அந்துமணி பா.கே.ப.,
நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னை சந்திக்க வந்தார். சம்பிரதாய பேச்சுகளுக்குப் பின், அதிர்ச்சியும், வேதனையும் தரும் விஷயம் ஒன்றைக் கூறினார். அது:மும்பையில் இருந்து சென்னைக்கு ரயிலில் ஏ.சி., முதல் வகுப்பில் பயணித்த போது, என் கேபினில், என்னுடன் இருவர் பயணம் செய்தனர். டிக்கெட் பரிசோதகர் வந்தபோது, அவர்களின் டிக்கெட்டை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் டிக்கெட்டில், குறைவான கட்டணம் இருந்தது கண்டு, அதிர்ந்து போனேன். 'நாம் ஏமாற்றப்பட்டு விட்டோமோ...' என்று எண்ணி, 'உங்களுக்கு எப்படி இவ்வளவு குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைத்தது?' என பலமுறை கேட்டும், அவர்கள் பதில் சொல்லாமல், வேறு விஷயங்களை பேசியபடியே வந்தனர்.இரவில், தூங்குவதற்காக அவர்கள் படுக்கையைப் போடும் போது, ஏதோ பேப்பர் ஒன்று கீழே விழுந்தது. அது ஒரு சர்டிபிகேட்டின் போட்டோ காப்பி... பயணம் செய்யும் நபர், காது கேட்க முடியாத நிரந்தர குறையுள்ளவர் என அந்த சர்டிபிகேட் கூறியது. எனக்கு பெரிய, 'ஷாக்!' சர்டிபிகேட் வைத்திருப்பவருக்கு அந்த குறை இல்லை என்பதற்கு, எங்கள் உரையாடலே சாட்சி!இது குறித்து விசாரிக்க, டிக்கெட் பரிசோதகரை அணுகினேன். அவர் கூறிய விஷயங்கள், மேலும் அதிர்ச்சி தரத்தக்கதாக இருந்தது. உடல் ஊனமுற்றவர்கள், தம் ஊனத்திற்கான சான்றை, அரசு மருத்துவரிடம் பெற வேண்டும். அப்படி சான்று வைத்துள்ளவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் டிக்கெட் அளிக்கிறது ரயில்வே துறை. இந்த சலுகையை, பலர் முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர்.வெளியே தெரிகிற கை, கால் முடம், பார்வை இன்மை போன்ற ஊனங்களுக்காக இவர்களால் மருத்துவச் சான்றிதழ் பெற முடியாது என்பதால், காது கேட்காமைக்கான சான்றிதழை, இதற்காக உள்ள மருத்துவரை, 'கவனித்து' பெற்று விடுகின்றனர்.ஊனமுற்றவர்கள் தமக்கு துணையாக ஒருவரை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்ற சலுகையும் இருப்பதால், அச்சலுகையையும், 'செமத்தியாக' பயன்படுத்திக் கொள்கின்றனர்.இது மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு ரயில்வேயில் இலவச முதல் வகுப்பு பாஸ் உள்ளது. இதைப் பயன்படுத்தி, இந்தியாவின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும், எத்தனை முறையும் சென்று வரலாம்! துணைக்கு உடன் ஒருவரையும் அழைத்துச் செல்லலாம். இந்த சலுகையையும் பலர் முறைகேடாகப் பயன்படுத்துகின்றனர். 800 ரூபாய் கட்டணம் என்றால், 200 ரூபாய் வாங்கிக் கொண்டு, பல தியாகிகள், ரயில்வேயின் சலுகையை, 'மிஸ்யூஸ்' செய்கின்றனர் என, பலவித மோசடிகள் குறித்து அந்தப் பரிசோதகர் கூறினார், என்றார் நண்பர்.திருமணமான பின், பிள்ளைகளின் அம்மாமார், 'என் மகனை பிரித்து விட்டாளே...' எனத் தவறாக மருமகளைப் பற்றி எண்ணுவதும்; மருமகளோ, 'நம் அம்மா போல், மாமியார் நடந்து கொள்வதில்லையே...' என புகார் செய்வதும், 'அம்மாவா, மனைவியா?' என இருவருக்கும் நடுவே சிக்கி, ஆடவன் உழல்வதும், பல குடும்பங்களில், இன்றும் நடந்து வருவது தான்...இதோ, ஒரு வாசகரின் கடிதம்:நேரிடையாகவே விஷயத்திற்கு வருகிறேன்... 'தாய்க்கு பரிந்து பேசுவதா, மனைவிக்கு பரிந்து பேசுவதா, ஏன் தான் கல்யாணம் செய்து கொண்டோமோ...' என்று, தினமும் அல்லல்படும் என் நண்பரின் பிரச்னை இது. இதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டிப்பாக தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன் எழுதுகிறேன்...என் நண்பர் சொந்தமாக தொழில் நடத்தி, திறமையுடன் உழைத்து, 26 வயதிலேயே நல்ல நிலைமையில் இருக்கிறார். அவருக்கு, பெற்றோர் பார்த்து, நிச்சயித்த கல்யாணம், வெகு விமரிசையாக நடைபெற்றது.திருமணம் நடந்த அன்று இரவு, சாந்திமுகூர்த்த நேரத்தில், நண்பரின் அம்மா, 'இனி, என் மகன் என் மீது எப்போதும் போல் பாசமுடன் இருப்பானா, என் பேச்சைக் கேட்பானா...' என்று அழுது புலம்பியுள்ளார்.என் நண்பன், வீட்டின் மூத்த பிள்ளை என்பதால், அவன் மீது, அவனது தாயாருக்கு பாசம் அதிகம். திருமணத்திற்கு பிறகும், எப்போதும் போல் (குளிக்கும் போது டவல் தருவது, சாப்பாடு பரிமாறுவது, துணிமணிகள் எடுத்து தருவது மற்றும் வெளியே செல்லும் போது வாசல் வரை சென்று சகுனம் பார்த்து வழியனுப்புவது) நடந்து கொள்கிறார்.நண்பரின் மனைவி ரொம்பவும் அமைதி... என் நண்பரின் தாயார் செய்யும் பிரச்னைகளை பெரிதாக்காமல், கணவனுக்காக அமைதியாக இருந்து வருகிறார்.'என் மனைவியிடம் சந்தோஷமாக பேசுவது கூட, என் அம்மாவிற்கு பிடிக்கலை...' என்று புலம்புகிறார் நண்பர். அவரின் மனைவி கருத்தரித்து, பின், சரியான கவனமின்மையால், 'அபார்ஷன்' ஆகி உள்ளது. அதற்கு, 'ராசி இல்லாதவள்' என, மனம் கஷ்டப்படும்படி பேசியுள்ளார் நண்பரின் தாய்.மீண்டும், நண்பரின் மனைவி கருத்தரித்தபோது, 'ஆடி மாதம் கருத்தரிப்பது குடும்பத்திற்கு ஆகாது...' என்று பல காரணங்களைக் கூறி, கருவை கலைத்து விடச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். எப்படியோ சமாளித்து, சமாதானங்களை கூறி, பிரச்னையை சரிகட்டி உள்ளார் நண்பர்.தீபாவளி சமயத்தில் பிரச்னை தீவிரமாக வெடித்து உள்ளது. 'தலைத்தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு செல்லும் போது, உன் மனைவியை அங்கேயே விட்டு விட்டு வந்துவிடு...' என்று மகனிடம் கூறியுள்ளார்.மகனோ, 'ஏம்மா, அவள் ஏதேனும் தவறாக உன்னிடம் நடந்து கொண்டாளா... வாயும், வயிறுமாய் இருக்கிற இந்த சமயத்தில், இதை கேட்டா அவ இடிந்து போய் விடுவாள்...' என்றதற்கு, 'கல்யாணத்தின் போது, அவளது அப்பன் சரிவர கவனிக்கல. அதுவுமில்லாம ஏதேதோ அநாகரிகமாக பேசியுள்ளான். அவன், என்னிடம் மன்னிப்பு கேட்கிறவரை அவ, அவ அப்பன் வீட்டிலேயே இருக்கட்டும்...' என கூறியுள்ளார்.தீபாவளி சமயத்தில் நான் ஊருக்குச் சென்றிருந்த போது, அழாத குறையாக என்னிடம் தன் மன வேதனைகளை பகிர்ந்து கொண்டார். 'அம்மாவிடம், பாசத்துடனும், அவர்கள் சொல்படி நடப்பதும் நல்லது தான்... ஆனா, உன் நிலையையும், மனைவியோட நிலைமையையும் தெளிவாக, அமைதியாக, உன் தாயாரிடம் சொல்லி விடு... தன் தவறு உணர்ந்து, கண்டிப்பாக மனம் மாறுவார் உன் அம்மா...' என்று என் மனதில் பட்டதை கூறினேன்.அதற்கு, 'சாத்தியமே இல்ல; நான் கொஞ்சம் எதிர்த்து பேசினாலே, 'டென்ஷன்' ஆகி, ரத்தக் கொதிப்பு அதிகமாகி, மயக்கம் போட்டுடுவாங்க. அது வேறு பயமாயிருக்கு. பொண்டாட்டிக்கு பரிந்து பேசவா, அம்மாவுக்கு பரிந்து பேசவா... என்னோட நிலைமை யாருக்கும் வரக் கூடாது. இதனால், ஒழுங்காக, பிசினசும் செய்ய முடியல. வெளியே போய்விட்டு, வீட்டிற்கு திரும்பி வரணும் என்றாலே கலக்கமாயிருக்கு. பாவம், என் பொண்டாட்டி... வேற ஒருத்தன கல்யாணம் செய்திருந்தா அவ சந்தோஷமா இருந்திருப்பா...'தனிக்குடித்தனம் போயிடலாம்ன்னாலும் தம்பி, தங்கைகள் உள்ளனர். அவங்க எதிர்காலத்தை நினைச்சு, என் நிகழ்காலத்தை பாழாக்கிக்க வேண்டியது தான்...' என்று நொந்தபடி கூறினார்.மணி சார்... ஏன் இப்படி பெரியவங்க நடந்துக்கிறாங்க? இப்போ நாம நல்லா இருப்பதற்கு காரணம் பெற்றோர் தான்; மறுக்கவில்லை. அதற்கு காலம் முழுவதும் அவர்களை கண்கலங்காமல் வைத்துக் கவனித்துக் கொண்டால் கூட ஈடாகாது.இருப்பினும், ஒரு லெவல் வந்ததும் திருமணம் முடிந்ததும், 'இனி அவங்க பார்த்துப்பாங்க...' என்ற பெருந்தன்மையுடன் விலகி இருந்து கவனிப்பது தானே பெற்றோருக்கு அழகு! பிள்ளைகளிடம் பாசம் இருக்க வேண்டியது தான்; ஆனால், அதுவே, அவர்களது மன அமைதியையும், மகிழ்ச்சியையும் பறிபோகும்படி செய்வது போல் இருக்கக் கூடாது அல்லவா?— என எழுதியுள்ளார்!மாமியார்களே... ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்... நீங்களும் எழுதுங்களேன் எனக்கு!