அந்துமணி பா.கே.ப.,
கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையின் கால் சென்டர்கள் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பெருகி விட்டதால், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது.கடந்த வாரத்தில் ஒருநாள், முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சென்னை வந்திருந்தார், வெளியூர் நண்பர் ஒருவர்; என் உதவியை நாடினார். தி.நகரில் உள்ள ஒரு பரிசோதனை கூடத்தில் அவருக்கு, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிக் கொடுத்திருந்தேன். மறுநாள் காலை, வெறும் வயிற்றுடன் வரச் சொல்லியிருந்தனர்.தனியே போக அச்சப்பட்ட நண்பர், என்னையும் அழைத்தார். காலை நேரத்தில் அந்த பரிசோதனை கூடத்தின் வெளி வாயிலை ஒட்டி, வண்டியை நிறுத்தி இறங்கவும், என் வண்டிக்குப் பின், ஐந்து புது கார்கள், 'சர்... சர்' என, வேகமாக வந்து நின்றன.ஒவ்வொரு காரில் இருந்தும் ஒரு இளம் பெண் இறங்கினர்; அனைவருமே, 23 -- 25 வயதுக்குட்பட்டவர்கள்.புரிந்து போனது... அவர்கள் அனைவரும் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்பது! அந்நிறுவனத்தினர் உடல் பரிசோதனைக்காக இப்பெண்களை அனுப்பியுள்ளனர் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள, 'கேன்டிடேட்'களுக்கு, பல ஆயிரம் வரை சம்பளம் வழங்குகின்றன, சாப்ட்வேர் நிறுவனங்கள். இவ்வளவு சின்ன வயதில் அவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வர்!உடனே, புது கார் வாங்க வேண்டியது தான்! பல நிதி நிறுவனங்கள், சுலப மாத தவணையில் கார்களை விற்பனை செய்கின்றனவே... எனவே, 90 சதவிகிதம் பேர் கார் வாங்கி விடுகின்றனர்.இப்படி வாழ்க்கைத் தரம் உயர்ந்தாலும், வாழ்க்கை முறை தவிடு பொடியாகி விட்டது. இவர்கள் சூரியனைப் பார்ப்பதே அரிதாகி வருகிறது.ஒரு சாட்டிலைட் ரேடியோ நிலையத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், சாப்ட்வேர் துறையில் வேலை கிடைத்து சென்று விட்டார். சமீபத்தில், நம் அலுவலகத்தில் அப்பெண்ணை சந்தித்த போது, 'வேலை எப்படி இருக்கும்மா?' எனக் கேட்டேன்.'வேலை இன்ட்ரஸ்டிங்கா, சவாலா இருக்கு; எதிர்பாராத சம்பளம் மற்றும் அலவன்சுகள் இருக்கு... அருமையான சாப்பாடு குடுக்கறாங்க... ஆனா, வாழ்க்கை முறை தான் மாறிப் போச்சு.'பெரும்பாலும், அமெரிக்க நிறுவனங்களுக் காகத்தான் சாப்ட்வேர் தயார் பண்றோம்... அதனால அவங்களோட தொடர்பு கொள்ள, அங்க, பகலா இருக்கும் போது தான் முடியும்; அப்ப, இங்கே இரவு!'எனவே, தினமும் இரவில் தான் வேலை... இரவு வேலை என்றாலும், பெண்களின் பாதுகாப்புக்கெல்லாம் பயம் ஒன்றும் இல்லை. இரவு, இரண்டு மணிக்கு முழு சாப்பாடு. விடிந்து, வீட்டுக்கு வந்த பின், பகல் முழுவதும், ஏன் மாலை வரை கூட துாங்க வேண்டியுள்ளது.'இதனால், சாதாரண மனிதர்கள் செய்யும் எந்த ரொட்டீன் வேலையும், பொழுது போக்கும், உறவினர், நண்பரைக் காணச் செல்வதும் முடியாமல் போய் விடுகிறது.'சனி, ஞாயிறு தான் விடுமுறை... அந்த நாட்களில், இரவில் துாக்கம் வருவதே இல்லை. இரவு, இரண்டு மணிக்கு அகோர பசி எடுக்கிறது. அந்த நேரத்தில் பிரிஜை, கிச்சனைக் குடைந்தால் அம்மா சத்தம் போடுறாங்க!'திங்கள் டு வெள்ளி வரை பசங்க குடிக்கவே மாட்டாங்க... சனிக்கிழமை இரவு சக்கை போடு போடுறாங்க... ஹாஸ்டல்ல தங்கி வேலை பார்க்கும் சாப்ட்வேர் பொண்ணுங்களும், பசங்களோட சேர்ந்து விடிய விடிய டிஸ்கோ கிளப்புகளில் கும்மாளம் போடுறாங்க... சில பசங்க, காரை எடுத்துக்கிட்டு புதுச்சேரி போயிடறாங்க...'தினமும் ராத்திரியில வேலைக்குப் போறப்போ ஒண்ணுமே சொல்லாத அம்மா, ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் வெளியே புறப்பட்டா, 'எங்கே போறே?'ன்னு கேக்கறாங்க... இப்படி மாறிப் போச்சு எங்க வாழ்க்கை...' என, நீண்ட விளக்கம் கொடுத்தார்.சில மாதங்களுக்கு முன் நானும், லென்ஸ் மாமாவும் புதுச்சேரி போகும் போது, கிழக்கு கடற்கரை சாலையில் வெவ்வேறு இடங்களில், புத்தம் புது கார்கள் நான்கு, விபத்துக்குள்ளாகி கிடப்பதைக் கண்டோம்.அப்பெண் சொன்னது போல சாப்ட்வேர் பையன்கள் செய்த விபத்துகள் தான் அவை!அவர்களது, 20 - 22 வயது வரை பைக்கை ஓட்டியே பழகியவர்கள், பைக்கை போல காரையும் நினைத்து, புகுந்து புகுந்து செல்ல எத்தனிக்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் வண்டி ஓட்டுவது ஒரு கலை... இவர்கள், கார் டிரைவிங்கிற்கு புதியவர்கள் என்பதால், அக்கலை கைவரப் பெறாதவர்களாக உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலையில், இரவில் கார் ஓட்ட மிகுந்த அனுபவம் தேவை. இவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, இரவில் கார் ஓட்டி, மாட்டிக் கொள்கின்றனர்; அதுவும், புதுச்சேரியிலிருந்து திரும்பும் போது முழு போதையில், அதீத வேகத்தில் கார் ஓட்டி விபத்தை சந்திக்கின்றனர்.காருக்கு புதியவர்களான இவர்கள் மூலமாக, கிழக்கு கடற்கரை சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து இருப்பதால், சனி, ஞாயிறு அதுவும் இரவில் மேற்படி சாலையை தவிர்ப்பது நல்லது!சென்னையில் வழக்கறிஞராக உள்ளார், முகமது முகைதீன் என்ற வாசகர். கடந்த மாதம், கடிதம் ஒன்று எழுதி இருந்தார். நம் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டிய முக்கிய அம்சம் குறித்து அதில் விளக்கி இருந்தார்.கடிதம் இதோ...நம் கல்வி முறை குறித்தும், அதில் தேவையான ஒரு அவசிய மாற்றம் குறித்தும் என் மனதில் தோன்றியவற்றை சொல்கிறேன்...முதல் வகுப்பில், அ - அம்மா; ஆ - ஆடு துவங்கி, பத்தாம் வகுப்பு அல்ஜீப்ரா, புவியியல், அறிவியல், சமூக அறிவியல், தமிழ் இலக்கணம், ஆங்கில இலக்கணம் என, பலதரப்பட்ட பாடங்கள் நமக்கு போதிக்கப்படுகின்றன. 25 வயதிற்குப் பின், ஒருவன் எந்த துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், பள்ளிக் கல்வியின் காரணத்தால் மருத்துவம், அறிவியல், கணிதம் இன்னும் மேற்சொன்ன துறைகள் பற்றி சிறிதளவேனும் பொது அறிவு பெற்று அவைகளை தெரிந்து கொள்கிறான்.சட்டம் எனக்குத் தெரியாது என சொல்வதன் மூலம், ஒருவன் தான் செய்த தவறுகளில் இருந்து தப்பிக்க இயலாது. ஆனால், வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும், நீதித்துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சட்டம் பற்றிய தெளிவான அறிவு உள்ளது.இந்திய தண்டனை சட்டத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாதவர்கள் நம் நாட்டில் அதிகம். நம் வாழ்வில் எல்லா நிலையிலும் சட்டம் சம்பந்தப்பட்டுள்ளது. சட்ட அறிவு என்பது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவசியம் கிட்ட வேண்டிய ஒன்று. அதற்கு ஒரே வழி பள்ளிப் பாடத் திட்டங்களில் ஒரு பாடமாக சட்டமும் இருக்க வேண்டும்.ஆறாம் வகுப்பில், இ.பி.கோ., என துவங்கினால், சி.பி.சி., குடும்ப நலச் சட்டம், வாரிசு உரிமை என கடந்து, பள்ளிப்பருவத்தை முடிக்கும் போது முழுமையான சட்ட அறிவோடு ஒரு இந்தியனை உருவாக்கலாம்.இதை படித்து, ஒருவர், தன் சட்ட அறிவால் இந்த தேசத்தை காப்பாற்றுகிறாரோ இல்லையோ... அடிப்படையில் தன்னை காப்பாற்றிக் கொள்ளலாம். சட்டம் அறிந்து கொள்வது ஒரு தற்காப்புக் கலை.காவல் நிலைய சாவுகள், வரதட்சணை கொலைகள், விவாகரத்து வேடிக்கைகள் என நாள்தோறும் பார்க்கிறோம். இவைகளில் இருந்து நம்மை நாம் காக்க, நம் கல்வித்துறை, பள்ளிப் பாடமுறையிலேயே சட்டத்தையும் ஒரு பாடமாக்க வேண்டும். நடந்தால் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.- சரியான யோசனையாகவே தெரிகிறது; தொடர்புடையவர்கள் சிந்திக்க வேண்டும்!