அந்துமணி பா.கே.ப.,
பா-கே-பஇந்த வாரம், குட்டிக் குட்டி தகவல்கள் மட்டும்...கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி, அதன் கண்ணாடி லென்ஸ். வாங்குவதற்கு முன், லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். ஒரு கண்ணை மூடிக்கொண்டு, கண்ணாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளை பார்க்கவும். நேராக இல்லாமல் கதவின் முனை கோணலாக தெரிந்தால், வேறு கண்ணாடியை தேர்ந்தெடுக்கவும்.கண்ணதாசன் கூறியது:காரியம் செய்வது என்று துணிந்து விட்டால், யாரையாவது பகைத்துக் கொண்டு தான் தீர வேண்டும். 'பகையே இல்லாதவன்' என்று, ஒருவன் பேர் எடுத்தால் அவன், 'ஒரு காரியமும் செய்யாதவன்' என்று பொருள். காந்திஜிக்கு பகைவர்கள் இருந்தனர்; கடவுளுக்கும் பகைவர்கள் இருந்திருக்கின்றனர்.அக்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார், பீர்பால். அப்போது, திடீரென கேள்வி கேட்டு, பீர்பாலை திணற வைக்க கருதினார், அக்பர்.'வெற்றிலை ஏன் அழுகியது; குதிரை ஏன் இடக்குச் செய்தது; ரொட்டி ஏன் கருகியது? இம்மூன்று கேள்விகளுக்கும், ஒரே வார்த்தையில் பதில் கூறுங்கள்...' என்றார், அக்பர். 'திருப்பாமல்...' என்ற பதிலை உடனே கூறி, அக்பரை திணற வைத்தார், பீர்பால்.'எத்தகைய கேள்வியானாலும் பதில் கூறத் தயங்காதவர் அல்லவா, பீர்பால்...' என புகழ்ந்தார், அக்பர்.எம்.ஆர்.ராதாவை சந்திக்க வேண்டும் என்று சொல்லி, ஆள் அனுப்பினார், காமராஜர்.ராதாவும், காமராஜரை சந்திக்க சென்றார்.தனக்காக, தேர்தல் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டார், காமராஜர்.ராதாவும் அதற்கு ஒப்புக் கொண்டார்.வீட்டுக்கு வந்ததும், 'தேர்தல் செலவுக்காக, 10 ஆயிரம் ரூபாய், காமராஜர் உங்களிடம் கொடுக்கச் சொன்னார்...' என்று, 'செக்'கை நீட்டினார், காமராஜரின் உதவியாளர்.'இதை, அவரிடமே கொடு. காமராஜருக்கு வேலை செய்கிறேனே தவிர, பணத்துக்காக அல்ல. தேர்தல் வேலை செய்வதற்குப் பணம் வாங்கினார் என்ற, கெட்ட பெயர் எனக்கு வேண்டாம்...' என்று கூறி, 'செக்'கை வாங்க மறுத்து விட்டார், ராதா. இள வயதில் சாதித்தவர்கள்...* மாவீரன் சிவாஜி, பீஜப்பூர் சுல்தானுக்கு சொந்தமான கோட்டையை பிடித்தபோது, வயது: 19* ஹென்றிபோர்டு, முதன் முதலில் கார்களை உற்பத்தி செய்தபோது, வயது: 22*ஆங்கிலக் கவிஞன், கீட்ஸ், தம் இமாலயக் கவிதைகளை எல்லாம் எழுதி முடித்தபோது, வயது: 24* உலகப் புகழ்பெற்ற படைப்பான, 'இழந்த சொர்க்கத்தையும், மீண்ட சொர்க்கத்தையும்' ஊனமுற்ற நிலையில், பைரன் எழுதி முடித்தபோது, வயது: 30* நாடுகள் அனைத்தையும் தன் காலடிக்குள் கொண்டு வந்தபோது, அலெக்சாண்டருக்கு வயது: 32* இயற்பியலுக்காக நோபல் பரிசை பெற்றபோது, மேடம் கியூரிக்கு வயது: 36* பாட்டுத் திறத்தால் இவ்வையத்தை பாலித்திடச் செய்த பாட்டுக்கொரு புலவன் பாரதி வாழ்ந்து முடித்தபோது, வயது: 39.ஜூலை 6, 1946ல், போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள கோய்ம்ப்ரா மற்றும் பிகூரியாதாபோஸ் ஆகிய இரண்டு இடங்களிலும், சீதோஷ்ண நிலை திடீரென்று, 37.8 டிகிரி செல்ஷியசிலிருந்து, ஒரேயடியாக, 70 டிகிரி செல்ஷியசுக்கு உயர்ந்தது.இந்த மாற்றம், இரண்டு நிமிடங்களுக்கு மட்டுமே நீடித்தது. இந்த பயங்கர வெயில் தாங்காமல், நுாற்றுக்கணக்கான பறவைகள் செத்து விழுந்தன. அந்த ஊரிலிருந்த மாண்டிகோ நதியும், பல இடங்களில் வற்றிப் போய் விட்டது. 'ப்ளூ டயரி' என்றால் என்ன?எந்த விதமான ஒளிவு, மறைவும் இல்லாமல், நடந்தது நடந்தபடியே எழுதப்பட்ட நாட்குறிப்புக்கு, ஆங்கிலத்தில், 'ப்ளூ டயரி' என்று பெயர். லெனின் நாட்குறிப்பு, 'ப்ளூ டயரி' என்று அழைக்கப்படுகிறது.பூமியை ஒருமுறை சுற்றி வர, சந்திரனுக்கு, 27 நாட்கள் பிடிக்கிறது. தன் அச்சில் தன்னைத் தானே சுற்றிக்கொள்ள அதே நாட்கள் தான் ஆகின்றன. அதனால் தான், சந்திரனின் ஒரே பக்கம் மட்டுமே நமக்குத் தெரிகிறது. மறுபக்கத்தை நம்மால் பார்க்க முடிவதில்லை.'டயமண்ட்' என்றால் என்ன அர்த்தம்!வைரத்தை தேடி அலைந்து, தன் பண்ணையை வேறொருவருக்கு விற்று விட்டு, தற்கொலை செய்து கொண்டார், ஆப்ரிக்க விவசாயி ஒருவர். அவர் விற்ற பண்ணை இடத்தில் தான் புகழ்பெற்ற, கிம்பர் லேண்ட் வைரச் சுரங்கம், தற்போது உள்ளது.ஆஸ்திரேலியாவில், 'ஆர்னகல்' வைரச் சுரங்கம் தான், உல்கில் மிகப்பெரியது. ஒவ்வொரு ஆண்டும், மூன்று கோடி கேரட் வைரம், இங்கே வெட்டி எடுக்கப்படுகிறது.வைரத்தைக் குறிக்கும், 'டயமண்டு' என்ற ஆங்கிலச் சொல், கிரேக்க மொழியிலிருந்து வந்தது. அதற்கு, 'வெல்ல முடியாத' என்று பொருள்.தங்கம், சூரிய வெப்பத்தை தாங்கும் தன்மை உள்ளதால், விண்வெளி கலத்திலும், வான்வெளி வீரர்களின் கவச உடையிலும் உபயோகப்படுத்தப்படுகிறது.கண்ணி வெடி!உலகின் பல பகுதிகளில், 344 வகையான, 10 கோடி கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.பூமிக்கடியில் மொத்தம், 60 லட்சம் கண்ணி வெடிகள், கம்போடியாவில் மட்டும் இன்னும் புதைக்கப்பட்டு உள்ளன.இரண்டாம் உலகப் போரின்போது, புதைக்கப்பட்ட கண்ணி வெடிகள் கூட, இப்போது ஆங்காங்கே தட்டுப்பட்டு, அகற்றப்படுகின்றன.முப்பது நிமிடத்திற்கு ஒருமுறை, கண்ணி வெடி வெடித்து, உலகில் ஒருவர் இறக்கிறார்.சர்வதேச குற்றவாளிகளை பிடிக்க உதவும், பன்னாட்டு போலீசான, 'இண்டர்போல்' என்ற அமைப்பு, 146 நாடுகளில் செயல்படுகிறது.ஜப்பானில், தெருவில் இரண்டு கார்கள் மோதிக் கொண்டாலும், அந்தக் கார்களிலிருந்து ஓட்டுனர்கள் கீழே இறங்கியவுடன், முதலில் ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி விட்டு தான், பிறகு பேச ஆரம்பிப்பர்.உலகிலேயே சாக்லேட் அதிகம் சாப்பிடுபவர்கள், சுவிட்சர்லாந்து மக்கள். ஒரு ஆண்டுக்கு, சராசரியாக, 14 கிலோ சாப்பிடுகின்றனர்.ஆறு!சுகமளிக்கும் ஆறு: பண வரவு, நோயற்ற வாழ்வு, கல்வி, இனிய மனைவி, அன்பான குழந்தைகள் மற்றும் நல்ல நட்பு.தவிர்க்க வேண்டிய ஆறு: கூடுதல் உறக்கம், மயக்கம், பயம், கோபம், சோம்பல் மற்றும் அவநம்பிக்கை.கடைப்பிடிக்க வேண்டிய ஆறு: சத்தியம், தானம், முயற்சி, உழைப்பு, பொறுமை மற்றும் தைரியம்.