அந்துமணி பா.கே.ப.,
பா-கேஅன்று, அலுவலகத்தில், தேநீர் இடைவேளையின்போது, லென்ஸ் மாமா, 'ரிலாக்ஸ்' ஆக அமர்ந்தபடி, பக்கத்து டேபிளில், அந்த வார, 'வாரமலர்' இதழுக்கான, சினிமா மேட்டர்களை எழுதிக் கொண்டிருந்த, சினிமா பொன்னையாவை சீண்டிக் கொண்டிருந்தார்...'ஓய் பொன்ஸ்... 'கொரோனா' பயத்தில், சினிமா படப்பிடிப்புகள் சரிவர நடைபெறவில்லை. நடிகர் - நடிகையரும், 'ஜிம்' மற்றும் பண்ணை வீடு என, ஒதுங்கியுள்ளனர். நீர் என்னத்தை மாஞ்சு மாஞ்சு எழுதறியோ...' என்று கூறியபடி, அவரிடமிருந்த ஒரு தாளை பிடுங்கி, படிக்க ஆரம்பித்தார்.அப்போது, பொன்னையாவுக்காக டீ எடுத்து வந்த என்னிடம், 'மணி... இத படிச்சுப் பாரேன். உனக்கு இந்த வாரம், நல்ல மேட்டர் கிடைச்சிருக்கு...' என்று கூறி, அந்த தாளை என்னிடம் நீட்டினார்.வாங்கி படித்தேன். அதில் இலை மறைவு காய் மறைவாக இருந்த தகவல் இது தான்:'சங்க கட்டடத்தை கட்டி முடித்து, அதில் தான் என் திருமணம் நடைபெறும்...' என்று, சபதம் எடுத்திருந்தார், சண்டக்கோழி நடிகர். ஆனால், சங்க தேர்தல் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், கட்டட வேலைகளும் முடிந்தபாடில்லை. இதனால், திருமணத்திற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்த சண்டக்கோழி, மூன்று முடிச்சு போட காலம் கடத்தி வருகிறார். இந்நிலையில், பெண் வீட்டார், 'எப்போது திருமணத்தை வச்சிக்கலாம்...' என்று கேட்டு, நடிகரை நச்சரிக்கின்றனர். 'நீதிமன்ற பிரச்னை, எனக்கு சாதகமாகத்தான் வரும். அதனால், சங்க கட்டடத்தை கட்டி முடித்து, அதில் தான் என் திருமணம் நடக்கும். என்ன ஆனாலும் என் சபதத்தை நிறைவேற்றாமல் விடமாட்டேன்...' என்று, 'சவுண்ட்' விட்டு வருகிறார்.சண்டக்கோழியின் இந்த பிடிவாதத்தால், நிச்சயதார்த்த புகைப் படங்களை இணையத்தில் இருந்து நீக்கி விட்ட பெண் வீட்டார், அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.ராஜமாதாவாக, 'கெத்து' காட்டிய நடிகை, தான் நடிக்கும் படங்களின், 'பார்ட்டி'கள் மட்டுமின்றி, அபிமானிகள் நடிக்கும் படங்களின், 'பார்ட்டி'களுக்கு செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். முக்கியமாக, சோமபான, 'பார்ட்டி'களில் பங்கேற்க செல்லும் அம்மணி, சக நடிகர் - நடிகையருடன் போட்டிப் போட்டு, கோதாவில் குதிக்கிறார்.'பார்ட்டி' முடியும்போது, நிற்கவே முடியாமல் கீழே படுத்து விடுகிறார். இதனால், சக நடிகர் - நடிகையர் தான், கைதாங்கலாக துாக்கி, வீட்டில் கொண்டு சேர்க்கின்றனர். அந்த அளவுக்கு பக்கா சரக்கு, 'பார்ட்டி'யாகி விட்டார், மேற்படி நடிகை.இந்த நடிகை தான், ஊரடங்கின்போது, புதுச்சேரியில் இருந்து, சரக்கு பாட்டில்களை, காரில் கடத்தி வந்து மாட்டிக்கொண்டவர். ஆக் ஷன் கிங் நடிகரின் வாரிசு நடித்த படங்கள், எதுவுமே ஓடாததால், இயக்குனர்கள், அவரை ஓரங்கட்டி விட்டனர். ஆனால், மகளை எப்படியாவது மெகா நடிகையாக்கி பார்த்து விடவேண்டும் என்று துடிக்கும், ஆக் ஷன் கிங், சமீபத்தில், மகளை, படு கவர்ச்சியாக உடையணிய வைத்து, தானே அந்த, 'போட்டோ செஷனை' நடத்தி, நெருக்கமான இயக்குனர்களுக்கு அனுப்பி வருகிறார்.அதோடு நில்லாமல், மகளின் உடல் அழகை, அவர்களிடத்தில் மானாவாரியாக வர்ணித்திருக்கிறார், நடிகர். அதைக் கேட்டு, 'இவர் என்ன, நடிகையின் அப்பாவா, இல்லை மேனேஜரா...' என்று, ஆக் ஷன் கிங்கை கண்டபடி கலாய்க்கின்றனர்.சினிமா பார்க்கும் பழக்கம் எனக்கு அதிகமில்லாததால், இங்குள்ள மூன்று மேட்டர்களில் ஒன்றில் குறிப்பிடும் நடிகரை மட்டும் கண்டுபிடித்து விட்டேன். மற்ற இருவர் யார் என்று மாமாவிடம் கேட்க, 'நீயே கண்டுபிடி...' என்று கூறி விட்டார்.லென்ஸ் மாமா செய்த அலம்பலில், பொன்னையா அங்கிருந்து நழுவி விட்டார். உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்; எனக்கும் ரகசியமாக எழுதுங்கள்.பசீனியர்களுக்காக, எழுத்தாளர் சுஜாதா எழுதியது...மே மாதம், 3ம் தேதி, எனக்கு, 70 வயது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.மெரினாவில் நடக்கும்போது, எதிர்ப்படுபவர்கள் பெரும்பாலும் என்னை விட சின்ன வயசுக்காரர்களாக தெரிகின்றனர்.ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னை விட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.'யு ஆர் எ ரைட்டர்... எனக்கு, எத்தனை வயசு சொல்லுங்க பார்க்கலாம்...' என்று, கண் சிமிட்டலுடன் கேட்டார்.நான் யோசித்து, 'கட்டை விரலால் மூக்கை தொடுங்கோ...' என்றேன்.'எதுக்குப்பா...''தொடுங்களேன்...'சற்று வியப்புடன் தொட்டார்.'மத்த விரல்களை றெக்கை மாதிரி அசையுங்கோ...' என்றேன்.'இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன...' என்று சொன்னபடி, விரல்களை அசைத்தார்.'ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு, ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ... பாத்து... பாத்து...' என்றேன்.'இது என்னப்பா ட்ரிக்கு...' என்று, அப்படியே செய்தார்.'உங்களுக்கு, இந்த மே, 12 வந்தா, 81 வயசு...' என்றேன்.அசந்து போய், 'கை குடு... எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே...''ஒரு ட்ரிக்கும் இல்லை சார்... நேத்திக்கு தான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயது, பிறந்தநாள் எல்லாம் சொன்னீங்க, மறந்துட்டீங்க...' என்றேன்.தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன.ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது.பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை.ஆந்தைக்கு, ஆங்கிலத்தில் என்ன என்று, சட்டென நினைவு வருவதில்லை.இம்மாதிரி, 'நியூரான்கள்' களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது, மூளையில் வேறு பேட்டை போலும்.'ஹிந்து'வின், 'ஆபிச்சுவரி' பார்க்கையில், இறந்தவர் என்னை விட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன்.சின்னவராக இருந்தால், 'பரவாயில்லை... நாம தப்பிச்சோம்...' என்றும், பெரியவராக இருந்தால், கழித்துப் பார்த்து, 'பரவாயில்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு...' என்றும் எண்ணுவேன்.எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் ஆண்டுக்கணக்கில் நினைத்துப் பார்ப்பதில்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது, வாரக் கணக்கில், நாள் கணக்கில், அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.ஆரம்பத்தில், இளைஞனாக இருந்தபோது, விமானம் ஓட்டவும், கிடார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன்.நாளடைவில், இந்த இச்சைகள் படிப்படியாக திருடப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, 70 வயதில், காலை எழுந்தவுடன், சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன்.வாழ்க்கையே இவ்வகையில், படிப் படியான சமரசங்களால் ஆனது.இன்றைய தினத்தில், என் டாப்10 கவலைகள் அல்லது தேவைகள் என்றால்...முதலிடத்தில் உடல் நலம், மன நலம் மற்றவருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது.தெரிந்தோ, தெரியாமலோ, யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன.என்றும் உங்கள், சுஜாதா.- வயதாகிக் கொண்டே போகும் நபர்கள், இதைப் படித்தால் சரி!- ஜோ.ஜெயக்குமார், சிவகங்கையிலிருந்து எழுதிய கடிதத்தில் படித்தது!