உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அந்த இளம்பெண், 'மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன்' நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்; கிறிஸ்தவர். லென்ஸ் மாமாவுடன் நல்ல நட்பு அவருக்கு!அப்பெண்ணை முதன் முதலில் பார்த்த போதே, 'இப்பெண், ரொம்ப கர்வம் பிடித்த பெண் போல தெரிகிறதே...' என நினைத்து, நான் ஒதுங்கியே இருந்தேன் - நம்மை எல்லாம் எங்கே மதிக்கப் போகிறார் என்ற எண்ணம்.வயதானவராக, தமாஷ் பேர்வழியாக லென்ஸ் மாமா இருப்பதால், எவரும், அவரிடம் சுலபமாகப் பழகி விடுவர்; அப்பெண்ணும் தான்.அப்பெண், அவ்வப்போது அலுவலகம் வருவார்... லென்ஸ் மாமாவுடன் சிறிது நேரம் சிரிக்க, சிரிக்க பேசி விட்டுச் செல்வார்... என்ன பேசினர் என்றோ, எதற்கு வந்தார் என்பது பற்றியோ கண்டு கொள்ள மாட்டேன்.ஒருநாள், என்னுடன் பேச வேண்டும் என, மாமாவிடம் சொல்லி விட்டார் அப்பெண். 'அந்தப் பொண்ணு ரொம்ப தலைக்கனம் பிடித்தவராயிற்றே... நான் எப்படி பேசுவதாம்?' என்றேன்; பின், பேச ஒப்புக் கொண்டேன்.இரண்டு, மூன்று முறை பேசிய பின் தான், என் கணிப்பு முற்றிலும் தவறு என்பதைப் புரிந்து கொண்டேன். மனிதாபிமானமும், மனிதர்களை மதிக்கும் குணமும், மிக, மிக வித்தியாசமாக சிந்திக்கும் திறமும், வெளிப்படையாக பேசும் துணிவும் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.கடந்த வாரத்தில் ஒரு நாள் என்னை சந்தித்தவர், 'என்ன வயசானாலும், ஆம்பளைங்க ஜொள்ளு விடுவாங்களா மணி...' எனக் கேட்டார்.'திக்'கென்றது எனக்கு... 'ஏ ஜோக் ஏதும் மாமா கிழம் அடித்துத் தொலைத்து விட்டதோ...' என எண்ணியபடியே, 'ஏம்மா அப்படி கேட்கறீங்க... ஏன் இந்த சந்தேகம்?' என்றேன்.கதையைக் கேளுங்க மணி... என் அப்பா, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். போன வாரத்தில் ஒருநாள், பகல் பொழுதில், என் அக்கா வீட்டுக்குப் போயிட்டாங்க அம்மா... நான் வேலைக்குப் போயிட்டேன். அப்போ, 45 வயசு மதிக்கத்தக்க ஒரு பெண்மணி என் வீட்டுக்கு வந்திருக்கிறார்.எங்கப்பா என்ன விஷயம் என்று விசாரித்துள்ளார். அந்தப் பெண்மணி, தன் மகள் பெயர் எஸ்தர் என்றும், வட மாநிலத்தில் வசிப்பதாகவும், தன் மகளை கேன்சர் நோய் தாக்கியதால், சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறி, சிகிச்சைக்காக வங்கியில் பெற்ற கடன் தொகை செலவாகி விட்டது எனக் கூறி, தனக்கு பசி எடுப்பதாகவும் கூறி இருக்கிறார்...உடனே, 500 ரூபாயை எடுத்து நீட்டிய என் தகப்பனார், சாப்பிட்டு விட்டுப் போகச் சொல்லி இருக்கிறார்... சாப்பிட மறுத்த பெண்மணி, டீ குடித்து விட்டுச் சென்றுள்ளார்.பின் என் தகப்பனார், அடையாறு மருத்துவமனைக்கு போன் போட்டு விசாரித்து இருக்கிறார்... எஸ்தர் என்ற பெயரில், ஒரு நோயாளி கூட சிகிச்சை பெறவில்லை எனத் தெரிய வந்துள்ளது.இதற்கிடையே இன்னொரு இடைச் செருகல்... நாங்க குடியிருக்கும் பகுதியில், என் தோழி ஒருத்தி இருக்கிறாள்; அவளும் கிறிஸ்தவப் பெண். இதே பெண், அவளிடமும் இதே போல கதை சொல்லி, பணம் பறிக்க முயன்றுள்ளாள். உஷாரான என் தோழி, மருத்துவமனைக்கு போன் போட்டு, உண்மை நிலையைத் தெரிந்து, ஏமாற்றுப் பேர்வழியை போலீசில் பிடித்துக் கொடுக்க முயன்ற போது, சாமர்த்தியமாக தோழியிடமிருந்து தப்பியுள்ளாள் - அவளது திட்டத்தை எப்படியோ உணர்ந்து கொண்டு.இது நடந்து ரெண்டாவது நாளில், என் அப்பா ஏமாற்றப்பட்டு இருக்கிறார். முன்கூட்டியே அவரிடம் இந்த விஷயத்தை சொல்லாமல் போனது தவறாகி விட்டது. கிறிஸ்தவர்களாகப் பார்த்து ஏமாற்ற ஆரம்பித்துள்ளாள் என்பதை உணர்ந்து கொண்டேன்.மாலையில் நானும், அம்மாவும் வீடு திரும்பிய பிறகு, தான் ஏமாந்த கதையை சோகமாகச் சொன்னார் தகப்பனார். உடனே நான், 'செலவுக்கு நாங்க அஞ்சு ரூபா கேட்டா தர மாட்டீங்க... இப்போ நீங்க விட்ட ஜொள்ளுக்காக, 500 ரூபா இழந்துட்டீங்க...' என, இடித்துக் காட்டினேன்... அதனால் தான், 'எந்த வயதிலும் ஆண்கள் ஜொள்ளு கொட்டுவரா?' என்ற கேள்வியை உங்களிடம் கேட்டேன் என்றார்.அப்பெண்ணின் அப்பா செய்த உதவி மனிதாபிமான அடிப்படையில் தான் என்றும், 'ஜொள்' அல்ல என்றும் விளக்கி அனுப்பி வைத்தேன்.***அன்று மதிய சாப்பாட்டிற்குப் பின், வேலையை ஆரம்பிக்கும் முன், ஆபிசில் ஆஜரானார் குப்பண்ணா... அவரது வாயைக் கிளறினால், சுவையாக விஷயம் ஏதாவது கிடைக்கும்.'என்ன... போஜனம் ஆச்சா?' என, அவரது பாஷையில் கேட்டு வைத்தேன்.'உபஜரணையைப் பாத்தா எதுக்கோ அடி போடற மாதிரி தெரியறதே...' என்றார்.'புரிஞ்சிட்டீங்கல்ல... திராவிட கதை ஏதேனும் எடுத்து விடுங்களேன்...' என்றேன்.'காமராஜர் கால கதை ஒண்ணு சொல்றேன் கேளு...' என்றவரின் ¬முகத்தை பார்த்தபடியே நின்றேன்...தமிழ்நாடு காங் கிரஸ் தலைமைப் பதவியிலிருந்து ராஜினாமா செய்த தினம், காமராஜர் மீது பல குற்றச்சாட்டு களை சுமத்தி, நிருபர் கள் கூட்டத்தில் பேசி, அறிக்கை விட் டார் சி.சுப்ர மணியம். இந்திராவைப் பதவியிலிருந்து விரட்டி விட்டு, சவானைப் பிரதமராக ஆக்குவதாக காம ராஜர் ஆசை காட்டி னார்... என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளைக் காமராஜர் மீது, சாட்டியிருந்தார் சுப்ரமணியம் .இதற்கு காமராஜின் பதிலை அறிந்து, செய்தி வெளியிட நிருபர்கள் ஆசைப்பட்டனர். காமராஜரை அணுகினர் சில நிருபர்கள். 'சுப்ரமணியம் என்ன சொல்லி இருக்கிறார் என்பதை ¬முழுமையாகப் படித்து பார்த்து, பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்று தோன்றினால் சொல்கிறேன்; சாயங்காலம் பாருங்கள்!' என்று சொன்னார் காமராஜர்.அதே போல அன்று மாலை நிருபர்கள், காமராஜர் வீட்டு வரவேற்பு அறையில் கூடினர். 'வாங்க... வாங்க' என்று சிரித்துக் கொண்டே வந்து அமர்ந்து கொண்டார் காமராஜர்.பேச்சு துவங்குவதற்கு முன்பே, துடிப்புள்ள இளம் நிருபர் ஒருவர் நேரடியாகவே காமராஜரிடம் விஷயத்தைக் கேட்டார். அவருக்கு தமிழ் சரளமாகப் பேச வராது... 'மிஸ்டர் காமராஜ்... வாட் ஈஸ் யுவர் ரிப்ளை டு தி சார்ஜஸ்?' என்று ஆரம்பித்தார்.கடும் கோபம் வந்தது காமராஜருக்கு. 'இவரு யாருன்னேன்... நீ எந்த பிரஸ் (பத்திரிகை) அப்பா?' என்று பாய்ந்தார். 'என்னை, குற்றவாளிக் கூண்டிலே நிறுத்தி வச்சுக் கேக்கறது போல கேக்கறாரே?' என்று கோபாவேசத்தோடு கேட்டார்; ஆனால், அந்த இளம் நிருபரோ அசரவில்லை. 'நோ, நோ, ஐ யாம் நாட் அக்யூசிங் யூ... உங்களை நான் குற்றம் சாட்டவில்லை. சுப்ரமணியத்தின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன என்று தான் கேட்கிறேன்!' என்று பதில் சொன்னார்.உடனே காமராஜர், 'நிருபர்கள் கேள்வி கேட்பதற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. சுப்ரமணியத்திற்குப் பதில் சொல்லப் போகிறேன்; அறிக்கை விடப் போகிறேன் என்று நானா கூப்பிட்டேன்?' என்று பதில் சூடாக கேட்டார்.உடனிருந்த மூத்த நிருபர்கள் நிலைமையைச் சமாளிக்கவும், 'கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயங்களை, பகிரங்கமாக விவாதிக்க நான் விரும்பவில்லை. சொல்ல வேண்டிய இடத்தில் பதிலை சொல்லிக் கொள்கிறேன்!' என்று தன் நிலையை விளக்கினார் காமராஜர்.அதேபோல காங்கிரஸ் பிளவுக்குப் பிறகு, ஆணித்தரமாகப் பொது மேடைகளில் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார். குற்றம் சாட்டியவரோ வாயடைத்துப் போனார் என்று கூறியவர், 'அது இறந்த காலம்...' என்று முடித்தார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !