அந்துமணி பா.கே.ப.,
பா - கே கஸ்டம்ஸ் ஆபீசரான நண்பரின் இல்ல விழா ஒன்றுக்கு அழைப்பு வர, நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம்.அமோகமாக பணம் புரளும் டிபார்ட்மென்டில் இருக்கிறார்; மாளிகை போன்ற வீட்டில் வசிப்பார் என்று நினைத்தால், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது தள பிளாட்டில் இருந்தார். அரசு ஊழியர்களில், நேர்மையானவர்களும், லஞ்சம் வாங்காதவர்களும் கூட இருக்கத்தான் செய்கின்றனர் என, எண்ணியபடி படி ஏறினோம்.இந்த ஆபீசருக்கு நிறைய நண்பர்கள் போலிருக்கு. கஸ்டம்ஸ் தவிர்த்து, வருமான வரி துறையை சேர்ந்த பலரும் விழாவுக்கு வந்திருந்தனர். வந்திருந்தவர்களில், வருமான வரி துறையை சேர்ந்த ஒருவர், லென்ஸ் மாமாவுக்கு அறிமுகமானவர்.அவரை பார்த்ததும், தனக்கு, 'கம்பெனி' கிடைத்த சந்தோஷத்தில், என்னை, 'அம்போ' என, விட்டுட்டு, அவர் அருகில் சென்றார், மாமா.என்னை வரவேற்று, அமர செய்து ஜூஸ் கொடுத்த கஸ்டம்ஸ் நண்பர், வேறு யாரோ வர, 'இதோ வந்து விடுகிறேன்...' என்று கூறி சென்றார்.நான் சுற்றிலும் இருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தேன். அங்கிருந்த அனைவரது பேச்சிலும், சமீபத்தில், கைதாகி, இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட அமைச்சர் ஒருவரை பற்றி சகட்டுமேனிக்கு விமர்சித்துக் கொண்டிருந்தனர்.'சிறையில் ஆயுள் கைதியாக வைத்தால் தான் சரிபடும்...' என்று ஆக்ரோஷமாக கூறிக் கொண்டிருந்தனர்.என் அருகில் அமர்ந்திருந்த, ஒரு பெரியவர், என்னிடம், 'எதுக்கு இவங்க தொண்டை தண்ணி வற்ற கத்திக் கொண்டிருக்கின்றனர்... சிறையிலும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் வசதியுடன் தான் இருக்கிறார்...' என்று கூறி, என்னைப் பற்றி விசாரித்தார்.'அடடே... நீதானா அது. கஸ்டம்ஸ் நண்பரின் பெயரை கூறி, அவர், என் மருமகன் தான். உன்னை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். இப்பதான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவங்க ஜெயில் அது இதுன்னு சொல்றாங்களே... அந்த ஜெயில் எப்படி வந்தது தெரியுமா?' என்றார்.'தெரியாது' என்பதற்கு அடையாளமாக தலை அசைக்க, சொல்ல ஆரம்பித்தார்:கடந்த, 1403ல், இங்கிலாந்து நாட்டுல தான் முதன் முதலா சிறைச்சாலை ஏற்பட்டுது. அது அரசாங்கத்தின் நேரடி நிர்வாகத்துல இருந்தது. அதுக்கு முன், சங்க காலத்துலயே, தமிழகத்தில் சிறைகள் இருந்திருக்கு. அதுபற்றி பல குறிப்புகள் கிடைத்துள்ளன.கணைக்கால் இரும்பொறை என்ற சேர அரசர், ஒருமுறை போரில் தோற்று, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது, தண்ணீர் கேட்டு, அதை கொடுக்காததால், அவமானம் தாங்காமல் ஒரு பாடல் எழுதி வைத்து விட்டு இறந்ததாக குறிப்பு இருக்கு. (புறநானுாறில், 74வது பாடலாக இது உள்ளது.)'குணவாயில் கோட்டத்து சிறை வைத்தான்'னு சொல்வாங்க. அந்த வாயிற் கோட்டம் கும்பகோணமா இருக்கணும் அல்லது திருச்சி மலைக்கோட்டையா இருக்கணும்ன்னு சொல்றாங்க. சிறையில், குற்றவாளிகளை ரொம்பவும் கஷ்டப்படுத்துவாங்க. அதனால, அக்காலத்துல சிறைக்கு போறதுன்னாலே மிகவும் பயப்படுவாங்க. இந்த பயம் இருந்தாத்தான், மனுஷன் தப்பு பண்ண மாட்டான்னு நினைச்சாங்க. ஆனால், காலப் போக்குல, குற்றம் குறையறதா தெரியல. அதனால், பெரிய குற்றத்துக்கு, மரண தண்டனைன்னு கொண்டு வந்தாங்க.கடந்த, 1550ல், இங்கிலாந்துலயும், இன்னும் சில ஐரோப்பிய நாடுகள்லேயும் சிறைச் சாலைகளை நிறைய நிறுவினாங்க. அந்த அளவுக்கு குற்றங்கள் பெருகின. அதுக்கெல்லாம் என்ன பேரு தெரியுமா, 'ஒர்க் ஹவுசஸ்' மற்றும் 'ஹவுஸ் ஆப் கரெக் ஷன்!' அதாவது, நான்கு சுவற்றுக்குள் இருந்தபடி வேலை செய்வது, தவறை திருத்திக் கொள்ளும் இடம் என்று குறிப்பிட்டனர்.பிச்சைக்காரங்க, கடன்காரங்க, குடும்பத்தை தவிக்க விட்டுட்டு ஓடினவங்க, சும்மா திரியறவங்க இவங்களையெல்லாம் பிடிச்சு, இங்கே கொண்டு வந்து அடைச்சு வைக்கிறது வழக்கம். பெரிய தப்பு பண்றவங்களுக்கு இது சரியான இடமே இல்ல. அதனால, அவங்களுக்காக அதிக பாதுகாப்போட இருக்கற மாதிரி சிறைகள் கட்டினாங்க. அவங்களுக்கு ஒரு வேலையும் கிடையாது. சரியான சாப்பாடும் கிடையாது. ஆடு, மாடு மாதிரி அடைஞ்சு கிடந்தாங்க.கடந்த, 18ம் நுாற்றாண்டின் பிற்பகுதியில தான், கைதிகள்லாம் நல்ல முறையில நடத்தப்படணும்; சிறைகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கணும்கிற கூக்குரல் எழுந்தது. அப்புறமா காலப்போக்குல பலவிதமான சீர்திருத்தங்கள்லாம் செய்ய ஆரம்பிச்சாங்க.இப்பல்லாம் நிலைமை ரொம்பவும் மாறிப் போச்சு. சிறையில கைதிகள்லாம் சும்மா இருக்க வேண்டியதில்லை. அவங்களுக்கெல்லாம் வேலை கொடுக்கறாங்க. படிக்கலாம், தொழிற் கல்வி கத்துக்கலாம். மருத்துவ வசதி, பொழுதுபோக்கு வசதி எல்லாம் இருக்கு.சிறைச்சாலைகளை இன்னும் சீர்திருத்தணும்ன்னு எவ்வளவோ யோசனையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. எல்லாம் எதுக்காக?சிறைக்கு போறவங்களை, மனிதாபிமான அடிப்படையில சீர்திருத்தணும் என்பதற்கு தான்.ரொம்ப காலத்துக்கு முன்பெல்லாம், குற்றவாளிகளை பிடிச்சு, முதல்ல ஜெயில்ல அடைச்சுடுவாங்க. வழக்கு விசாரணை வர்ற வரைக்கும், அவங்க அங்கேயே தான் இருக்கணும்.விசாரிச்சு தீர்ப்பு வழங்கியாச்சுன்னா, உடனே தண்டனையை நிறை வேற்றிடுவாங்க; தண்டனைன்னா எப்படி? மரண தண்டனை இல்லேன்னா, கசையடி சித்ரவதை, அபராதம் இப்படி ஏதாவது இருக்கும்.- இவ்வாறு அவர் கூறி, முடிக்கவும், 'கச்சேரி'யை முடித்து வந்த லென்ஸ் மாமா, 'வா மணி... சாப்பாடு தயாரா இருக்கு. சாப்பிட்டு போகலாம்...' என்று கூற, அவரிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து கிளம்பினேன்.பநம்மைப் பற்றிய பிறரின் மதிப்பீடு சரியாக இருக்குமா?அத்தனை சரியாக இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொரு விதம்.* அறிமுகமில்லாதவர்களின் பார்வையில், நாம் எல்லாருமே சாதாரண மனிதர்கள்* பொறாமைக்காரரின் பார்வையில், நாமெல்லாம் அகந்தையாளர்களாக தெரிவோம்* நம்மைப் புரிந்து கொண்டோரின் பார்வையில், நாமெல்லாம் அற்புதமானவர்கள்* நம்மை நேசிப்போரின் பார்வையில், நாம் தனி சிறப்பானவர்கள்* காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களின் பார்வையில், நாமெல்லாம் கெட்டவர்கள்.ஆக, நம்மைப் பற்றி பிறரின் பார்வை என்ன என்பதை விட, நம் பார்வை என்னவென்பது தான் முக்கியம். மனசாட்சியில் நாம் எப்படித் தெரிகிறோம் என்பது, மிக முக்கியம்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.