அந்துமணி பா.கே.ப.,
இக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது. சிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:சாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.சமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.தலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, 'இது என்ன கதை மிஸ்?' என்றாள்.'இது தான் நீதிக்கதை...' என்றேன்.'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு?' எனக் கேட்டாள். 'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.'அதுக்காக காகம் என்ன செஞ்சது?' என்றாள்.'ராணியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.உடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே... அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா?' எனக் கேட்டாள்.குழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.நானும், 'தப்பு தான்!' என்றேன். உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா?' எனக் கேட்டாள்.வயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா?அக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்?' எனக் கேட்டாள். 'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு! குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.உடனே அது, 'இருக்கே!' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க... அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்... அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.இதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.நம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து கேள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த சமூக வாழ்வியல் பேராசிரியர் ஒருவர், உலகம் முழுவதும் சுற்றி, 5,000 தம்பதியரை பேட்டி கண்டு தாம்பத்தியம் பற்றிய சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். அது:பெரும்பாலானோர், முதலில் காதல் வயப்பட்டு இணைகின்றனர். நடு நடுவே சில தகராறுகள் எழுந்து, வளர்ந்து மறைகின்றன. இறுதியில் காதல் தீவிரமாகி, திருமணத்தில் நிறைவு பெறுகிறது.திருமணமானதும், சில நாட்கள் சுற்றுலா, உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்து, காலம் கழிக்கின்றனர்.பின், இரண்டு ஆண்டுகள் ஆனதும், கணவன், - மனைவியின் பொழுதுபோக்கு, கலந்துரையாடலிலேயே திருப்தியடைந்து விடுகிறது. சாப்பிடும் போதும், இரவு படுக்கையறையிலும் அரைமணி நேரம், ஒரு மணி நேரம் பேசினால் அதிகம்.இது, போகப் போக குறைந்து, ஆறாவது ஆண்டு முதல், தேவைப்படும்போது மட்டும் பேசுவது என்றாகிறது. எட்டாவது ஆண்டிலிருந்து கணவன் - - மனைவி பேசிக் கொள்வது, மேலும் குறைந்து, பிள்ளைகள் பக்கத்தில் இருந்தால் மட்டுமே பேச்சு தொடர்கிறது.ஆரம்பத்திலிருந்த மோகம், கணவனுக்குக் குறைந்து விடுவதால், மனைவிக்கு தரும் அன்பளிப்பை படிப் படியாகக் குறைத்து விடுகிறான். பின், தனித் தனியாகப் பணம் சேர்த்து, குஷியாக பொழுது போக்கத் துவங்குகின்றனர்.திருமணமான பின், மூன்று முதல் எட்டாம் ஆண்டுக்குள் தான், பெரும்பாலான விவாக ரத்துக் கோரிக்கைகள் வருகின்றன.- உங்கள் தாம்பத்தியம் எப்படி? ஜெர்மன் பேராசிரியரின் கணிப்பு சரிதானா, ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்!ஆண்களால், பெண்கள் எவ்வளவு சுலபமாக ஏமாற்றப் படுகின்றனர் என்பதற்கு, இக்கடிதம் ஒரு சான்று; விருத்தாசலத்தில் இருந்து வாசகி ஒருவர் எழுதிய கடிதம் இது:நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவள்; வேற்று மதத்தை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். அவருக்கு ஏற்கனவே கல்யாணமாகி, இரு பிள்ளைகள் இருக்கின்றனர். அவர் மனைவி வேலை பார்க்கிறார்; இவர் வேலைக்கு போகவில்லை. எங்கள் காதல் விஷயம், அவர் மனைவிக்கோ, எங்கள் குடும்பத்திற்கோ தெரியாது. கல்யாணத்திற்கு பின் நடக்க வேண்டியதெல்லாம், இப்போதே, அவர் மூலம், எனக்கு நடந்து விட்டது.'காதல்' என்றாலே எனக்கு பிடிக்காமல் இருந்தது. ஆண்களைக் கண்டாலும் பிடிக்காது; ஆனால், இவரிடம் மனதை எப்படி பறிகொடுத்தேன் என்று தெரியவில்லை. எங்களுக்குள் இதுவரை, எந்த வேற்றுமையும் இருந்தது இல்லை. ஆனால், இப்போது என்னை வேற்றுமையாக நினைக்கிறார். என் உடம்புக்கு ஏதாவது என்றால், முன்பு பதறி விடுவார்; ஆனால், இப்போது, என் உடம்பிற்கு ஏதாவது என்றால், பதறுவது கிடையாது.ஏதாவது மனதில் நினைத்துக் கொண்டு திட்டுகிறார். முன்பு, எங்கே போனாலும், என்னிடம் சொல்லாமல் போக மாட்டார்; ஆனால், இப்போது எங்கே போனாலும் சொல்வதில்லை. என் சகோதரிக்கும், தோழிக்கும் எங்கள் விஷயம் தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது. அதுபோல், அவருடைய நண்பர்களுக்கும் நாங்கள் காதலிப்பது தெரியும்; மற்ற விஷயம் எதுவும் தெரியாது.'நம் விஷயம், உங்கள் மனைவிக்கு தெரிந்தால், நீங்கள் என்னை கைவிட்டு விடுவீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'யார் தடுத்தாலும், என்ன சொன்னாலும், நான் உன்னை கைவிட மாட்டேன்...' என்று சொல்லி, அவர் ஆசையை தீர்த்துக் கொண்டார்.'உன்னை கல்யாணம் செய்து, சென்னையில் குடி அமர்த்தி விடுவேன்...' என்றார். ஆனால், அவர் முன்பு இருந்தது போல், இப்போது இல்லை. ஆள் மாறி விட்டார். 'உன்னை கை விட மாட்டேன்...' என்றும், 'உன்னை கண் கலங்காமல் காப்பாற்றுவேன்...' என்றும் சொன்னவர், இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தால், எனக்கு பயமாக இருக்கிறது.என்னிடம் சரியாக பேசுவது கிடையாது; ஆனால், இப்போது, என் தோழியிடம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உட்கார்ந்து பேசுகிறார். எங்கே போனாலும், என் தோழியிடம் சொல்லிக் கொண்டு போகிறார். என் தோழி, சில விஷயங்கள் என்னிடம் சொல்வாள்; சில விஷயங்களை மறைத்து விடுவாள். எங்கள் கல்யாணம் நடக்குமா, அவர் என்னை விட்டு பிரியாமல் இருப்பாரா? என்னை கைவிட்டு விடுவாரா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு கிடையாது... என்ற ரீதியில், கடிதம் தொடர்கிறது. தேன் குடித்த வண்டு, அடுத்த மலர் தாவப் பார்க்கிறது என்று கூட தெரியாமல் இருக்கும், இந்த வாசகிக்கும், தெரிந்தே கிணற்றில் விழ உள்ள வாசகியின் தோழிக்குமாக அறிவுரை, தனிப்பட்ட கடிதத்தில் அனுப்பப் பட்டுள்ளது.படித்து, பணியிலுள்ள பெண்களில் கூட சிலர், இவ்வாறான அறியாமை கொண்டுள்ளதை நினைக்கும் போது, வேதனைதான் மிஞ்சுகிறது.