உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

அன்று ஒரு தொலைபேசி அழைப்பு — அழைத்தவர் ஒரு டாக்டர்! குரல் பதட்டமாக இருந்தது; சொல்ல விரும்பிய விஷயத்தை அவரால் கோர்வையாகச் சொல்ல முடியவில்லை!ஐந்து நிமிடங்களுக்கு ஏதேதோ கூறினார்; ஒன்றும் புரியவில்லை... பேசி முடிக்கட்டும் என, நானும் காத்திருந்தேன். ஒரு கட்டத்தில் வார்த்தைகள் வெளிவராமல் திக்க ஆரம்பித்ததும், 'டாக்டர்... உங்க, 'பேசிக் ப்ராப்ளம்' என்ன என்பதை நாலு வரியில் சுருக்கமாகக் கூற முடியுமா?' எனக் கேட்டேன்.'சொல்றேன் சார்... என்னையும், எங்கம்மாவையும், 'ஸ்லோ பாய்சன்' கொடுத்து, கொல்லப் பார்க்கிறாரு எங்கப்பா...' எனச் சொல்லி நிறுத்தினார்.திகைப்படைந்தேன்!மருத்துவம் படித்த மகனையும், ஆருயிர் மனைவியையும், ஒரு மனிதர் மெதுவாகக் கொல்லும் விஷம் வைத்து சாகடிக்க நினைத்தால், அதன் பின்னணி என்னவாக இருக்கும்?— வேறு பெண்மணியின் தொடர்பு இருக்கிறதா?— இந்தப் பெண்மணி, அவருக்கு சின்ன வீடா?— மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிக்க திட்டமா?போனில் பேசியவரே விபரம் சொல்லட்டும் என்ற எண்ணத்தில், 'ம்... சொல்லுங்க... என்ன நடக்கிறது?' எனக் கேட்டேன்.சொல்ல ஆரம்பித்தார்: நாங்க குடியிருக்கும் வீட்டின் ஒரு போர்ஷனில் என் தந்தை குடியிருக்கிறார். ரெண்டு போர்ஷனுக்கும் தனித்தனி, 'வாட்டர் டேங்குகள்' உண்டு. வேலையாள் ஒருவர் மூலமா, தண்ணி தொட்டியிலே விஷம் கலக்கிறதா எனக்கு சந்தேகம் வருதுங்க...விஷம் கலந்த தண்ணீருல சமையல் செய்யறதாலயும், அதையே குடிக்கிறதாலயும் மூச்சுத் திணறல் போன்றவையும், வேறு சில தொந்தரவுகளும் ஏற்பட்டு விட்டதுங்க... இதனாலேயே என் தாயாருக்கு பல் எல்லாம் கூட எடுக்க வேண்டியதாப் போச்சு... என்றவரை இடைமறித்து, 'கேக்கறேன்னு தப்பா நினைக்காதீங்க... உங்கப்பாவுக்கு வேறு பெண் தொடர்பு ஏதும் இருக்கா?' எனக் கேட்டேன்.தொடர்ந்தார்: இதுல என்னங்க இருக்கு தப்பா எடுத்துக்கிறதுக்கு... உறுதிபட தெரியலேன்னாலும், வேறு பெண் தொடர்பு இருக்கிறதாகக் கேள்விப் படறோம்... எங்கப்பா பெரிய கல்வி நிறுவனம் ஒன்றுல பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். சமூகத்திலே பெரிய அந்தஸ்து பெற்றவர்; பெரிய மனிதர்களின் தொடர்பு எல்லாம் அதிகம்... யாரிடமாவது என் தந்தையை பற்றி இப்படிச் சொன்னால் நம்பவே மாட்டார்கள்.தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றுடன் தொடர்பு கொண்டு, என் தந்தையின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிக்க வேண்டினேன். தஞ்சையை ஆண்ட மன்னர்களின் பரம்பரைப் பெயரைக் கொண்ட அந்த துப்பறியும் நிறுவன தலைவர், ஐந்து லட்ச ரூபாய் கேட்டார்.அவ்வளவு முடியாது என்று முதல் தவணையாக, ஐம்பதாயிரம் ரூபாயும், இரண்டாவது தவணையாக எழுபதாயிரம் ரூபாயும் கொடுத்தோம்.சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் போர்வையில், என் தந்தையிடம் மிரட்டி விசாரித்து ஏதோ எழுதி வாங்கி உள்ளனர். அவரிடமும் பணம் கறந்து விட்டதாகத் தெரிகிறது. எங்களிடம் மூன்றாவது தவணையாகப் பணம் கேட்டனர். 'இல்லை...' என்றபோது, 'சமூகத்தில் எனக்குள்ள செல்வாக்கை வைத்து உங்களை மூட்டைப் பூச்சியை நசுக்குவது போல் நசுக்கி விடுவேன்!' என பயம் காட்டவே, என் தாயார், ஐம்பதாயிரம் மதிப்புள்ள தன் வைரக் கம்மலையும், வீட்டுப் பத்திரத்தையும் கொடுத்துள்ளார்.சிறு நெருப்புக்கு பயந்து கொள்ளிக் கட்டையில் விழுந்த கதையாகி விட்டது எங்களது சோகம்!இது மட்டுமில்லே, அந்த துப்பறியும் நிறுவனத் தலைவர், 'அஞ்சாறு எம்.டி., ஸ்டூடன்ட்ஸ்களை கூட்டி வா... ஆளுக்கு, ஐம்பதாயிரம் வசூல் பண்ணிக் கொடு... கொஸ்டின் பேப்பரை அவுட் பண்ணித் தருகிறேன்...' என்றெல்லாம் சொன்னார். எனக்கு இதிலெல்லாம் ஒப்புதல் இல்லாததால் மறுத்து விட்டேன்!இந்த சமூகத்தை, மனிதக் கூட்டத்தைக் கண்டே எனக்கு பயம் ஏற்படுகிறது சார். யார் நல்லவர், யார் கெட்டவர்ன்னே தெரியலே சார்... இந்த சமூகத்தில் எப்படி வாழப் போறேன்னு நெனச்சாலே பயமா இருக்கு சார்... நீங்க தான், 'ஹெல்ப்' பண்ணணும்... எனக் அழாக்குறையாகக் கேட்டார்!'டாக்டர்... உங்களுடைய, 'பிரியாரிட்டி'களை வரிசைப்படுத்தி பார்த்தா, முதலிலே உங்க மற்றும் உங்க தாயார் உயிரைக் காப்பாத்திக்கிறது தான் முக்கியம்... மற்றபடி சொத்து, துப்பறியும் தலைவர்ட்ட இழந்த பணம், வைரக் கம்மல், வீட்டுப் பத்திரம் போன்றவை எல்லாம் அடுத்தபடியாகத் தான் வருது!'அதனால, வேறு ஒரு வீட்டுக்கு உடனே குடி பெயருங்கள்... உங்க தாயாரையும் அங்கே கூட்டிப் போய் விடுங்கள்! அதன் பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்...' என ஆலோசனை கூறினேன்.— ஆசிரியப் பணியிலிருந்த ஒருவர், ஏன் குரூரமாக சிந்திக்க வேண்டும்?— மருத்துவம் படித்த ஒருவர், ஏன் சமூகத்தை கண்டு அஞ்ச வேண்டும்?— துப்பறிகிறேன் பேர்வழி என்று பகல் கொள்ளையடிக்கும் ரவுடிகளை, போலீசார் ஏன் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்?இந்த எல்லா, 'டும்?'களுக்கும் விடை கண்டுபிடித்து, பின்னர் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!***அன்று அலுவலகம் வந்த நடுத்தெரு நாராயணன் சார் கையில், 'சிறைச்சாலை சிந்தனைகள்' என்ற கட்டுரைத் தொடரின் பவுண்ட் வால்யூம் இருந்தது.எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில், எம்.ஆர்.ராதாவுக்கு சிறை தண்டனை கிடைத்தது. சிறையில் சிந்தித்தவைகளை வார இதழ் ஒன்றில் கட்டுரைத் தொடராக எழுதினாராம் ராதா.'படித்து விட்டுத் தருகிறேன்...' என, வாங்கிக் கொண்டேன்.திராவிட இயக்கத்தினர், வசூல் கலையை தமிழ் மக்களிடம் எவ்வாறு புகுத்தினர் என அழகாகச் சொல்லியுள்ளார். இதோ: அரசியல் கட்சி மாநாட்டில், நாடகம் போட்டு, டிக்கெட் வசூல் பண்ணும் கலையை முதன் முதலில் தமிழகத்தில் புகுத்தியவர் அண்ணாதுரை தான்!திருச்சி மாநாட்டில் என் நாடகக் குழு, நாடகம் நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.'நாடகம் நடத்துறது பற்றி எனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை... என்னைப் பொறுத்தவரை, நான் இலவசமா நடிக்கத் தயார்! என்னைப் போல் என் கம்பெனி ஆட்களும் இலவசமா நடிக்கணுன்னு எப்படிச் சொல்ல முடியும்?' எனக் கேட்டேன்.'நீங்க இலவசமா நடிக்கணும்ன்னு சொல்லலே... ஆனா, காசைப் பொறுத்தவரை, ஈ.வெ.ரா., எப்படின்னு உங்களுக்கே தெரியும். அதனாலே, நாடகம் நடத்த குறைந்த பட்சம் எவ்வளவு தேவைன்னு சொன்னா, ஈ.வெ.ரா.,கிட்டே பேசி, வேண்டிய ஏற்பாட்டைச் செய்யறேன்...' என்று சொன்னார் அண்ணாதுரை.'சாதாரணமா ஒரு நாடகம் போட, 1,000 ரூபாய் வாங்கறேன்; நீங்க, ஐநூறு ரூபாய் வாங்கித் தர முடியுமா?' எனக் கேட்டேன்; 'வாங்கித் தர்றேன்!' என்று கூறினார்!அதன்படி திருச்சி மாநாட்டில் முதன் முறையாக நாடகம் நடந்தது.அண்ணாதுரை சொன்னபடி, ஈ.வெ.ரா., கிட்டே இருந்து, ஐநூறு ரூபாய் வாங்கித் தர முடியலே... ஈ.வெ.ரா., முன்னூறு ரூபாயைக் கொடுத்து, 'எல்லாம் போதும்... போ....' என்று சொல்லி விட்டார்; அண்ணாதுரையால் அப்படிச் சொல்ல முடியவில்லை.கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, மாநாட்டுக்கு வந்திருந்த தன் நண்பர்களிடமெல்லாம் தலைக்குக் கொஞ்சமாக வாங்கி, இருநூறு ரூபா சேர்த்து, முன்னூறை, ஐநூறாக்கி எங்கிட்டே கொடுத்தார்...— நூறுக்கும், இருநூறுக்கும் கூட அன்றெல்லாம் கையேந்தி உள்ளனர்; இப்போது, வசூலை நினைத்துப் பாருங்கள்!***நண்பர் ஒருவர் என்னிடம், 'மணி... சுள்...சுள் என்று அடிக்கடி எனக்கு கோபம் வந்து விடுகிறது... அதை அடக்க ஒரு வழி சொல்லேன்...' எனக் கேட்டார்.'குறுகிய கால வழி, நீண்ட கால வழி என, பல வழிகள் உள்ளன; உங்களுக்கு எந்த வழி வேணும்?' எனக் கேட்டேன்.'இது அவசர உலகமப்பா... நீண்ட கால வழியெல்லாம் வேண்டாம்; சட்டு, புட்டுன்னு கோபம் போக ஒரு வழி சொல்லு...' என்று கோபப்பட்டார்.'சரி... சொல்கிறேன்! நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால், உட்கார்ந்து விடுங்கள்!''உக்காந்திருக்கும் போது கோபம் வந்தால்?' நண்பர் கேட்டார்.'படுத்துக் கொள்ளுங்கள்!''அப்போதும் கோபம் வந்தால்?''கண்ணை மூடிக் கொள்ளுங்கள்!''கண்ணை மூடிய பின்னும் கோபம் வந்தா?''தூங்கிவிட வேண்டியது தான்!' என்றேன்.என்னை எரித்து விடுவது போல் பார்த்த நண்பர், 'முயற்சித்து பார்க்கிறேன்!' என்றபடி விடைபெற்றார்.— என்ன அன்பர்களே... நீங்களும், 'டிரை' செய்து பார்க்கலாமே! ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !