அந்துமணி பா.கே.ப.,
லெஸ்லி லாரன்ஸ்... இவர், கனடாவைச் சேர்ந்தவர். செய்தித்தாள் அச்சிடும் நியூஸ்பிரின்ட் தயாரிக்கும் கனடா மில் ஒன்றின் பிரதிநிதி.'தினமலர்' நாளிதழுக்கு காகிதம் வாங்குவது தொடர்பாக, நிர்வாகிகளிடம் பேசிய பின், அவரை டின்னருக்கு அழைத்துச் செல்ல நானும், லென்ஸ் மாமாவும் பணிக்கப்பட்டோம்!வெளிநாட்டுக்காரர் ஆயிற்றே... கார சாரமெல்லாம் அவருக்கு ஒத்துக் கொள்ளாது என நினைத்து, 'அடையார் பார்க்' ஐந்து நட்சத்திர ஓட்டலில், 'கான்டினென்டல்' உணவு வாங்கித் தரலாம் என எண்ணி, அவரிடம் சொன்னபோது, 'எங்க ஊரு சாப்பாட்டை, நான், அங்கேயே சாப்பிட மாட்டேனா... இட்லி,- தோசை நல்ல கார சட்னியுடன், சாதாரண ஓட்டலில் வாங்கித் தாருங்கள்.'கண்ணில் கண்ணீர் வருவது போல காரம் வேண்டும்... இட்லி பொடியும் இருந்தால் இன்னும் டேஸ்ட்...' எனக் கூறி, 'ஜொள்' விட்டார்.மைலாப்பூரில் தள்ளுவண்டியில் இட்லி, தோசை போடும் அக்கா கடைக்கு ஆசாமியைக் கூட்டிச் சென்று, அசத்தி விட திட்டம் போட்டேன்.'என் அறைக்கு சென்று, உடை மாற்றி வருகிறேன்... நீங்களும் வாங்களேன்...' என, அழைத்தார்.அவர் தங்கி இருந்த தாஜ் ஓட்டலை அடைந்தோம். தன்னை தயார்படுத்தி வந்தவர், மூன்று கிளாஸ்களை எடுத்து வைத்து, 'புளூ லேபிளை' ஊற்ற ஆரம்பித்தார்.'ஐயா சாமி... என்னை விட்டுடுங்க... நமக்கு பழக்கமில்ல...' என, ஜகா வாங்கியதும், ரூமில் மினி பிரிட்ஜில் இருந்த, 'சாப்ட்- டிரிங்க்' எடுத்துத் தந்தார்.அவர், 'அப்படியே' சாப்பிட, லென்ஸ் மாமா, சோடா கலந்து கொண்டார்.லாரன்ஸ் ஆரம்பித்தார்...'நேத்து, உங்க ஊருல உள்ள பிரபலமான நகைக் கடைக்கு போயிருந்தேன்; விதவிதமான வேலைப்பாடுகளுடன் தங்க, வைர நகைகள் கண்ணைக் கவர்ந்தன. என் மனைவிக்காக, 39 கிராம் எடையில், இரண்டு தங்க வளையல்கள் வாங்கினேன். அதற்கான பில்லைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன்...' என்றவர், பேச்சை நிறுத்தி, லென்ஸ் மாமாவுக்கும், அவருக்கும் இன்னொரு ரவுண்ட் மிக்ஸ் செய்து, ரூம் சர்வீசில் இருந்து வந்திருந்த, சுட்ட கோழிக்காலில் ஒன்றை எடுத்து, அதன் சதைப் பகுதியை கடித்து சுவைத்தபடி தொடர்ந்தார்...'வளையல் செய்யும் போது ஏற்பட்ட, 'சேதாரம்' (வீணாகிய தங்கம்) என்று அதற்காக ஒரு பெரும் தொகையும், 'செய் கூலி' என, அதற்கு ஒரு பெரும் தொகையும் போட்டு விலையை தாளித்திருந்தனர்.'நான், கடைக்காரரிடம், 'வீணான தங்கத்தை என்னிடம் தாருங்கள்...' எனக் கேட்டதும், அவர் சிரித்து, 'அதெல்லாம் வழக்கம் கிடையாது...' என்றார். நகை வேண்டாம் என, திரும்பக் கொடுத்து விட்டு வந்துவிட்டேன்.'நியூஸ்பிரின்ட் விற்பனை தொடர்பாக ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்துள்ளேன்.இந்தோனேஷியா, மலேஷியா, சிங்கப்பூர், ஈரான் போன்ற நாடுகளில் தங்க ஆபரணங்களுக்கு இவ்வளவு விலை வைக்க மாட்டார்கள்.'இந்தோனேஷியாவில், அந்தந்த நகைகளுடன், அவை செய்யும் போது ஏற்பட்ட சேதாரத்தை- தங்கத் தூள் அல்லது சிறிதளவு தங்கம் தனியே கட்டி வைத்திருப்பர். நமக்கு அந்த சேதார தங்கம் வேண்டாமென்றால், அதற்கான தொகையை மொத்த விலையில் கழித்துக் கொள்வர்.'எவ்வளவு பெரிய நகைக்கும் மொத்த விலையில், 10 சதவீதம் தான் சேதாரம் போடுவர். உங்க ஊரைப் போல பத்து மடங்கு அதிகம் வைக்க மாட்டார்கள். மலேஷியாவில் கூட, சேதாரத்தை அந்த நகையுடன் சேர்த்து தரும் வழக்கம் உள்ளது.'இந்தியாவில் தங்கம் வாங்குவோர் அதிகம்; ஏழை, எளியோர், நடுத்தர வர்க்கத்தினர் சிறுகச் சிறுக சேமித்து நகைகள் வாங்குகின்றனர். அவர்களிடம் இப்படி அதிக விலை வைத்து விற்பது முறையா... அரசு இதையெல்லாம் கண்டு கொள்வதில்லையா?'இந்தியாவில் தங்க விற்பனைக்கு பல கடுமையான சட்ட திட்டங்களை உருவாக்கி முறைப்படுத்தாவிட்டால், ஏழைகளும், பொது மக்களும் சுரண்டப்படுவது தொடரும்...' என்றார்.'அது சரி... அக்கா கடையில் இட்லி வாங்கிக் கொடுத்தீர்களா?' என்று தானே கேட்கிறீர்கள்...சூடான இட்லியை, அதைவிட சூடான குருமாவில் தொட்டு சாப்பிட்ட மனிதரின் மேலண்ணம் சூடு பட்டு வெந்து விட்டதாம்... மறுநாள் போனில் சொன்னார்!அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் யோகா பள்ளி நடத்துபவர், கிருஷ்ணா கவுர்; இந்தியர். இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அவரை சந்தித்த போது, 'அமெரிக்காவில், 12 வயது முதல், 17 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரிடையே குற்றங்கள் புரிவது அதிகரித்து வருகிறது.'இப்படிப்பட்டவர்களை சீர்திருத்தப் பள்ளிகளில் அடைத்து, தண்டனைக் காலம் முடிந்ததும் வெளியே அனுப்புகின்றனர். அவர்கள் மீது இளம் குற்றவாளி என்ற முத்திரை குத்தப்பட்டு விடுகிறது. இதனால், வெறுப்படையும் அவர்கள், மேலும் குற்றம் புரியத் துணிகின்றனர்.'இவர்களுக்கு, 'யோகா' கற்றுத் தந்து, அவர்களிடையே அன்பையும், பாசத்தையும் மலரச் செய்து, அவர்களை மனித நேயம் மிக்கவர்களாக்க முயன்று வருகிறேன்.'இதற்கு நல்ல பலனும் கிடைத்து வருகிறது. யோகா பயிலும் சிறுவர்கள், 'மனதில் அமைதி ஏற்பட்டு, பிறருக்கு உதவியாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறதே தவிர, பிறருக்குத் தீங்கு செய்யும் எண்ணம் எங்களிடமிருந்து போய் விட்டது...' என்று கூறுகின்றனர்.'எனது இந்த முயற்சிக்கு அமெரிக்க போலீசாரிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. யோகாவுடன், சைவ உணவின் மகிமையையும், அமெரிக்கர்களுக்கு உணர்த்தி வருகிறேன்.'உங்களுக்கே தெரியும்... மேல் நாட்டவரின் முக்கிய உணவே, இறைச்சி தான். வாய் நிறைய, வயிறு முட்ட கொழுப்பு நிறைந்த இறைச்சியை தின்றால் தான், அவர்களுக்கு திருப்தி ஏற்படும். 'இதற்காகவே, தீவனம் போட்டு, மாடு, ஆடு மற்றும் பன்றிகளை கொழுக்க வளர்க்கின்றனர். இந்த கால் நடைகளுக்கு ரசாயனம் கலந்த தீவனங்கள் தந்தாலும், புல், தாவர வகைத் தீவனங்களும், தண்ணீரும் நிறைய தேவைப்படுகிறது!'தாவர வளமும், நீர் வளமும் இது போல, கால்நடைகளுக்கு அதிக அளவில் உணவாக்கப்படுவதால், உலகின் தாவர மற்றும் தண்ணீர் வளம் குறையும் அபாயம் வருங்காலத்தில் ஏற்படும்.'இது பற்றி கொஞ்சமும் சிந்திக்காது, இயற்கை வளங்களை அழித்து, இறைச்சிக்காக கால் நடைகள் வளர்க்கப்படுகின்றன.'இரண்டு பன்களுக்கிடையே வடை போன்ற சைசில் பன்றி இறைச்சியை வைத்து சாப்பிடுவது அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு, 'ஹம் பர்கர்' என்று பெயர்.'உளுந்து வடை சைசில் உள்ள ஒரு, 'ஹம் பர்கர்' செய்வதற்கு, 800 கிராம் தானியத்தை பன்றி தின்கிறது. இது மட்டுமல்ல, 55 சதுர அடி புல்லை பன்றி தின்ன வேண்டும். இது போக, ஐந்து லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதையெல்லாம் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டறிந்து, எச்சரித்து வருகின்றனர்.'என்னுடைய இந்த பிரசாரத்தால், பல அமெரிக்கர்கள் சைவக் கொக்குகளாக மாறிவிட்டனர். என் இந்த முயற்சிகளுக்கு, சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறையினரும், மருத்துவத்துறை வல்லுனர்களும், ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்...' என்று ஒரு பெரிய உரை நிகழ்த்தினார்.நீங்கள் எப்போ மாறப் போறீங்க?