், போப் வாழ்கிறார். இந்த அரண்மனை, கி.பி., 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதில், 200 அறைகளில் போப்பின் அலுவலகங்கள் உள்ளன. போப் அறையில் தங்க சிம்மாசனம் உண்டு; அவர் பேசுவதற்கு தங்கத்தாலான தொலைபேசியும் உள்ளது.'சில சமயம், பல்லக்கில் ஊர்வலம் வருவார் போப். இவரது அரண்மனையில் குதிரை பூட்டும், 'கோச்' வண்டிகள், 14 உள்ளன.'டிசம்பர், ஜனவரி மாதங்களில் இங்கு, 3 டிகிரி சென்டிகிரேடு வரை வெப்பம் இருக்கும்; எங்கும் பனி பரவிருக்கும். எக்காலத்திலும் வாட்டிகனுக்கு உலக மக்கள் வருகை புரிவர்...' என்றார்.— வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை போய் பாருங்களேன்!தென்காசி அருகே நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம், கோவில் திருவிழா. அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.அந்த கிராம வீட்டில், 'நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன. அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை, அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு என, நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன.எனக்காக, எல்லா பீரோக்களையும் திறந்தார் நண்பர். கதவைத் திறந்ததும், பழைய புத்தகங்களின் நெடி... கர்சீப்பால் மூக்கை மூடினேன். அதைக் கவனித்த நண்பர், 'இப்போதெல்லாம் எங்க வீட்டு இளைஞர்கள், இந்த பீரோக்கள் பக்கமே வர்றதுமில்ல; திறப்பதுமில்ல...' என்றார்.பழைய வார இதழ்களின் தொகுப்பு ஒன்றை எடுத்தேன். 1959ல், வெளியான இதழ் அது. அதில், மறைந்த நடிகர் சந்திரபாபுவின் பேட்டி வெளியாகி இருந்தது. அந்த பேட்டியில் இருந்து சுவையான ஒரு பகுதி இதோ...என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நாள் ஒன்று உண்டு. அது, 1949வது ஆண்டு, பிப்ரவரி மாதம், 18ம் தேதி!நான்கு நாட்களாக குலைப் பட்டினி. காலை, 8:30 மணிக்கு, ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசனை அவரது வீட்டில் சந்தித்தேன். அவரது படங்களில் சிறு வேடம் கொடுக்குமாறு கெஞ்சினேன்.'மனு எழுதி ஸ்டுடியோவில் பதிவு செய்து வை; கவனிக்கிறேன்!' என்று சொன்னார்.'என் திறமைகளை நேரில் நிரூபிக்க இதோ இருக்கிறேனே... மனு எதற்கு...' என்று வாதாடினேன்.'எல்லாம் முறைப்படி தான் நடக்க வேண்டும்...' என்று பிடிவாதமாக சொல்லி விட்டார்.ஏமாற்றத்துடன், நண்பகல்12:00 மணி வரை கடும் வெயிலில், கால் போன போக்கில் திரிந்தேன். பின், ஒரு முடிவுக்கு வந்து, ஜெமினி ஸ்டுடியோவுக்கு சென்று, ஜெமினி கணேசனை சந்தித்தேன். அவரும், அங்கு ஒளிப்பதிவாளராக இருந்த தம்புவும், என் திறமையில் நம்பிக்கை உள்ளவர்கள். இருப்பினும், ஜெமினி ஸ்டுடியோவில் என்னை சேர்த்துவிட இயலாத வகையில், நடிகர் தேர்வு இலாகாவில், சாதாரண குமாஸ்தாவாகத் தான் இருந்தார் ஜெமினி கணேசன்.அவரிடம், மூன்று ரூபாய் கேட்டேன்; கொடுத்தார். அதில், இரண்டு ரூபாய்க்கு, ஒரு பாக்கெட் பாஷாணம் (விஷம்) வாங்கினேன். ஒரு பிரபல ஓட்டலுக்குச் சென்று டிபன் சாப்பிட்டேன்.மீண்டும் ஜெமினி ஸ்டுடியோவுக்குத் திரும்பினேன். அங்குள்ள சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்து, வாசனுக்கு கடிதம் எழுதி, அதை மடித்து பையில் வைத்தேன்; பின், ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி, அதில், விஷத்தைக் கலந்து குடித்தேன்.ஒரே குமட்டல்; கொஞ்ச நேரத்தில் நினைவை இழந்தேன்.இரவு, 1:30 மணிக்கு கண் விழித்த போது, என் இருபுறமும் இரண்டு போலீஸ் ஜவான்கள் உட்கார்ந்திருந்தனர். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பிழைக்க வைக்கப்பட்டிருந்தேன்.'நீ இப்படிச் செய்யலாமா?' என்று, அன்புடன் கடிந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது, எனக்குக் கோபம் வந்தது. 'உங்கள யார் என்னைப் பிழைக்க வைக்கச் சொன்னது...' என்றேன்.தற்கொலை முயற்சிக்காக, என் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது, நீதிபதியிடம் எதிர்வாதம் செய்தேன்.'உன் மனதில் ஏதோ குறை என்று சொல்கிறாயே... என்ன குறைன்னு சொல்...' என்றார் நீதிபதி. உடனே நான், என் பேன்ட் பாக்கெட்டிலிருந்து தீப்பெட்டியை எடுத்து, அதில் ஒரு குச்சியைக் கிழித்து, என் கையைச் சுட்டு, 'நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என உணர்த்த முடியாது. அது, அவரவர்களால் தான் உணர முடியும்...' என்றேன்.இறுதியில், 'முதல் முறை என்பதால், உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடி நீ இங்கு வந்தால், கண்டிப்பாக தண்டிப்பேன்...' என்று தீர்ப்பு கூறினார் நீதிபதி.'அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன்; இரண்டாவது முயற்சி நடந்தால், அது, வெற்றிகரமாக முடியும்...' என்று கூறி, கூண்டிலிருந்து இறங்கினேன்.— பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலையை எட்டிய, திறமையானவர்கள் அனைவரின் ஆரம்ப கால வாழ்க்கை, மிகக் கொடுமையாகவே இருந்திருக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !