அந்துமணி பா.கே.ப.
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தோம். ஆண்டாளைப் பற்றியும், அவரது பாசுரங்களைப் பற்றியும் பேச்சு வந்தது.அப்போது குப்பண்ணா சொன்னார்: மதுரையை ராணி மங்கம்மா ஆட்சி செய்து வந்த போது, மதுரையிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில், 'ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகி விட்டது...' என்று தெரிந்த பிறகு தான், ராணி, தன் சாப்பாட்டுத் தட்டிலேயே கை வைப்பார் தெரியுமா என்றார்.உடனே, நண்பர்கள், '40 கி.மீ., தூரத்திலிருந்து செய்தி கொண்டு வந்துதான், ஒவ்வொரு வேளையும் ராணி மங்கம்மா சாப்பிட வேண்டும் என்றால், அது நடைமுறையில் சாத்தியம் இல்லாததாயிற்றே?' என்று கேட்டனர்.உடனே பேச்சு, செய்தித் தொடர்புக்கு மாறியது. அப்போது, ஒரு நண்பர் செய்தித் தொடர்பு என்பது, ஐந்து வகைப்படும் என்றார். ஒலி, ஒளி, புகை, நெருப்பு மற்றும் சமிக்ஞை என்பது அந்த ஐந்து வகை; ஒளிக்கு உதாரணமாக கலங்கரை விளக்கம்!'சரி, அப்படியானால் ராணி மங்கம்மாவுக்கு ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து சிக்னல் எப்படிப் போயிருக்கும்?' என்ற கேள்வி மீண்டும் எழுந்தது. பலரும் பலவிதமான பதில்களைக் கூறினர்.பாலு என்ற பாஸ்கர் ஐ.ஏ.எஸ்., 'புறாவை அனுப்பியிருக்கலாம்...' என்ற யூகத்தைக் கூறினார்.ஆனால், அதுவும் நேரம் எடுக்கக் கூடிய ஒரு வழிமுறை என்பதால், அந்த யூகமும் அடிபட்டுப் போயிற்று.பகல் என்பதால் வெளிச்சம் மூலமாகவும் தகவல் சொல்வது சாத்தியமில்லை.வெளிச்சம் பற்றிய பேச்சு வந்த போது, 'கிட்டத்தட்ட நெருங்கி விட்டோம்!' என்றார் குப்பண்ணா.'அப்படியானால், ஒலி மூலமாகத்தான் தகவல் தரப்பட்டிருக்கும்...' என்றனர் குப்பண்ணாவிடம் நண்பர்கள்.'கரெக்ட்; எந்த ஒலியின் மூலமாக?' என்று கேட்டார் குப்பண்ணா.'தண்டோரா...' என்றார் பாலு, சற்றும் தயங்காமல்!ஆனால், உடனே அதுவும் தள்ளுபடியாயிற்று. தண்டோராவின் மூலம் எப்படி, 40 கி.மீ., தூரத்துக்கு செய்தி சொல்வது?அப்போது, குப்பண்ணா சொன்னார்: காண்டாமணி மூலமாகவே அந்தச் செய்தி - அதாவது, ஆண்டாளுக்கு நைவேத்தியம் ஆன விஷயம் - ராணிக்கு சொல்லப்பட்டது...'குறிப்பிட்ட தூர இடைவெளியில், பல காண்டாமணிகள், 40 கி.மீ., தூரத்துக்கும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு காண்டாமணியின் ஓசை, குறிப்பிட்ட தூரம் வரை கேட்கும். முதல் மணியோசை கேட்டவுடன் அடுத்த மணி அடிக்கத் தொடங்கும். இப்படியாக, சில நொடிகளிலேயே நைவேத்தியம் ஆன விஷயம், மதுரைக்கு வந்து கொண்டிருந்ததாம்...'பேச்சு இந்த இடத்துக்கு வந்த போது, நாங்கள் சென்று கொண்டிருந்த வண்டி, வாழப்பாடிக்கு வந்து சேர்ந்திருந்தது. அங்கு, பஸ் நிலையத்திற்கு எதிரே இருந்த, வழக்கமாக சாப்பிடும் ஓட்டலில் காலைச் சிற்றுண்டியை முடித்தோம். கொத்துமல்லிக் கீரை போட்ட முறுகல் தோசை. தோசை போட்ட மாஸ்டரைப் பாராட்டி விட்டு வெளியே வந்த போது நண்பர் சொன்னார்:'நல்ல தோசைதான்; ஆனால், காபி தான் பானகம்; நான் அதைக் குடிக்கவேயில்லை...'விஷயம் என்னவென்றால் காபி, டீ மட்டும் அந்த ஓட்டலில் போடுவதில்லை; பக்கத்து டீக்கடையிலிருந்து தான் வரும்! பேச்சு ராணி மங்கம்மா பற்றி மீண்டும் தொடர்ந்தது. அதாவது, மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி கி.பி., மூன்றாம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியதாம்; அந்த மன்னர்களின் பெயர் விவரம் தெரியவில்லை. ஆனால், ஆறாவது நூற்றாண்டிலிருந்து அந்த விவரம் நமக்குக் கிடைக்கிறது. முதல் பாண்டிய மன்னனின் பெயர்: குலசேகர பாண்டியன்.பிறகு, 1311ல் முகலாய மன்னனான அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக் காபூர் மதுரையைக் கைப்பற்றினான்.ஆனால், முகலாயர் ஆட்சி மதுரையில் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1371ல் நாயக்கர்கள் மதுரையின் மீது படையெடுத்து வந்து, முகலாயர்களை விரட்டி அடித்தனர். அதிலிருந்து தான் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது.நாயக்க மன்னர்களில் பிரபலமானவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையை ஆண்ட காலம்: 1623 முதல் 1659 வரை. அவருக்குப் பிறகு வந்தவர் சொக்கநாத நாயக்கர். இவரது படைத் தளபதியாக இருந்தவர், லிங்கம நாயக்கர். இவரது மகளே மங்கம்மாள்.மங்கம்மாளுக்கும், சொக்கநாத நாயக்கருக்கும் திருமணம் நடந்தது. பிறகு, 1682ல் சொக்கநாதர் இறக்கும் போது, அந்தக் கால மரபுப்படி தன் கணவருடன் உடன்கட்டை ஏற மறுத்து விட்டார் மங்கம்மாள். பிறகு, மொகலாயர் ஆட்சி மீண்டும் தலை தூக்கி விடாமல் இருப்பதற்காக, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார் மங்கம்மா. இதுதான் மங்கம்மா, ராணி மங்கம்மாவாக மாறிய கதை.இப்படியாக குப்பண்ணா கதையை முடித்த போது, நீண்டதொரு கொட்டாவி விட்ட பாலு, 'நான் ஐ.ஏ.எஸ்.,க்கு படித்த போது கூட யாரும் இவ்வளவு புரியும்படி, 'கோச்' பண்ணதில்லை!' என முடித்தார்.***தன் கதையை, ஒரு கடிதமாக எழுதியிருக்கிறார் வாசகி ஒருவர். அக்கடிதம் இதோ: என் பெயர் கீதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) நான்கு லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்து, திருமணம் செய்து கொடுத்தனர் என் பெற்றோர். கணவர், அமெரிக்காவில் ஒரு ஆய்வு மாணவர். இங்கே வந்த முதல் நாளிலிருந்தே பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. எதற்கெடுத்தாலும் சந்தேகப்படும் கணவர். அதனால், என்னை எங்கேயும் போக விடாமல் வீட்டிலேயே அடைத்து வைத்து விடுவார். நான் எம்.சி.ஏ., படித்த பெண்; ஆனாலும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அதையும் தடை செய்து விட்டார் கணவர். தினம், தினம் அடி... உதை... இப்படியே, இரண்டு ஆண்டுகள் சென்றன.இதற்கிடையில் நவீனுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது!) - என் கணவரின் பெயர் தான் - எலும்புருக்கி நோய். ஆமாம்... அமெரிக்காவில் டி.பி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் நவீன். அவருடன் படிக்கும் மாணவர்கள் அவருக்கு எல்லா உதவிகளும் செய்தனர். அவர்கள் முன்னிலையில் கூட அவர் என்னை அசிங்கமாகவும், அடிமையைப் போலவும் நடத்தினார். ஒருநாள் அவர்கள் முன், அவர் என்னை அறைந்து, என் கழுத்தை நெறிக்கவும் முற்பட்டார். (இவ்வளவு ரகளையும் எதற்குத் தெரியுமா? நான் அவருடைய நண்பர்களிடம் சற்று சிரித்துப் பேசி விட்டேன்; அவ்வளவுதான்!) அவர் நண்பர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, அதற்கு மேல் எங்களைப் பார்க்க வருவதை நிறுத்திக் கொண்டனர்.தயவு செய்து நம்புங்கள்... ஒருநாள் நள்ளிரவு என்னை அவர் வீட்டிலிருந்து அடித்து துரத்தி விட்டார். கையில் ஒரு பைசா இல்லை. என் மொபைல் போனையும் வாங்கிக் கொண்டார்.எப்படியோ என் உயிரைப் பணயம் வைத்து, அவருடன் படிக்கும் மாணவர்களிடம் போய் சேர்ந்தேன். ஒரு பிச்சைக்காரியைப் போல் என் மாற்று உடைகளுக்குக் கூட கஷ்டப்பட்டேன். அந்த மாணவர்கள் தான் எனக்கு இந்தியா திரும்ப பயணச்சீட்டுக்காக பணம் வசூலித்துக் கொடுத்தனர்.இப்போது இந்தியா திரும்பி, நவீனிடமிருந்து விலக வேண்டும் என்று விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கிறேன்; ஆனால், என் பெற்றோர் இதற்கு எதிர்ப்பாக உள்ளனர். நவீனும் தன்னை மன்னிக்கும்படியும், இனிமேல், நல்ல விதமாக வைத்துக் கொள்வதாகவும் கூறி என் பெற்றோருக்கும், எனக்கும் கடிதம் எழுதியுள்ளார்.நான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூறுவீர்களா அந்துமணி?மேலும் ஒன்று... வெளிநாட்டுக்குத் தங்கள் பெண்ணை அனுப்பும் பெற்றோருக்கு என் அனுபவத்தை வைத்து நான் கூறும் அறிவுரை:1. இன்டர்நேஷனல் கிரெடிட் கார்டை உங்கள் மகளுக்கு திருமணப் பரிசாக கொடுத்து வையுங்கள்.2. உங்கள் மகளின் பாஸ்போர்ட்டின் நகல் ஒன்றை நீங்கள் வைத்திருங்கள். என் கணவர் நவீன், என் படிப்புச் சான்றிதழைக் கூட கிழித்துப் போட்டு விட்டார். நல்லவேளையாக என் பாஸ்போர்ட்டை என் கைப்பையிலேயே வைத்திருந்தேன். முன்கூட்டியே இதுபற்றி எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்ததால், அப்படிச் செய்தேன். நல்லதாகப் போயிற்று.3. உங்கள் பெண்ணின் முகவரியையும், அவருடைய சோஷியல் செக்யூரிட்டி எண்ணையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பல வெளிநாடுகளில் இந்த எண் தருவர்.'அமெரிக்க மாப்பிள்ளை... அமெரிக்க மாப்பிள்ளை...' என அலையும் பெண்ணைப் பெற்றவர்கள், ஒரு முறைக்கு, நூறு முறை விசாரித்து, அடுத்த அடி எடுத்து வையுங்களேன்!***