அந்துமணி பா.கே.ப.,
இந்த வாரம் சுவாரஸ்யமான குட்டிக் கதை மற்றும் உண்மைச் சம்பவம் ஒன்று...மன்னர்கள் என்றாலே, இரவு நேரங்களில், மாறுவேடத்துடன் நகர்வலம் வருவர் என்பதை அறிவீர்கள்தானே!ஒருமுறை, கொச்சி மகாராஜா, மாறு வேடத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஊட்டுப்பிறை (அன்ன சத்திரத்தை, மலையாளத்தில் ஊட்டுப்பிறை என்பர். வறியவர்களுக்கும், வழிப் போக்கர்களுக்கும் அன்னதானம் செய்வதே அதன் முழு நேரத் தொழில்.)யின் முன் நின்று கொண்டிருந்த ஒரு அந்தணன், சகட்டுமேனிக்கு, மகாராஜாவை ஏசிக் கொண்டிருந்தான்.அவனருகே சென்ற மகாராஜா, அவன் யாரென்றும், ஏன் இப்படி நடு இரவில் வீதியில் நின்று, மகாராஜாவை திட்டிக் கொண்டிருக்கிறான் என்றும் கேட்டார்.அந்தணனோ, தான் ஒரு வழிப்போக்கன் என்றும், இரண்டு நாள் பட்டினியோடு, ஊட்டுப்பிறையில் சோறு கிடைக்கும் என்று நம்பி வந்தவனை, இன்று அமாவாசை... அமாவாசையன்று இரவு உணவு வழங்குவதில்லை என்றும் கூறி, வெளியே அனுப்பி விட்டதாகவும், அதனால், அமாவாசை இரவு உணவு அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்த மகாராஜாவை திட்டிக் கொண்டிருப்பதாகவும், கூறி இருக்கிறான்.மகாராஜா பொறுமையாக, 'நீரோ அந்தணர். அமாவாசையென்றால் பித்ரு தர்ப்பணம் செய்து இருப்பீர். பித்ருகளுக்கு கர்மா செய்த அன்று இரவு, உணவு உண்ணுதல் முறையல்லவே. அதனால் தான் இரவு உணவு இல்லையென்று சொல்லி இருப்பர்...' என்று கூறி இருக்கிறார்.மகாராஜாவை கோபமாய் முறைத்து, 'இந்த நாட்டை ஆளும் மன்னன் உயிரோடு தானே இருக்கிறார்?' என்று கேட்டிருக்கிறான், அந்தணன்.மகாராஜாவிற்கு குழப்பம். 'ஆமாம்... உயிரோடு தான் இருக்கிறார். ஏன், என்ன விஷயம்?' என்று கேட்டு இருக்கிறார்.'ஒன்றுமில்லை... பிரஜைகளுக்கு ராஜா தானே தகப்பன். மகாராஜா உயிரோடு உள்ள போது ஊட்டுப்பிறையில் அமாவாசை இரவு உணவு இல்லை என்பது என்ன நியாயம்?'அந்தணன் கேட்ட கேள்வியிலுள்ள உண்மை, மகாராஜாவுக்கு உறைத்தது. ஊட்டுப்பிறையில் எப்போதும் உணவு வழங்க உடனடியாக உத்தரவிட்டாராம்.இன்னொரு சம்பவம்:அது ஒரு ரயில்வே ஸ்டேஷன். வழக்கமாக அங்கு ஒரு பாசஞ்சர் வண்டி, நள்ளிரவு, 12:00 மணிக்கு வரும். அந்த ஸ்டேஷனில் இருந்து ஒரு பயணி மட்டுமே வண்டியில் ஏறுவார். அந்த வண்டியை விட்டால் அடுத்த வண்டி விடிகாலை, 4:00 மணிக்கு தான்.அந்த ஒரேயொரு பயணிக்காக வண்டி அந்த ஸ்டேஷனில் நிற்பது மட்டுமின்றி, அவரை வரவேற்று வழியனுப்பவென்றே ஒரு ஸ்டேஷன் மாஸ்டரும், ஒரு ஊழியரும் காத்திருப்பதும் வழக்கம்.வழக்கமாக, 12:00 மணிக்கு வரும் வண்டி, அன்று இரண்டு நிமிடங்கள் முன்னதாகவே வந்து விட்டது. ஏதோ நினைவிலிருந்த ஸ்டேஷன் மாஸ்டரும், நம் கதையின் ஹீரோ வந்தாரா... வந்து வண்டியில் ஏறினாரா என்று தெரியாமல் சிக்னல் கொடுத்து விட, ரயிலும், 'கூ ஜிகு ஜிகு'வென்று புறப்பட்டுப் போய் விட்டது.ரயிலை வழியனுப்பி விட்டு ஸ்டேஷன் மாஸ்டர், தன் அறைக்கு வரவும், கதாநாயகன் ஸ்டேஷனுக்குள் நுழையவும் சரியாக இருந்தது. பதறிப் போன ஸ்டேஷன் மாஸ்டர், பயணியிடம்:எஸ்.எம்: 'ஹலோ! வணக்கம். நீங்க இப்பத்தானா வர்றீங்க?'பயணி: 'ஆமா, என்ன விஷயம்?'எஸ்.எம்: 'ஒண்ணுமில்லை... நீங்க வரலைங்கறது தெரியாம இப்ப தான் வண்டி புறப்பட்டுப் போச்சு...'பயணி: 'அதெப்படி சார் போகும். 12:00 மணி தானே, 'டிபாச்சர்' டைம். பாருங்க மணி, 11:59 தான் ஆவுது...'எஸ்.எம்: 'எக்ஸ்யூஸ் மீ... சார்... தப்பு நடந்து போச்சு... இப்ப என்ன பண்றது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லேன்னா, என், 'ரூம்லயே ரெஸ்ட்' எடுத்துட்டு, 'மார்னிங்' முதல் வண்டியில வீட்டுக்குப் போயிருங்களேன்...' பயணி: 'நல்லா இருக்குங்க நீங்க சொல்றது... வண்டியை சரியான நேரத்துல அனுப்புறதுக்கும், பாசஞ்சர்ஸ் ஏறிட்டாங்களான்னு பாக்குறதுக்கும் தான் உங்களை வேலைக்கு வைச்சிருக்கு...'எஸ்.எம்: 'மன்னிச்சிருங்க சார்... இப்போ என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க...'பயணி: 'என்ன செய்யணுமா? அட்வான்சா கிளம்பிப் போன வண்டியை அடுத்த ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லி, 'ரிவர்ஸ்ல' கொண்டு வரச் சொல்லுங்க... நீங்க செய்த தப்புக்கு, நான் ஏன் தண்டனை அனுபவிக்கணும்?'எஸ்.எம்: 'ஓகே சார்... ப்ளீஸ்... அதுவரைக்கும் என் ரூம்லேயே வெயிட் பண்ணுங்க. நான் அடுத்த ஸ்டேஷனுக்கு, 'இன்பார்ம்' பண்றேன்...'நம்புவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து நாட்டில் நடந்த உண்மை நிகழ்ச்சி இது! இரண்டு நிமிடங்கள் முன்னதாகப் புறப்பட்டுச் சென்ற ரயில் திரும்பி வந்து, அந்த பயணியை ஏற்றி சென்றது.இது போன்றதொரு சம்பவம் இந்தியாவில் நடந்து இருந்தால், 'க்ளைமாக்ஸ்' எப்படி இருக்கும்?கற்பனையை ஓட விட்டேன்...பயணி: இன்னா சார் ட்ரெயின் பூட்ச்சா?எஸ்.எம்: ஆங்! நீ ஆட்டிகினு வர்றது வரிக்கும் வண்டி நிக்குமா? அது அப்பவே பூட்ச்சே!பயணி: இன்னாடாது ரோதனை! அய்ய... இப்ப நா எப்டி வூட்டுக்குப் போறது?எஸ்.எம்: பொடி நடையா நடந்து போ. இல்லாட்டி கம்னு படு. காலீல பர்ஸ்ட் வண்டில போ...பயணி: தோடா... ஆமா... பன்னெண்டு மணிக்கு தானே டிபாச்சரு... எப்படி வண்டி முன்னாலியே போச்சி?எஸ்.எம்: மணி பன்னெண்டு அட்ச்சி பத்து நிமிசமாச்சி அக்காங்!பயணி: ரீல் உடாதே சார்... இதோ பார் என் வாட்சுல 11.55 தான் ஆவுது!எஸ்.எம்: ம்... பொல்லாத வாட்சு. கிரீன்வீச் டயம் காட்டுது. பொத்திகினு படு. இல்லாட்டி போலீஸ்ல புட்ச்சி குடுத்துருவேன்!அரசனும், அரசாங்க ஊழியனும் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுத்து எவ்வளவு மரியாதையோடு நடத்தினர்... இங்கோ... இப்போதோ...ஒருவரது குறையே, அவருக்கு நன்மைகள் பலவற்றை பெற்றுத் தருகிறது என்பது வியக்க வைக்கும் விஷயம் தானே...நண்பர் ஒருவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறார். டிபார்ட்மென்ட்டின் பல பிரிவுகளிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.கொட்டாவி விட்டால், இவருக்கு கண்கலங்கி, கண்ணீர் வந்து விடும்.அவ்வப்போது, லென்ஸ் மாமாவின், 'கச்சேரி'களில் கலந்து கொள்வார். மூக்கு முட்ட உற்சாக பானம் சாப்பிடுவார். அதன் பின், ஸ்கூட்டரை கிளப்பி, அமெரிக்காவில் ஓட்டுவது போல ரோட்டின் வலது புறம், 'சர்' என புறப்பட்டு விடுவார்!வீட்டுக்குப் போனதும், நண்பரின் மனைவி, 'மண்டகப்படி' நடத்துவார். ஆசாமிக்கு அந்நேரத்திற்குள் துாக்கம் வேறு வந்திருக்குமா... 'ஒய்ப்' திட்டுவதை எல்லாம் தலையைக் குனிந்தபடி கேட்டுக் கொண்டே, வெளியே தெரியாதபடி கொட்டாவி விட்டு, தலையை நிமிர்த்தி பாவம் போல பார்ப்பார்.கணவரின் கண்களில் கண்ணீரைக் கண்டதும், 'ஓகோ... செய்த தவறை உணர்ந்து, வருத்தப்பட்டு அழுகிறார் போலும்...' என எண்ணி, 'சரி... சரி... அழாதீங்க... ஆம்பளைங்க அழவே கூடாது...' என ஆறுதல் சொல்லி, அன்பாக உணவு பரிமாறுவாராம்...சமீபத்தில் ஒருநாள், ரொம்ப கண்டிப்பான இவரது மேலதிகாரி, அடுத்த நாள் காலை, 10:00 மணிக்கே அலுவலகம் வந்து விட வேண்டும்... முக்கியமான வேலை இருக்கிறது எனக் கூறி இருக்கிறார்.ஆனால், நம் நண்பரோ, முதல் நாள் இரவு, உ.பா., கச்சேரி நடத்தி, தாமதமாக, காலை, 11:30 மணிக்கு அலுவலகம் சென்றுள்ளார்.கண்டிப்பான மேலதிகாரிக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டதாம்! நண்பருக்கு செம டோஸ் விட்டவர், 'உனக்கு, 'மெமோ' கொடுக்கப் போறேன்!' எனக் கூறி, அதை, 'டைப்' செய்யவும் ஏற்பாடு செய்து விட்டார்.'மெமோ'வின் ஒரு காப்பி, இவருக்கு வேண்டிய மேல் அதிகாரி ஒருவரின் பார்வைக்கும் போகும்! அந்த மேல் அதிகாரி நண்பர் மீது நன்மதிப்பு வைத்திருப்பவர்! எனவே, நண்பர், நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்து, பாவம் போல தலையை தொங்கப் போட்டு கொட்டாவி விட்டு, அதிகாரியைப் பார்த்து இருக்கிறார்!நண்பரின் கண்களில் கண்ணீரைக் கண்ட அதிகாரி, 'ச்சீ... சீ... வாட்ஸ் திஸ் மேன்... கோ... கோ... போய் வேலையைப் பாரு... 'மெமோ' எல்லாம் தரலே...' என, ஒரே வினாடியில் சாந்தப்பட்டு, நண்பரின் தோளில் தட்டி அனுப்பி வைத்திருக்கிறார்!தப்பித்த சந்தோஷத்தில், மனிதர் வெளியே வந்து, ஒரு, 'தம்' பற்ற வைத்து, தன் குறையைத் தானே மெச்சிக் கொண்டாராம்!கண்ணீருக்குத் தான் எவ்வளவு, 'பவர்' பாருங்களேன்!