அந்துமணி பா.கே.ப.,
தோலை பதப்படுத்தி, அதை இயந்திரங்கள் மூலம் நைசாக சீவி, ஷூ அப்பர் முதல், பல வகையான தோல் ஆடைகள் வரை தயாரித்து ஏற்றுமதி செய்வதில், தமிழகத்தில் முதன்மை பெற்று விளங்குபவர்கள் இஸ்லாமியர்கள்.இதில் விதிவிலக்காக, அவ்வை சண்முகி படத்தில் பிராமணர் வேடத்தில் வரும் ஜெமினி கணேசன், லெதர் எக்ஸ்போர்ட் செய்வது போல, இந்த நண்பரும் பிராமணர்... லெதர் எக்ஸ்போர்ட் செய்கிறார்.அமெரிக்காவில் இருந்து, இவரது பொருட்களை வாங்க, 'பையர்'கள், வந்திருப்பதாகவும், அவர்களுக்கு பெரிய விருந்து கொடுக்க இருப்பதாகவும், அதில் நான், லென்ஸ் மாமா, குப்பண்ணா கலந்து கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.'விருந்தில் கை, கால் எல்லாம் பொரித்து வைத்திருப்பீர்களே... குப்பண்ணாவுக்கு அவற்றை கண்டாலே அலர்ஜியாயிற்றே...' என்று இழுத்தேன்.'எனக்குத் தெரியாதா... அவர் போன்றோருக்கு வேற ஏற்பாடு செய்திருக்கேன்; கண்டிப்பா கூட்டிட்டு வந்துடு...' எனக் கேட்டுக் கொண்டார்.அன்று, கிழக்கு கடற்கரை சாலையில், எம்.ஜி.எம்., தீம் பார்க் அருகில் உள்ள அவரது விருந்தினர் இல்லத்திற்குச் சென்றோம். உள்ளே என்ன நடக்கிறது, எவர் உள்ளனர் என, அறிந்து கொள்ள முடியாத அளவு, 12 அடி உயர கருங்கல் சுற்றுச்சுவர்; மிகப் பெரிய நீச்சல் குளம்... முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிட் - அவுட்டில் அமர்ந்து பார்த்தால், அமைதியாக அலை வீசும் வங்கக் கடல்...பிரமித்துப் போனார் குப்பண்ணா!'இந்திரலோகம் போல இருக்கேடா அம்பி...' என, திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.அமெரிக்க விருந்தினர்களிடம், 'புகழ் பெற்ற எழுத்தாளர்கள், புகைப்படக்காரர்கள்' என, எங்களை அறிமுகம் செய்து வைத்த நண்பர், பின்னர் பிசியாகி விடவே, நீச்சல் குளத்தை ஒட்டி அமர்ந்தோம்; விருந்தும் அங்கே தான் நடந்தது.பணியாட்கள், சீருடையில் ராணுவ வீரர்களின் அட்டென்ஷனில் ஆங்காங்கே, விருந்தினர்களின் கண்ணில் படும்படி, கைகளில் வட்ட வடிவ வெள்ளித் தட்டுகளை ஏந்தி நின்றனர்.வெள்ளித் தட்டுகளில், கலர் கலராக உ.பா., ஊற்றப்பட்ட கிளாசுகள், வறுத்த முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை. பலவித தயாரிப்புகளில், வடாம், வத்தல், வெள்ளரி, கேரட் சாலட் ஏந்தி நின்றனர். இதற்கு சரிசமமாக அசைவ அயிட்டங்கள்!விருந்தினரின் கண் அசைவுக்கு ஏற்ப, பணியாட்கள், ஓடி ஓடி பரிமாறினர்.லென்ஸ் மாமா தமக்கு வேண்டிய உ.பா.,வை எடுத்துக் கொள்ள, அன் - சால்ட்டட் வேர்க்கடலையை கை நிறைய அள்ளி கொண்டார் குப்பண்ணா.விருந்தினர் கூட்டத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். நடுத்தர வயது பெண்மணி ஒவ்வொருவரையும் கொள்ளையடித்தால் குறைந்தது, 20 லட்சம் கிடைக்கும்; அத்தனையும் வைர நகைகள்!தங்கத்தால் தம் உடலை, கழுத்தை மூடிக் கொள்ளாமல், மெல்லிய வைர அட்டிகை, வைரம், ரூபி போன்றவற்றில் வளையல்கள் என, கற்களாலேயே தம்மை அலங்கரித்திருந்தனர். ஒரு வளையல், ஐந்து லட்சம் ரூபாய் இருக்கும். அட்டிகையோ, 10 லட்சம் ரூபாய் இருக்கும்!திடீரென லென்ஸ் மாமா, 'மணி... இவங்கல்லாம் நடுத்தர வயது, கல்யாணமான பெண்மணிக தானே... ஒருத்தர் கழுத்திலும் தாலியை காணோமே... கவனித்தாயா?' என்றார்.லென்ஸ் மாமா சொன்னது உண்மை தான்; பலர் கழுத்திலும் தாலி, 'மிஸ்ஸிங்!''தாலியைக் கழற்றி வைப்பது இப்போ பேஷன் போலும்...' என்றேன்.'தாலி சென்டிமென்ட் எல்லாம் லேட்டஸ்ட் கண்டு பிடிப்புத்தாம்ப்பா...' என ஆரம்பித்து, குப்பண்ணா கூறியது:தமிழர்களிடத்தில், திருமணத்தின் போது தாலி கட்டும் பழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. சங்க இலக்கியங்களிலும், இதற்கு ஆதாரம் இல்லை.கி.பி., 11ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது கந்தபுராணம்; எழுதியவர் கச்சியப்ப சிவாச்சாரியார். இந்நூலில், மூன்று திருமணங்கள் பற்றி கூறப்பட்டுள்ளன.சிவபெருமானுக்கும், உமா தேவிக்கும் நடந்த திருமணம் ஒன்று; முருகனுக்கும், தெய்வானைக்கும் நடந்த திருமணம் ஒன்று; முருகனுக்கும், வள்ளிக்கும் நடந்த திருமணம் ஒன்று.உமா தேவியின் திருக்கல்யாணப் படலத்தில், இறைவனின் திருமணச் சடங்குகள், மூன்று செய்யுட்களில் கூறப்பட்டுள்ளன. உமாதேவியின் தாய், நீர் வார்க்க, தந்தையான இமையவன், மணமகனான சிவபெருமானுடைய திருவடிகளை கழுவினான். பிறகு, உமா தேவியின் கைகளை மணமகனின் கையில் வைத்து, 'நேசமோடு அளித்தேன்' என்று, தாரை வார்த்துக் கொடுத்தான்.இத்திருமணத்தில் உமாதேவியை, அவளது பெற்றோர் தர, சிவபெருமான், கைப் பிடித்தலே பாணிக்கிரஹணம். இங்கு தாலி கட்டும் சடங்கு நடைபெறவில்லை.அதே போல், வள்ளியின் தந்தையான குறவர் கோமான், முருகன் கையில் வள்ளியின் கரத்தை வைத்து, 'என் தவப் பயனால் வந்த வள்ளியம்மையை, இன்று உனக்கு கொடுத்தேன்; கொள்க...' என்று, தாரை வார்த்தான். இத்திருமணத்திற்கு புரோகிதராக இருந்து, வேத விதிப்படி எரி வளர்த்து, பிற சடங்குகளைச் செய்து முடித்தான் நாரதன். இத்திருமணத்திலும் தாலி கட்டாமை கவனிக்கத்தக்கது.தெய்வானை இந்திரனின் மகள்; அவள் திருமணக் கோலம் பூண்டு, மணப்பந்தலுக்கு வந்தாள். முருகனுக்கு பாத பூஜை செய்த இந்திரன், பின், மணமகள் கையை முருகன் கையில் வைத்து, 'இவளை உனக்குத் தந்தேன்' என்று, தாரை வார்த்துக் கொடுத்தான்.பிறகு, 'நான்முகன் தன் கருத்தினால் ஆக்கி, கரத்தினால் அளித்த மங்கள நாணை, முருகன், தெய்வானைக்கு அளித்தான்...' என்று, ஒரு செய்யுள் கூறுகிறது. திருமணத்தின் போது, மங்கள நாண் கட்டப்பட்டதாக தமிழ் இலக்கியத்தில் வந்துள்ள முதல் குறிப்பு இது தான். எனவே, இடையில் புகுந்தது தான் தாலி...' என்று கூறி, முடித்தார் குப்பண்ணா.'இடையில் புகுந்ததை, தமிழ் சினிமாக்காரர்கள், 'கப்' என, பிடித்துக் கொண்டனர்ன்னு சொல்றீங்களா...' என்று, குப்பண்ணாவிடம் கேட்டேன்.இதற்கு பதில் சொல்லாமல், மையமாக சிரித்து வைத்தார் குப்பண்ணா.'பார்ட்டி' கன ஜோராக நீண்டு கொண்டிருந்தது.