உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கடுமையான வெயில் காரணமாக, பீச் மீட்டிங்குக்கோ, வெளியிடங்களுக்கோ எங்கும் செல்ல முடியவில்லை. அலுவலக நூலகத்திலேயே அடைந்து கிடந்ததில், பல்வேறு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுவையான செய்திகள் மட்டுமே இந்த வாரம்...'பாரதிதாசன் கவிதைகள்' முதல் தொகுதியின் இரண்டாம் பதிப்பு ஈ.வெ.ரா.,வின், 'குடியரசு' பதிப்பாக, 1940 மற்றும் 1944ல் வெளியானது.மே 27, 1944ல், திருவாரூரில் நடைபெற்ற சுயமரியாதை சங்க விழாவுக்கு தலைமை வகித்தார் பாரதிதாசன். இந்த நிகழ்ச்சி, 'குடியரசு' பத்திரிகையில் வெளிவராமல் தடுக்கப்பட்டது.ஜூலை 27, 1944ல், சேலத்தில் நடந்த திராவிட இளைஞர் மாநாட்டில், பாரதிதாசன் படத்தை திறந்து வைத்துப் பேசினார், பாவலர் பால சுந்தரம். ஆனால், அவர், ஈ.வெ.ரா., படத்தை திறந்து வைத்துப் பேசியதாக, 'குடியரசில்' செய்தி வெளிவந்தது.இவற்றையெல்லாம் கூர்ந்து கவனித்து வந்த பாரதிதாசன், ஈ.வெ.ரா.,வுக்கு பதிவுத் தபால் அனுப்பினார். அதில், 'மே 27, 44ல், திருவாரூர் சுய மரியாதை சங்க இரண்டாவது ஆண்டு விழாவுக்கு நான் தலைமை வகித்தேன். அந்த நிகழ்ச்சியை, 'குடியரசு' போட மறுத்தது. அன்றிரவு திருவாரூரில் பேசினேன்; அதன் நிலையும் அவ்வாறே!'சேலத்தில் ஜூன் 19, 44ல் நடைபெற்ற திராவிடர் மாநாட்டில், பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு பற்றி, இரண்டு மணி நேரம் பேசியுள்ளார் பாலசுந்தரம். அதை மறைத்து, ஈ.வெ.ரா., வாழ்க்கையைப் பற்றி பாவலர் பேசியதாக திரித்து, செய்தி வெளியிடப்பட்டுள்ளது.'ஜூன் 24, 44ல் வெளிவந்த, 'குடியரசில்' திருச்சி மாநாட்டிற்கு ஈ.வெ.ரா., தலைமை வகிப்பார் என்று இருக்கிறது. ஆனால், ஜூன் 17, 44ல் வெளிவந்த, 'குடியரசில்' பாரதிதாசன் தலைமை வகிப்பார் என்று வெளியிட்டிருந்தது. இதன் மூலம், 'குடியரசு' என்னை அவமானப் படுத்துகிறது.'இரு முறை திருச்சி வேதாசலம், இரு கடிதங்கள் எழுதி, தலைமை வகிக்க கேட்டு கொண்டதற்கு, அந்த முடிவு தங்களுக்கும் சம்மதம் என்று எழுதியதாலே, ஒப்புக் கொண்டேன்.'நான், தங்கள் பத்திரிகைக்கு எழுதிய பாட்டு ஒன்றை, புதுவையில் கெட்ட நடத்தை உள்ள ஒருவரிடம் படித்துக் காட்டி, 'நான் இந்தப் பாட்டை விடுதலையில் போடாமல் செய்தேன்...' என்றான், உங்கள் ஆதரவு பெற்ற அயோக்கியன் ஒருவன்.'சுயமரியாதை இயக்கத்தில் என் பெயர் முன்னுக்கு வருவதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், அதை மீறி நடக்க எண்ணவே மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பல அயோக்கியர்களை முன்னே தள்ளி, அவர்களாலேயே இப்போது உள்ளுக்குள் எதிர்க்கப்பட்டு வருகிறீர்கள்...' என்று எழுதியிருந்தார்.இதற்கு ஜூலை 3, 44ல், ஈ.வெ.ரா.,விடமிருந்து பாரதிதாசனுக்கு பதில் கடிதம் வந்தது. அதில்: அன்புள்ள நண்பருக்கு, தங்கள், ரிஜிஸ்டர் கடிதம் கண்டேன். அதில் கண்ட தங்களது மன வருத்தம் அவ்வளவும் தப்பு அபிப்பிராயத்தினால் ஏற்பட்டவை என்பது என் தாழ்மையான கருத்து. நான், தங்கள் கடிதத்தை வைத்து, அலுவலகத்தில் விசாரித்ததில் கண்ட உண்மை வருமாறு:பத்திரிகையில் இடம் இல்லை; விளம்பரம் வேண்டியவர்கள் அதிகமாகப் போய் விட்டனர். அத்துடன், இயக்கத்தால் வயிறு வளர்ப்பவர் அத்தனை பேரும் விரோதிகளாகி விட்டனர். இந்த நிலையில், பத்திரிகை நடத்துவது கஷ்டமாக இருப்பதுடன், உங்களைப் போன்றோரின் நிஷ்டூரமும் ஏற்பட வேண்டியதாயிற்று.தங்கள் கவிதையை வெளியிட்டதன் மூலம், நான், தங்களுக்கு கடமைப்பட்டவன். ஆனால், அதை லாபத்துக்கு பதிப்பிக்க நான் ஆசைப்படவில்லை. ஆறு அணா அல்லது எட்டு அணா விலைக்குப் போட வேண்டும் என்பதாலேயும் சற்று நன்றாகப் போட்டு, 230 பக்கம், 180 ரூபாய் விலை போட்டு விட்டேன். இதற்காக, 25, 30 வீதம் கமிஷனும் கொடுக்கிறேன். 200 புத்தகம் பலருக்கு இலவசமாக தந்து உதவினேன்.இனியும், 600 - 700 புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் பலவற்றை வெளியூர்காரர்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். இதுதான் புத்தக நிலை. தங்களுக்கு விரோதமாக என்னிடம் யாரும் பேச மாட்டார்கள்; பேசினாலும் நான் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன். தயவு செய்து தப்பு அபிப்பிராயங்களை மாற்றி கொள்ள வேண்டுகிறேன்.'உலகப்பன் காலமும், கவிதையும்' நூலில் கே.ஜீவபாரதி எழுதியது.முதன்முதலாக ஆனந்த விகடனில், 1948ல் கல்கி எழுதிய கட்டுரை, 'ஏட்டிக்குப் போட்டி!' கல்கியின் சரளமான தமிழ்நடையும், சீர்திருத்த எண்ணமும், உலகப் போக்குக்கு எதிர்நீச்சலான சிந்தனையும் கொண்ட அக்கட்டுரையிலிருந்து: நம் முன்னோர் இருக்கும் திக்கு நோக்கி (எந்தத் திக்கு என்பது தான் தெரியவில்லை.) இரண்டு கரங்களையும் கூப்பித் தண்டனிடுகிறேன். ஆகா, அவர்கள் நமக்கு செய்திருக்கும் நன்மை தான் என்ன! வருஷம், 365 நாட்களில், ஏறக்குறைய, 300 நாட்கள் நமக்கு விடுதலை அளித்திருக்கின்றனர்.இக்காலத்தில், வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. ஆனால், நம் முன்னோர் செய்து வைத்த ஏற்பாடு எவ்வளவு அழகானது பாருங்கள்!மாதங்களிலே மார்கழியும், புரட்டாசியும் கெட்டவை; ஒரு மாதத்தை எடுத்துக் கொண்டால் அமாவாசை, பாட்டிமை, நவமி, திதி; இவை உதவாது. பின்னர் பரணி, கார்த்திகை நட்சத்திரங்கள்; சனி, செவ்வாய்க் கிழமை ஆகா! செவ்வாயோ வெறுவாயோ என்று கேட்டதில்லையா?பின்னர் மரண யோகம், கரிநாள்; மாதம், திதி, நட்சத்திரம், கிழமை, யோகம் எல்லாம் கூடிய நாள் ஒன்றிருந்தால், அதில் ராகு காலம், தியாஜ்யம், பிரதோஷம் இந்த வேளைகள் கூடா. இவ்வளவு விபத்துகளையும் கடந்து, ஒருவன் ஏதேனும் காரியம் செய்யப் போனால், யாரேனும் சிறு தும்மல் தும்மி விட்டால் போதும்... அன்று விடுமுறை தான்.ஆகா... இவ்வளவும் பூரணமாக அமலில் இருந்த அந்தப் பழைய காலம்... நினைத்தால் நாவில் ஜலம் சொட்டுகிறது. இப்போது வரவர கலியுகமல்லவா முற்றி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !