உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

''மனுஷா எதையும் வாங்கி சாப்பிட முடியாத நிலைமையை கடவுள் கொடுத்துட்டார்,'' என, புலம்பியவாறே வந்தார், குப்பண்ணா.''என்ன ஆச்சு... ஏன் புலம்பறீங்க?'' என, கேட்டேன்.''நேத்து, 'மூஞ்சி' புத்தகத்துல ஒரு சேதி வந்திருந்தது... அத நினைச்சா வயத்த கலக்குது,'' என்றார்.'மூஞ்சி புத்தகமா...' என, புரியாமல் விழித்த என்னை, ''பேஸ் புக்கை தான் இப்படி சொல்கிறார்,'' என விளக்கினார், லென்ஸ் மாமா.'பேஸ் புக் என்றால், நிச்சயம் சுவாரசியமான தகவலாக தான் இருக்கும்...' என்று, நினைத்தபடி, காதை தீட்டிக் கொண்டேன்...குப்பண்ணாவே தொடர்ந்தார்...''ஒரு சின்ன பையன், தெருவோர கடையில விற்கிற அன்னாசி பழம் வாங்கி சாப்பிட்டான். மறுநாளிலிருந்து உடம்பு சரியில்லாம போயிடுச்சு. 15 நாள் ஆகியும், முடியாம இருக்கானேன்னு, பெத்தவா, அவனை, டாக்டர்ட்ட கூட்டிண்டு போயிருக்கா... ரத்தம் எடுத்து பரிசோதித்ததில், பையனுக்கு, 'எய்ட்ஸ்'ன்னு தெரிஞ்சது.''குடும்பத்துல இருக்கற எல்லாருக்கும் ரத்த பரிசோதனை எடுத்து, சோதித்து இருக்கா... யாருக்கும், 'எய்ட்ஸ்' இல்ல. உடனே, பையனிடம் விசாரித்தபோது, அன்னாசி பழம் வாங்கி சாப்பிட்டதா கூறினான்.''உடனே, பழ வியாபாரியை பரிசோதிச்சு பார்த்திருக்கா. வியாபாரியோட கையில வெட்டுக்காயம் இருந்திருக்கு. அவரோட, ரத்த பரிசோதனையில, 'எய்ட்ஸ்'ன்னு உறுதியாயிருக்கு. இது தெரியாமலேயே அந்த வியாபாரி, இத்தனை நாள் இருந்திருக்கானாம்... இப்ப சொல்லும் ஓய், மனுஷன் யார நம்பி, எதை தான் சாப்பிட்டு உயிர் வாழறது,'' என, முடித்தார்.நோயாளியின் வெட்டுக் காயம் மூலம், 'எய்ட்ஸ்' பரவ வாய்ப்புள்ளது என்பது, சரி தான். ஆனால், அது உடனே, 10 - 15 நாட்களிலேயே வெளிப்பட்டு விட வாய்ப்பில்லை. அடுத்ததாக, ரத்த பரிசோதனையில், 'எய்ட்ஸ்' என, கண்டுபிடிக்க, நீண்ட நாள் ஆகும். 'எலிசா' என்ற பரிசோதனையில் உறுதிபடுத்த, இரண்டு, மூன்று கட்டங்களாக சோதனை நடத்திய பின்னரே, முடிவு தெரியும். அப்படியிருக்க, அந்த டாக்டர், உடனே, 'எய்ட்ஸ்' என, எப்படி கூறினார்...பழ வியாபாரியான, 'எய்ட்ஸ்' நோயாளி, எப்படி தெம்பாக இருக்கிறார்... வாய் வழியாக, 'எய்ட்ஸ்' பரவ வாய்ப்புகள் மிக மிக குறைவு என்பதால் தானே, 'எய்ட்ஸ்' நோயாளி உபயோகிக்கும் பாத்திரங்கள் மூலம் நோய் பரவாது என, கூறுகின்றனர்.அப்படியிருக்க, அச்சிறுவனுக்கு, எப்படி, 'எய்ட்ஸ்' பரவியது... ஒருவேளை, சிறுவனின் வாயிலும் புண் இருந்திருக்குமோ... என்றெல்லாம், என் சிந்தனை சிறகடித்து பறந்தது.அடக்கடவுளே... மக்களிடம், 'எய்ட்ஸ்' பற்றி எத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இப்படிப்பட்ட வதந்திகள், அதுவும், படித்தவர் மத்தியில் உள்ளதே... என, அதிர்ந்தேன்.இதைப் பற்றி நன்கறிந்தவர்கள், எனக்கு எழுதுங்களேன்! மக்களுக்கு நம்மால் ஆன விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். குறைந்தபட்சம் பலர் பயன்படுத்தும் ஊடகங்கள் வாயிலாக, பொய்யான தகவல்கள் பரவுவதையாவது தடுப்போம்! கோவை வாசகர், ரவிக்குமார் வழங்கிய, 'உடைந்த கப்பல்' புத்தகத்தை படிக்க நேரமில்லாத காரணத்தால், ஒத்தி போட்டபடியே இருந்தேன்; ஒரு வழியாய் புதுச்சேரிக்கு செல்கையில், கையோடு எடுத்து போய் வாசித்தேன். படித்து முடித்த பின், 'ஆஹா... இந்த புத்தகத்தை இத்தனை நாட்கள் படிக்காமல் இருந்து விட்டோமே...' எனத் தோன்றியது. அந்த அளவிற்கு பல சுவாரசியமான தகவல்களுடன் இருந்தது, புத்தகம்.பவளப் பாறைகள் எவ்வாறு உருவாகின்றன என்பதை பற்றி ஒரு தகவல்...இறந்த பவளத்தில், கிளைகள் போன்று பிரிந்திருக்கும் பாகங்கள் இருக்கின்றன. அதன் ஒவ்வொரு கிளையிலும், 100 துவாரங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில், இந்த ஒவ்வொரு துவாரத்திலும் ஒவ்வொரு பூச்சி உயிர் வாழ்ந்துள்ளன. பூச்சிகள் அதிகமாக அதிகமாக, பவளக் கிளைகளும், அதிகமாகிக் கொண்டே போகும்.'பசிபிக்' மகா சமுத்திரத்தில், பல தீவுகள் இருக்கின்றன. குண்டூசி தலை அளவு கூட இல்லாத பூச்சிகள் இந்த வேலையை செய்கின்றன என்பது, ஆச்சரியமான விஷயம். இந்த சமுத்திரத்தில் சுற்றியுள்ள பவளப்பாறை தீவுகள் யாவும், இந்த பூச்சிகளால் தான் உண்டானவை. முதலில், இவை ஆழ்கடலின் அடிபாகத்தில் வளரும். அங்கு, காற்று மற்றும் அலைகள் இல்லாததால் நன்றாக வளரும். அப்படியே உயரமாக வளர்ந்து, கடைசியில் தண்ணீர் மட்டத்தை எட்டி விடுகிறது. ஆனால், தண்ணீர் மட்டத்திற்கு வந்ததும், வளர்ச்சி தடைபடுகிறது. காற்றும், அலைகளும் அவைகளுக்கு விரோதிகளாகி விடுகின்றன. அப்படி, தண்ணீர் மட்டத்திற்கு மேல் வந்ததும், பூச்சிகள் இறந்து விடுகின்றன.பின், தீவு, நிதானமாக உண்டாகிறது; அதுவும் சந்தர்ப்பத்தை பொறுத்து தான். உதாரணமாக, சிப்பிகள் ஒட்டியுள்ள ஒரு பெரிய மரத்துண்டு, அலைகளால் அடித்து வரப்பட்டு, இந்த பவளப் பாறைகளுக்கு இடையில் சிக்குகிறது. அப்போது தான், தீவு உண்டாகும் முதல் படி ஆரம்பமாகிறது.காற்றில்லாத பக்கத்தில் உள்ள பவளங்களுக்கு, இது பாதுகாப்பளிக்கிறது. பாதுகாப்பு கிடைத்தவுடன் மறுபடியும் பவளங்கள் வளர்ந்து, பாறைகளாக மாறுகின்றன. இவை, கடல் பறவைகள் தங்குவதற்கு இடமாக ஆகிவிடுகிறது.காலக்கிரமத்தில், மிதந்து வரும் பொருட்களும், அதன் மேல் படிகின்றன. காற்றினால் துரத்தப்பட்ட கடல் பறவைகளுக்கு இதுவே புகலிடமாகிறது. அவை எடுத்து வந்த விதைகள் விழுந்து, செடி, கொடி, மரங்களாக வளர ஆரம்பிக்கின்றன.காற்றில்லாத பக்கங்களில் பவளங்கள் வேகமாக வளர்கின்றன. இப்படியே ஒவ்வொரு ஆண்டும், நிலம் அதிகமாகிக் கொண்டே போகும்.- என, தீவு உருவாவதைப் பற்றி சுவாரசியமாக கூறப்பட்டிருந்தது... இதைப் படித்து மகிழ்ந்தேன்! நண்பர் ஒருவர் கூறியது:இந்தியன், சீனாக்காரன், இங்கிலாந்துகாரன் மற்றும் அமெரிக்கன், நான்கு பேரும், ஓரிடத்தில், 'பீர்' சாப்பிட சென்றனர்.பீரில், பூச்சி விழுந்து கிடந்தது.பூச்சியை எடுத்து போட்டு விட்டு, பீரை குடித்தான், இந்தியன்.பூச்சியை சாப்பிட்டு, பீரை கீழே கொட்டினான், சீனாக்காரன்.பூச்சியோடு, பீரை கீழே கொட்டி விட்டு போனான், இங்கிலாந்துகாரன்.பூச்சியை சீனாக்காரனிடம் விற்றான்; அந்த காசில், பக்கத்து கடையில் போய் சுத்தமான, பீர் வாங்கி குடித்தான், அமெரிக்கன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !