அந்துமணி பா.கே.ப.,
பா - கேநண்பர் இல்ல திருமணம். நண்பர், சென்னையில் பிரபலமான புள்ளி என்பதால், வி.ஐ.பி.,களின் வருகை அதிகமாக இருந்தது.லென்ஸ் மாமா, சினிமா பொன்னையாவுடன், நானும் திருமணத்துக்கு சென்றிருந்தேன். வழக்கம் போல், அங்கு வந்திருந்த பெண்களின் கூந்தல் மற்றும் ஆடை அலங்காரத்தை பற்றி, என்னிடம், 'கமென்ட்' அடித்தபடி இருந்தார், லென்ஸ் மாமா.திடீரென மண்டபத்தில் சலசலப்பு. உஷாரானார், லென்ஸ் மாமா. சலசலப்புக்கு காரணம் அறிய, நானும் திரும்பினேன்.மல்லுவுட் மற்றும் கோலிவுட் சினிமாக்களில் வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரபலமான நடிகர் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.பளபளவென்று வெள்ளை நிறத்துடன், தலையில் கொஞ்சமாக வழுக்கை விழுந்திருக்க, சிவந்த உதடு மற்றும் தீட்சண்யமான கரு விழிகளுடன் அழகாகவே இருந்தார். உயரம் தான் சராசரிக்கு சற்று கம்மி. அதை மறைக்க, ஹை - ஹீல் ஷூ அணிந்து, நெஞ்சை நிமிர்த்தியபடி நடந்து வந்தார்.மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து திரும்பியவரை சூழ்ந்து கொண்டது, இளைஞர் பட்டாளம்.'ஒரு வில்லன் நடிகருக்கு இவ்வளவு ரசிகர்களா?' என்று வியந்தேன்.சினிமா பொன்னையாவை பார்த்ததும், அருகில் அழைத்து பேச ஆரம்பித்தார், நடிகர்.எரிச்சலானார், லென்ஸ் மாமா. ஒருமுறை, வில்லன் நடிகரை போட்டோ எடுக்க சென்றபோது, மறுத்து விட்டாராம். அந்த கடுப்பு தான்.'நெப்போலியன் காம்ப்ளக்ஸ் கொண்ட பயலுக்கு வந்த வாழ்வை பாரேன்...' என்றார், மாமா.அது என்ன, நெப்போலியன் காம்ப்ளக்ஸ்? இது பற்றி பின்னர் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்று, அமைதியானேன்.அதற்குள், மாமாவுக்கு அறிமுகமான நடிகை ஒருவர் வர, வாயெல்லாம் பல்லாக, அவர் அருகில் சென்று பேச ஆரம்பித்தார்.நான், நைசாக கழன்று, வி.ஐ.பி., விருந்தினர்களை பார்ப்பதற்கு தோதான, அதே சமயம் சற்று மறைவான பகுதிக்கு சென்று நின்று கொண்டேன்.நிகழ்ச்சி முடிந்து அலுவலகம் திரும்பினோம். விருந்து உண்ட மயக்கத்திலிருந்த மாமாவிடம், 'நெப்போலியன் காம்ப்ளக்ஸ் என்று ஏதோ சொன்னீங்களே... அது என்ன...' என்று விசாரித்தேன்.'அது வேறொண்ணுமில்லை மணி...' என்று கூற ஆரம்பித்தார்:சில மனிதர்களுக்கு, சில நேரங்களில் தாழ்வு, சில நேரங்களில் உயர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் வித்தியாசமான மனநிலை காணப்படும். இத்தகைய மனநிலையை, 'நெப்போலியன் காம்ப்ளக்ஸ்' என்பர்.இவர்களிடம், மற்றவர்களை விட தான் குறைந்தவர்களும் இல்லை, உயர்ந்தவர்களும் இல்லை என்ற மனப்போக்கு காணப்படும். மிகவும் கர்வத்துடன் இருப்பது போல நடித்து, மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதும் உண்டு.பிரான்ஸ் நாட்டின் நெப்போலியன் சக்கரவர்த்தியின் பெயரை சூட்டியதற்கு காரணம் உண்டு. அதாவது, தான் உயரம் குறைவாக இருந்ததை மறைக்க, அதிகாரம், போர் வெற்றிகளின் மூலம் அந்த குறையிலிருந்து, மீண்டார், நெப்போலியன். ஆனால், உண்மையில் தன் காலத்தில் சராசரி உயரம் கொண்டவராக தான் இருந்தார், நெப்போலியன். உலக வரலாற்றில் இரு தலைவர்கள் மட்டுமே, 'நெப்போலியன் காம்ப்ளக்ஸ்' மூலம், தம் தாழ்வு மனப்பான்மையை, உயர்வு மனப்பான்மையாக மாற்றி, வெற்றி கொண்டனர்.ஒருவர் ஹிட்லர், மற்றொருவர் நெப்போலியன். உண்மையில் அவர்கள் திறமையாக மக்களை ஆட்சி செய்தனர். மேலும், தம் அருகில் மெய்காப்பாளர்கள் நிற்காதவாறு பார்த்துக் கொள்வர். பொதுவாக, மெய்காப்பாளர்களின் சராசரி உயரம், 5 அடி 10 அங்குலம் இருக்கும். இந்த காம்ப்ளக்சை, குட்டை மனிதன், 'சின்ட்ரோம்' என்றும் கூறுவர்.இது உண்மையில் நோய் என்றால், சீனா, ஜப்பான் நாட்டினர் இந்தளவுக்கு எவ்வாறு முன்னேறியிருக்க முடியும். ஆகவே, இது வெறும் குறை மட்டுமே.தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, நெப்போலியன் காம்ப்ளக்ஸ் இருந்த பலர், கவுன்சிலிங் மூலமாகவும், நடவடிக்கை மாற்ற சிகிச்சை மூலமாகவும், தாம் சிந்திக்கும் விதத்தை மாற்றி, முன்னேற்றமடைந்தனர். கீழே உள்ள ஆலோசனைகளை கொண்டு, இத்தகைய காம்ப்ளக்ஸ்களை கட்டுப்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர், மனவியல் மருத்துவர்கள்.* நீங்கள் நீங்களாகவே இருந்து, சிந்தனை முறையில் மாற்றங்களை செய்து, விரும்பத்தகாத காம்ப்ளக்ஸ்களை முறியடிக்கவும்* உங்களிடமுள்ள எந்த ஒரு குறையும் நீங்கள் நினைக்கும் அளவுக்கு கெட்டது இல்லை என்பதை உணருங்கள். அதுபோலவே, எந்த நிறையும் நீங்கள் நம்புமளவுக்கு நல்லதல்ல என்பதையும் உணருங்கள்* உங்கள் குறைகளை விட்டு விட்டு, உங்கள் நிறைகளை கணக்கிடுங்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை விட, நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி* சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளுங்கள்* சமுதாயம், உயர்வு மனப்பான்மை கொண்டவர்களிடமிருந்து விலகி இருக்கும் எனவும், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களைப் பார்த்து சிரிக்கும் எனவும், நெப்போலியன் காம்ப்ளக்ஸ் உள்ளவர்களை புறக்கணிக்கும் என்பதையும், நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, நீங்கள் நீங்களாகவே இருந்து, சாதனையாளர்களாக மாறுங்கள். சமுதாயம் உங்களை நிச்சயம் பாராட்டுகளில் மூழ்கச் செய்யும்.- என்று கூறி முடித்தார், மாமா.பசிலரை, ஆளைப் பார்த்தால், 60 வயது மாதிரி தோணும். உண்மையான வயது என்ன என்றால், 40 - 45ன்னு சொல்வர்.சிலரை பார்க்க, 45 வயது மாதிரியே தெரியும். உண்மையில், 65 வயதை தாண்டியிருப்பர்.மனிதனுக்கு இரண்டு வகை வயது உண்டு என்கிறார், ஓஷோ. அதாவது, உடம்புக்கு ஒரு வயது, மனசுக்கு ஒரு வயது.முதல் உலக மகா யுத்தம் நடந்து முடிந்தவுடன், முதல் முறையாக மனிதனின் மூளை வளர்ச்சியை பற்றி, கணக்கெடுப்பு சோதனை நடத்தினர், மன நல மருத்துவர்கள்.அதுவரைக்கும் மனிதனுக்கு இரண்டு வகை வயது உண்டு என, யாரும் சிந்தித்ததே இல்லை.உலக மகா யுத்தம் முடிந்தபின், மனிதனுடைய சராசரி மனதின் வயதை கணக்கிட்டு பார்க்கும்போது, அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில், அது மிக பின்தங்கிய, வளர்ச்சியடையாத நிலையில் இருந்துள்ளது.அவங்க கண்டுபிடித்தபடி, மனதின் சராசரி வயது என்ன தெரியுமா, 14. உடல் ரீதியா ஒருத்தரோட வயது, 70 கூட இருக்கலாம். ஆனா, மனசின் வயது, 14 தான்.இதற்கு நேர்மாறாக அமைந்ததால், அதாவது, ஒருத்தருக்கு உண்மையிலேயே, உடலோட வயது, 14. அவரது மனசின் வயது, 70ன்னு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி அமைந்தால், அவர் விரைவில் ஞானத்தன்மை அடைஞ்சுடுவார் என, அர்த்தம்.நமக்கெல்லாம் உடம்பின் வயது, மனசின் வயது இரண்டும் ஒண்ணா இருந்துட்டா போதும் அதுவே பெரிய விஷயம்.எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது. மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக கண்காட்சி, துபை, ஷார்ஜா, அபுதாபி, மஸ்கட், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஆறு நகரங்களில் நடைபெற்றது. அந்துமணி எழுதிய அனைத்து புத்தகங்களும் இக்கண்காட்சியில் கிடைத்தன. இவ்விழாவுக்கான அழைப்பிதழை, அந்துமணியின் அம்பாசிடரும், மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குனருமான ரவி தமிழ்வாணன் வழங்கியபோது...