அந்துமணி பா.கே.ப.,
பா - கேநடுத்தெரு நாராயணன், மூட்டு வலி காரணமாக கொஞ்ச நாளாக ஆபீசுக்கு வராமல், வீட்டிலிருந்தபடியே, 'திண்ணை' மேட்டர் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். நேரில் சென்று விசாரிக்கலாம் என்று, அவர் வீட்டுக்கு போனேன். அவரின் பேர பிள்ளைகள், எதையோ எழுதி, சிரித்து விளையாடிக் கொண்டிருந்தனர். 'என்ன செய்கிறீர்கள்...' என்றேன்.'பேலின்ட்ரோம் விளையாடறோம் மாமா...' என்றனர்.'பேலின்ட்ரோமா அப்படின்னா என்ன...' என்று, விழித்தேன்.எந்த ஒரு வார்த்தையையும், வலமிருந்து இடமாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ எப்படி வாசித்தாலும், எழுத்துக்கள் மாறாமல் வார்த்தைகள் ஒன்று போல் அமைவதற்கு ஆங்கிலத்தில், 'பேலின்ட்ரோம்' என்று கூறுவராம்.தமிழில், 'பேலின்ட்ரோம்' வார்த்தைகள் சிலவற்றை கூற சொன்னேன். 'மளமள'வென்று ஒப்பித்தனர்:விகடகவி, மாவடு போடுவமா, துவளுவது, தாளாதா, வா தாத்தா வா, மாலா போலாமா, தேரு வருதே, மேகமே, வாடவா, தாத்தா, கலைக, வினவி, தந்த, மாறுமா, தேயுதே, மேள தாளமே, மாடு ஓடுமா, கலக, மோரு போருமோ, மாடமா, மாதமா, மானமா, மாயமா, கற்க, மாமா, காக்கா, சிவா வாசி.இதுபோல் வேறு வார்த்தைகள் உங்களுக்கு தெரிந்தால், எனக்கு எழுதி அனுப்புங்களேன்.பநம்மூர் தெனாலிராமன், பீர்பால் போன்று, துருக்கியில் முல்லா; நகைச்சுவையும், புத்திக்கூர்மையும் கொண்டவர்.வேலை பளுவுக்கு இடையே கொஞ்சம், 'ரிலாக்ஸ்' செய்ய, அலுவலக நுாலகத்திலிருந்து, 'முல்லா கதைகள்' என்ற புத்தகத்தை எடுத்து, படிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு கதை:ஒருமுறை வெளியூருக்கு, குதிரையின் மீது பயணம் செய்தார், முல்லா. காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து பயணம் செய்ததால், முல்லாவிற்கு களைப்பு அதிகமாகி விட்டது. குதிரையும் நடப்பதற்கே சிரமப்பட்டது; அதன் வாயில் நுரை தள்ளியது.எனவே, இரவு, எங்காவது தங்கி இளைப்பாறி, மறுநாள் காலையில் பயணத்தை தொடர முடிவு செய்தார், முல்லா. வழி நெடுகிலும் சத்திரம் ஏதாவது கண்ணில் படுகிறதா என்று தேடியவாறு வந்தார். இறுதியில், ஒரு பெரிய சத்திரம் தென்பட்டது. அங்கு, ஒரு பணக்காரரும், அவரது உறவினர்களும் தங்கியிருந்தனர். அங்கு சென்றார், முல்லா.பணக்காரருக்கும், அவருடன் வந்தவர்களுக்கும் அளவுக்கதிகமாக உபசாரம் செய்து கொண்டிருந்தான், சத்திரத்தின் சொந்தக்காரன்.'ஈட்டி எட்டியவரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்...' என்ற பழமொழி, அங்கு உண்மையாகவே அரங்கேறுவதை பார்த்துப் பெருமூச்சு விட்டார், முல்லா.சாதாரணமாக, ஏழை போல காட்சியளித்த முல்லாவை, சத்திரத்தின் சொந்தக்காரனும், வேலை ஆட்களும் கண்டு கொள்ளவே இல்லை. முல்லாவிடம் மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டனர்.முல்லாவுக்கு அறை எதுவும் தராமல், சத்திரத்தின் வெளித் திண்ணையில் படுத்துக் கொள்ளும்படி சொல்லி விட்டான், சத்திரத்து சொந்தக்காரன். முல்லாவுக்கு கடுமையான பசி. 'உண்பதற்கு ஏதாவது கிடைக்குமா?' என்று கேட்டார்.முகத்தை சுளித்தபடி, வேண்டா வெறுப்புடன் காலையில் சமைத்த பலகாரங்களை, அவரிடம் கொடுத்தான், சத்திரத்து சொந்தக்காரன்.பசிக்கு இதுவாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில், அதை விழுங்கி வைத்தார், முல்லா. சாப்பிடும்போது அவருக்கு விக்கல் வந்தது. சத்திரக்காரனிடம் தண்ணீர் கேட்டார். அவர் கூறியதை காதில் வாங்காதவன் போல போய் விட்டான்.அதற்கு பின்னரும் பலமுறை, அவனிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார், முல்லா. அவன் கொடுக்காமல் தட்டிக் கழித்து விட்டான்.நள்ளிரவு, 12:00 மணி இருக்கும். முல்லாவுக்கு தொண்டை உலர்ந்து, தாகம் வாட்டி எடுத்தது. தண்ணீர் குடிக்காவிட்டால் மயக்கம் வருவது போல ஆயிற்று. துாக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார்.சத்திரத்தின் உள்ளே சென்று, சிறிது தண்ணீர் குடித்து வர முடிவு செய்தார். தட்டுத் தடுமாறியபடியே வெளித் திண்ணையில் இருந்து, இருட்டில் துழாவியபடியே உள்ளே சென்று, சமையல்கட்டை அடைந்தார்.கதவைத் தட்டி, 'ஐயா சத்திரக்காரரே... தாகத்தால் தொண்டை வறண்டு விட்டது. மயக்கம் வரும்போல இருக்கிறது. கருணை காட்டுங்கள்...' என்று, பலமுறை கெஞ்சிக் கேட்டார். ஊஹும்... ஒரு பலனும் ஏற்படவில்லை.அவர் பேசியதை எல்லாம் சத்திரக்காரனும், அவனது வேலையாட்களும் கேட்டும், மனம் இல்லாத காரணத்தால், அயர்ந்து துாங்குவதைப் போல நடித்தனர். உண்மையாக துாங்குபவர்களை எழுப்ப முடியும். ஆனால், துாங்குவதைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியுமா... இதை உணர்ந்த முல்லா, ஏதாவது தந்திரம் செய்து தண்ணீர் வரவழைக்க முடிவு செய்தார். வாசல் திண்ணைக்கு வந்தார். சிறிது நேரம் துாங்குவதைப் போல படுத்திருந்தார். பின், திடீரென்று உரத்தக் குரலில், 'ஐயோ நெருப்பு... நெருப்பு; தண்ணீர் எடுத்து வாருங்கள்...' என்று கத்தினார்.சத்திரக்காரனும், உள்ளே படுத்திருந்தவர்களும் அவரது அலறலைக் கேட்டு, ஆளுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன், வெளியே ஓடி வந்தனர். அவர்களது பரபரப்பு, முல்லாவுக்கு சிரிப்பை வரவழைத்தது. சிரிப்பை அடக்கி, ஒருவன் கையிலிருந்த தண்ணீர் குடத்தை வாங்கி, தாகம் தீரும் வரை குடித்தார்.'பதற வேண்டாம். நெருப்பு சத்திரத்தில் ஏற்படவில்லை. தாகத்தாலும், நாவறட்சியாலும் தொண்டை தீப்பற்றி எரிந்தது. இப்போது தண்ணீர் குடித்ததும் அணைந்து விட்டது. நீங்கள் இனிமேல் நிம்மதியாக போய் உறங்குங்கள்...' என்றார்.அவரது அறிவுக் கூர்மையையும், நகைச்சுவை உணர்வையும் கண்டு, தன் செயலுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்டான், சத்திரக்காரன். முல்லா பார்ப்பதற்கு ஏழை; ஆனால், அறிவு மிகுந்தவர் என்பதை, சத்திரத்தில் தங்கியிருந்த பணக்காரர் அறிந்தார்.எனவே, அவரை சத்திரத்தின் உள்ளே அழைத்துச் சென்று, தன் அறையிலேயே தங்க வைத்தார். தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். நன்கு உபசரித்து, மறுநாள் காலையில் அனுப்பி வைத்தார்.அப்புத்தகத்தில் மேலும் பல நகைச்சுவை கதைகளை படித்து, சிரித்து மகிழ்ந்து, அடுத்த வேலையைப் பார்க்க போனேன்.