உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கேஅலுவலகத்துக்கு வந்த, திண்ணை நாராயணன், நேராக என் கேபினுக்குள் வந்து, 'மணி... என் மாப்பிள்ளை, என்னை சிங்கப்பூருக்கு கூட்டிட்டு போறதா சொல்லியிருக்கிறார். வெளிநாட்டுக்கு போறதுன்னா, பாஸ்போர்ட், விசா அது இதுன்னு என்னென்னமோ இருக்காமே... அதுபற்றி எனக்கு ஒண்ணும் தெரியலை...' என்றார்.'ஓய் நாணா... வெளிநாட்டுக்கு போறதுன்னா சும்மாவா... பஸ்லே ஏறி, டிக்கெட் எடுத்து, துாங்கி வழிஞ்சுகிட்டு, உங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாண்டில் இறங்குறதுன்னு நினைச்சுட்டீரா... பாஸ்போர்ட், விசா முதல், விமானம் ஏறும் வரை ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கு. பழைய விஷயங்களையே மேய்ஞ்சிட்டு இருந்தா எப்படி?' என்று கலாய்த்தார், லென்ஸ் மாமா.இதைக் கேட்டதும், நாராயணன் முகம் கலவரமானது.இதை கவனித்த, மூத்த செய்தியாளர், 'அவரை ஏன் பயமுறுத்துறீங்க. இப்பத்தான் முதல் முறையா வெளிநாட்டுக்கு போகப் போறாரு. விஷயம் தெரிந்த, நாமதானே வழி காட்டணும். அதை விட்டு...' என்று மாமாவை கண்டித்து, பாஸ்போர்ட், விசா உருவான வரலாறை கூற ஆரம்பித்தார்:'இந்த உலகமே எனக்குச் சொந்தம்...' என, சொல்றது எல்லாம், விசாலமான மனசைக் காட்டுதுங்கிறது உண்மை தான். இருந்தாலும், நடைமுறையில அதில் கொஞ்சம் சிக்கல் உண்டு.இப்ப, ஒரு நாட்டுலேர்ந்து இன்னொரு நாட்டுக்கு போகணும். நாம நினைச்சவுடனே யாருடைய அனுமதியும் இல்லாம போயிட்டு வந்துட முடியாது.நம் நாடு, 'நீ போகலாம்'ன்னு சொல்லணும். இன்னொரு நாடு, 'நீ வரலாம்'ன்னு சொல்லணும். அப்புறம் தான் பயணத்தை ஆரம்பிக்க முடியும்.நம் நாடு, 'நீ போகலாம்'ன்னு சொல்லுது பாருங்க, அதுதான், பாஸ்போர்ட். தமிழில் - கடவுச்சீட்டு; அந்த நாடு, 'நீ வரலாம்'ன்னு சொல்லுது பாருங்க, அதுதான், விசா.அந்த காலத்துலே, ஒரு தேசத்து ராஜாவின் துாதர்கள் அல்லது அதிகாரிகள், இன்னொரு தேசத்துக்கு போறாங்கன்னு வச்சுக்கங்க, அந்த சமயத்துல அரசரிடமிருந்து நன்னடத்தை சான்றிதழ் அல்லது முத்திரை மோதிரம் வாங்கிக்கிட்டு போறது வழக்கம்.'பேபரஸ்' எனும், புல் இதழ்கள் மேல இந்தச் சான்றிதழ்கள் எழுதப்படும். அதுல, ராஜ முத்திரை இடப்படும். அதை எடுத்துக்கிட்டு போகணும்.அப்பல்லாம் வெளிநாடு போறதுங்கிறது, விதியோட விளையாடறது மாதிரி. எப்போ போய் சேருவாங்க, திரும்பி, பத்திரமா வருவாங்களான்னு ஒண்ணும் தெரியாது.இப்பல்லாம், காலையில போயிட்டு, சாயந்தரம் திரும்பி வந்துடறாங்க.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, ரோமாபுரி மன்னன் அகஸ்டஸ் சீசர். அவன் கொடுத்த பாஸ்போர்ட்ல உள்ள வாசகம் என்ன தெரியுமா?'இதைக் கொண்டு வருகிற பயணிக்கு, பூமியிலோ, கடலிலோ எவனாவது துன்பம் செய்விக்க முடிவு செய்தால், அப்படிச் செய்யும் முன், சீசரை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு தனக்கு பலம் இருக்கிறதா என்பதை யோசிப்பானாக...' என்று எழுதப்பட்டிருந்ததாம்.அதுக்கப்புறம், 1780ல தான் முதன் முதலில், அமெரிக்க பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாம். ஜூலை 7, 1780, தேதியிட்ட அதில் காணப்படுகிற வாசகம், 'சட்ட சம்பந்தமான காரியங்களுக்காக, வெளிநாடுகளுக்கு விஜயம் செய்ய விரும்பும், அமெரிக்க, ஐக்கிய நாடுகளின் பிரஜை...'ன்னு எழுதியிருக்கு.அப்போ அரசு செயலராக இருந்த, தாமஸ் பிக்கரிங், அதில் கையெழுத்து போட்டிருக்கார்.ஆதி காலத்து அமெரிக்க பாஸ்போர்ட்களில், அதை எடுத்துக்கிட்டு வர்ற ஆசாமி பற்றிய வர்ணனைகளும் இருக்குமாம்.கடந்த, 1914ல் தான், முதல் முறையா புகைப்படம் இணைக்கிற பழக்கம் உண்டாச்சு.நல்ல பாஸ்போர்ட் ஆரம்பமான கதை இது.கள்ள பாஸ்போர்ட் ஆரம்பமான கதையும் ஒன்று இருக்கிறது. அது, இரண்டாவது உலக மகா யுத்தம் நடப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, செயல்பட்டு வந்துள்ளது.ஜெர்மனியில் ஹிட்லர், அதிகாரத்துக்கு வந்ததும், யூதர்களை, ஜெர்மனியிலிருந்து மட்டுமில்ல, ஐரோப்பாவிலிருந்தே விரட்டினார்.அவங்க பாஸ்போர்ட்களை எல்லாம் பறிமுதல் பண்ணி, சித்ரவதைக் கூடங்களுக்கு கொண்டு போனாங்க. தப்பிச்சவங்க, ஐரோப்பாவுல, நாடு நாடா அலைஞ்சாங்க.இப்படி அலையறவங்களிடம் பாஸ்போர்ட் இருந்தால், பயமில்லாமல் வாழலாம் என்பதற்காக, கள்ள பாஸ்போர்ட் வியாபாரம் ஆரம்பமாச்சு.இறந்து போன அல்லது காணாமல் போன, ஜெர்மன், ஆஸ்திரிய, பிரெஞ்ச் படை வீரர்களின் பாஸ்போர்ட்களை திருடிக்கிட்டு வந்து, கள்ளச் சந்தையில அதிக விலைக்கு விற்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.ஏராளமான அகதிகள், இறந்து போன படை வீரர்கள் பெயரிலேயே வாழ்ந்தாங்களாம். அவங்களை மாதிரியே முடி வெட்டிக்கிட்டாங்களாம்.படை வீரர்களை கடத்திக் கொண்டு போய், கொன்று புதைச்சுட்டு, அவர்களுடைய பாஸ்போர்ட்களை கொண்டு வர்ற கும்பல்கள் கூட இருந்ததாம்.இந்த காலத்துலேயும் பொய்யான பேர்ல சுத்தறவங்க, உலகம் பூரா உண்டு. மாட்டிக்கிறப்பத்தான் உண்மை வெளியில வருது.- என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.'பாஸ்போர்ட் பின்னணியிலே இவ்வளவு விஷயம் இருக்கிறதா? மணி... நீதான் அடிக்கடி வெளிநாட்டுக்கு போய் வர்றியே... எனக்கும் கொஞ்சம் ஏற்பாடு செய்து கொடேன்...' என்று, நாராயணன் கேட்க, 'சரி...' என்பதற்கு அடையாளமாக, தலையை அசைத்தேன்.சரத்சந்திரர், ஒரு பக்கம் சீரியசான நாவல்கள், சிறுகதைகள் எழுதியிருந்தாலும், அவருடைய இன்னொரு பக்கம் வேற விதம்.நண்பர்கள்கிட்ட பேசும்போதும் சரி, அவங்களுக்கு கடிதங்கள் எழுதும்போதும் சரி, கேலி, நகைச்சுவை உணர்வும் அதிகமாக இருக்கும்.ஒருசமயம், கல்கத்தாவுக்கு வந்திருந்தார், காந்திஜி. தேச பக்தர்கள் பலர் அவரிடம் பேசிக்கிட்டிருந்தாங்க. அப்போது, சரத்சந்திரர் மற்றும் கிரண்சங்கர்ராய் என்பவரும் அங்கே இருந்தனர்.'காந்திஜியுடன் பழகிய முதல் வங்காளி நான் தான். போயர் யுத்த காலத்துல, இவர், லண்டனுக்கு வந்திருந்தபோது, என்கிட்ட தான் வங்காள மொழி கத்துக்கிட்டார்...' என்றார், கிரண்சங்கர்.உடனே, காந்திஜியிடம், 'இவர், உங்களுக்கு வங்காள மொழி கத்துக் கொடுத்தது உண்மைதானா?' எனக் கேட்டார், சரத் சந்திரர்.'ஆமாம்...' என்றார், காந்திஜி.'அதனால தான், உங்களால வங்காள மொழி கத்துக்க முடியலே...' என்றார், சரத்சந்திரர்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !